அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...  

தேர்தல் அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கே. நந்தகுமார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவர் பேசியது:

சட்டப்பேரவை தேர்தலை சுமூகமாகவும், அமைதியாகவும், நடுநிலையோடும் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாவட்டத்தில் 17 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த காவல் துறையினரின் ஒப்புதலோடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கூடாது.

இத்தகைய இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள விண்ணப்பிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினருக்கு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். மேலும், அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் அலுவலகங்கள் அமைக்க தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து அனுமதி பெற வேண்டும். பள்ளி, கோயில் மற்றும் மருத்துவமனை அருகில் இடங்களை தேர்வு செய்யக்கூடாது.

தங்களது கட்சி சார்ந்த சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பிளக்ஸ் போர்டுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டு, அதற்கான செலவினத் தொகை சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் பெயரில் கணக்கு வைக்கப்படும்.

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக வருவாய்க் கோட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவராக பெரம்பலூர் வட்டாட்சியரும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக குன்னம் வட்டாட்சியரும் செயல்படுவார்கள்.பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தங்களது புகார்களை 18004257031 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாக அல்லது 8903689581 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ச. மீனாட்சி, பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான பேபி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச. மாரிமுத்து மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-