அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

 

பெரம்பலூர்,


பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.

பயிற்சி வகுப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற மே மாதம் 16–ந் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மண்டல அலுவலர்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பார்வையிட்டார்.

பயிற்சி வழங்கப்படுவதை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் நந்தகுமார் மண்டல அலுவலர்களிடம் கூறுகையில், உங்களுக்கு எழுகின்ற அனைத்து சந்தேகங்களையும் தயங்காமல் கேட்டு தெளிவுபெற வேண்டும். அலுவலராக இல்லாமல் சாமானிய மனிதனாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை இயக்குவது குறித்த சந்தேகங்களை கேளுங்கள், ஏனெனில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்துதரப்பு மக்களும் பயன்படுத்தப்போகிறார்கள். எனவே, அவர்களின் சந்தேகங்களுக்கு நீங்கள் பதிலளிக்கும் வகையில் உங்கள் கேள்விகள் இருக்க வேண்டும் என்று கூறினார்.

வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்குவது பற்றி...

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தேர்தலில் எந்த விதமான பாரபட்சமின்றி அனைத்து அலுவலர்களும் நேர்மையாக, நடுநிலைமையோடு செயல்படவும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நடமுறைகள் குறித்தும் இப்பயிற்சி வகுப்பில் மண்டல அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

கேள்விகள்–சந்தேகங்கள்

மேலும் இப்பயிற்சி வகுப்பின் முற்பகலில் குன்னம் தொகுதிக்குட்ப்பட்ட 30 மண்டல அலுவலர்களுக்கும், பிற்பகல் பிரிவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட 33 மண்டல அலுவலர்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் இயக்குவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.

அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை இயக்குவது குறித்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பயிற்சி அலுவலரும் சிறப்புத்திட்ட அமலாக்கத்தின் தனித்துணை ஆட்சியருமான சிவப்பிரியா பதில்களை விளக்கமாக எடுத்துக்கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களான பேபி, கள்ளபிரான், தனித்துணை ஆட்சியர் சிவப்பிரியா மற்றும் மண்டல அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-