அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அக்சரா(17). பி.ஏ சைக்காலஜி முதலாமாண்டு மாணவி. சரியாக 13 ஆண்டுகளுக்கு (2003) முன்னால் கேரள மீடியாக்களில் பரபரப்பை கிளப்பினார். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கொட்டியூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி அக்சராவுக்கும், அவரது சகோதரனுக்கும் பள்ளியில் படிக்க அனுமதி கொடுக்க மறுக்கின்றனர் என்பதுதான் அந்தச் செய்தி. காரணம், இருவருமே ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுதான்.

இருப்பினும், 'தன் இரு குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்' என்ற வைராக்கியம் குழந்தைகளின் தாய் ரீமாவுக்கு இருந்தது. பள்ளிகளில் அனுமதி கிடைக்க கடுமையாகப் போராடி வென்றார் தாய் ரீமா. சில தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தன. நன்றாகப் படித்து பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றார் அக்சரா.இதனையடுத்து கண்ணூரில் உள்ள புகழ்பெற்ற விராஸ் கல்லூரியில் பி.ஏ சைக்காலஜி அட்மிஷன் கிடைக்க, மகிழ்ச்சியோடு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தவர், இப்போது கல்லூரி விடுதியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்டுவிட்டார். 13 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட அதே அவமானத்தை தற்போது சந்தித்திருக்கிறார் அக்சரா. இந்த விவகாரம் கேரள மீடியாக்களில் வெளியாகி பெருத்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. தற்போது முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு நிறுவனத்தில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்குச் சென்று வருகிறார்.

இதுபற்றிப் பேசும் அக்சரா, "நான் மனதளவில் ரொம்பவே நொறுங்கிப் போய்விட்டேன். இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஜனவரி 26-ம் தேதி கல்லூரி ஆசிரியர்கள் இரண்டு பேர் என் வீட்டிற்கு வந்துள்ளனர். என் அம்மாவிடம், 'கல்லூரி விடுதியில் இருந்து இரண்டு மாணவிகள் நான் இருக்கும் இடத்தில் தங்க முடியாது' எனச் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டனர். அதனால், அக்சராவை விடுதியில் அனுமதிக்க முடியாது' எனக் கூறியுள்ளனர். இத்தனைக்கும் அந்த ரெண்டு பேரில் ஒருவர் என்னுடன் தங்கியிருந்தார். மற்றொரு மாணவி பக்கத்து அறையில் தங்கியிருந்தார். அந்த இரண்டு பேரின் பெற்றோர்தான் என்னை வெளியேற்ற பிரஷர் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் இருந்து என்னால் கல்லூரிக்குள் தலைகாட்டவே கஷ்டமாக இருக்கிறது. என்னை வெளியேற்றச் சொன்ன மாணவிகளை கல்லூரியில் சந்தித்தபோது, அவர்கள் என்னிடம் நல்லமுறையில்தான் நடந்து கொண்டனர். இரண்டு நாட்கள் அந்த விடுதியில் தங்கியிருந்தேன். அதன்பிறகு அங்கு தங்க முடியாததால், இந்தத் தொண்டு நிறுவனத்திற்கு வந்துவிட்டேன். எனக்கு எனக்கு மற்ற விடுதிகளில் அனுமதி கிடைக்காது எனவும் சொல்லிவிட்டனர்.

என்னுடைய உடல்நிலை எப்படி உள்ளது என்பது எனது கல்லூரி தோழிகளுக்குத் தெரியும் என்பதால் யாரும் என்னிடம் பாரபட்சம் காட்டவில்லை. நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து கல்லூரிக்குச் செல்லவே நான்கு மணி நேரம் ஆகிறது. தினசரி வகுப்புகளை அட்டெண்ட் செய்வதும் மிகக் கடினம். அடுத்த மாதம் இரண்டாவது செமஸ்டருக்கான தேர்வுகள் நடக்க இருக்கிறது. இருக்கும் ஒரே தீர்வு, கல்லூரியில் இருந்து நான் வெளியேறுவதுதான்" என தன்னுடைய வேதனையை மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்டார் அக்சரா.

அக்சராவின் பேட்டி கேரள அரசில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. மாவட்ட கலெக்டர் பாலகிரண் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதனால், அதிர்ந்து போன கல்லூரி முதல்வர் ஜுனித், ' அக்சராவை கல்லூரியை விட்டு விலகுமாறு நாங்கள் யாரும் சொல்லவில்லை. சில மாணவிகளின் பெற்றோர் நிலைமையை தவறாகப் புரிந்து கொண்டனர். அக்சரா எங்கள் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படிப்பைத் தொடரலாம். அதிலும், அவரது தாயாரையும் அக்சராவையும் தத்தெடுத்துக் கொள்ள கல்லூரி நிர்வாகம் தயாராக இருக்கிறது' என விளக்கம் கொடுத்தார்.

'இப்போது மகிழ்ச்சியா?' என அக்சராவிடம் கேட்டபோது, " என் தாயாரை தத்தெடுப்பதை நாங்கள் விரும்பவில்லை. அவரும் அதை விரும்ப மாட்டார். என்னுடைய படிப்பை நான் தொடர வேண்டும். அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தேவையில்லை" எனத் தீர்க்கமாக பதிலளித்தார்.

அக்சராவின் கண்களில் தெரியும் உறுதி, கேரளா அரசை ரொம்பவே அசைத்துவிட்டது. வாழ்த்துக்கள் அக்சரா!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-