அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தஞ்சை: லோன் மூலம் வாங்கிய டிராக்டருக்கான தவணையை கட்டவில்லை எனக்கூறி விவசாயி ஒருவரை, காவல்துறையினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்த நாடு அருகேயுள்ள சோழகன்குடிக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன். இவர் கடந்த 2011-ம் ஆண்டு கோட்டாக் மகேந்திரா கம்பெனியில் லோன் மூலம் டிராக்டர் வாங்கினார். இதுவரை சரியாக அனைத்து தவணைகளையும் கட்டியிருக்கிறார். நடுவே ஒரு தவணையை மட்டும் கட்ட தவறிவிட்டதாக கூறப்படுகிறது. மீதி 64 ஆயிரம் ரூபாய் பாலன் கட்ட வேண்டி இருந்திருக்கிறது.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி, மகேந்திரா ஃபைனான்ஸ் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர், பாலனிடம் இருந்த டிராக்டரை ஜப்தி செய்ய சென்றிருக்கின்றனர். அதற்கு பாலன், ''இன்னும் 64 ஆயிரம் ரூபாய்தானே கட்ட வேண்டி இருக்கிறது. அதை நான் கட்டி விடுகிறேன். டிராக்டரை ஜப்தி செய்ய வேண்டாம்'' எனக் கூறியிருக்கிறார்.

பாலனின் பேச்சை ஏற்றுக்கொள்ளாத மகேந்திரா ஃபைனான்ஸ் நிர்வாகிகளும், காவல்துறையினரும், பாலனை டிராக்டரில் இருந்து இழுத்து கீழே இழுத்துபோட்டு கடுமையாக தாக்கியிருக்கின்றனர். மேலும், விவசாயி பாலனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கு வைத்தும் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சம்பவம் நடந்த சோழகன்குடிக்காடு கிராமம், தமிழக விவசாயத் துறை அமைச்சர் வைத்திலிங்கத்தின் தொகுதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலன் கடன் வாங்கியதாவது தனியார் வங்கி. கட்டத்தவறியது ஒரே ஒரு தவணை. மொத்த கடன் பாக்கியும் 64 ஆயிரம் ரூபாய்தான்.

ஆனால் இந்த நாட்டு மக்களின் பணத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஏப்பம் விட்டு, வெளிநாட்டிற்கும் தப்பி ஓடிவிட்ட விஜய மல்லையாக்களிடம் இதுபோன்று நடந்துகொள்ளும் துணிச்சல் காவல்துறைக்கு இருக்குமா?

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி, போலீசுக்கு இளைத்தவன் போக்கத்த விவசாயி போல!

-கே.குணசீலன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-