அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் அருகே பெற்ற குழந்தையை கிணற்றில் வீசிக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

9 மாத கைக்குழந்தை

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பாரதிநகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜூ. இவரது மகன் ராமசாமி. தழுதாழை கவுண்டர் தெருவை சேர்ந்தவர்களான கொளஞ்சி-மீனாட்சி தம்பதி யின் மகள் விஜயலட்சுமி (வயது 21). பிளஸ்-2 வரை படித்த விஜயலட்சுமி மேற்கொண்டு கல்லூரி படிப்பு படிக்க ஆசைப்பட்டார். ஆனால் அவரது பெற்றோர் வற்புறுத்தி விஜயலட்சுமியை ராமசாமிக்கு திருமணம் செய்து வைத்தனர். ராமசாமி திருமணத்திற்கு பிறகு சிலமாதம் விஜயலட்சுமியுடன் குடித்தனம் நடத்திவிட்டு துபாய்க்கு வேலைதேடி சென்று விட்டார். ராமசாமி, விஜயலட்சுமி தம்பதிக்கு மோத் என்ற 9 மாத கைக்குழந்தை இருந்தது.

கிணற்றில் வீசி கொலை

இதையடுத்து விஜயலட்சுமி, தனது பாட்டியிடம் கைக்குழந்தையான மோத்தை விட்டுவிட்டு பெரம்பலூர் கடைவீதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலைபார்த்து வந்தார். மேற்கொண்டு படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் விஜயலட்சுமிக்கு இருந்துவந்தது. மேலும் வேலைக்கும் சென்று விட்டுவந்து, குழந்தை மோத்தை பராமரிப்பதற்கும் கடினமாக இருந்தது. இதனால் விஜயலட்சுமி தனது குழந்தை மோத்தை கடந்த 30.5.2015 அன்று தழுதாழை ஏரிக்கரை அருகே உள்ள சிவப்பிரகாசம் என்பவரது வயலில் உள்ள கிணற்றில் வீசி கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீமாபானு, பெற்ற குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற விஜயலட்சுமிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இதனை தொடர்ந்து போலீசார் விஜயலட்சுமியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-