அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

சென்னை: பறக்கும் படையினரின் சோதனையின்போது பறிமுதல் செய்யப்படும் பணத்தை உரிய ஆவணங்களை காட்டி, வியாபாரிகள், பொதுமக்கள் திரும்பக் கோரினால் உடனே திருப்பி அளிக்க வேண்டும். அந்த பணத்தை திருப்பித்தர லஞ்சம் கேட்கும் அதிகாரிகள், விசாரணையின்றி சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வாக்கா ளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ஒரு தொகுதிக்கு 3 வீதம் 234 தொகுதியில் 702 பறக்கும் படை, 702 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1 லட்சமாக்க நடவடிக்கை: தேர்தல் விதியின் காரணமாக பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ரூ.50 ஆயிரம் வரை ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இது, மிக சிறிய தொகையாக உள்ளது, அதிகரிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, ரூ.1 லட்சம் வரை ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்கலாமா என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் கேட்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைக்குள் அனுமதி கிடைத்து விடும். ஏப்ரல் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய பிறகு, மீண்டும் ரூ.50 ஆயிரமாக அது குறைக்கப்படுவதுடன், வாகன சோதனையும் அதிகரிக்கப்படும். தேவைப்பட்டால் இரண்டு சக்கர வாகனங்களும் சோதனை செய்யப்படும்.

பேரம் பேசும் பறக்கும் படை: பறக்கும் படையினர் வாகன சோதனையின்போது, ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாக பணம் இருப்பவர்களிடம் எந்தவித கெடுபிடியும் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும், சில அதிகாரிகள் அவர்களை தொந்தரவு செய்வதாகவும், தேவையில்லாமல் பேசுவதாகவும் புகார் வந்துள்ளது. மேலும் சில அதிகாரிகள், அதிகமாக பணம் எடுத்துச் செல்பவர்களிடம் லஞ்சம் தந்தால் விட்டுவிடுவதாகவும் வணிகர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் உள்ள செல்போன் மூலம் ஆதாரத்துடன் படம் எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது எந்தவித விசாரணையும் இன்றி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார். டெல்லியில் கண்காணிப்பு: வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள 702 பறக்கும் படையினர் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த வாகனங்களில் உள்ள அதிகாரிகள் எந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவலை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் மற்றும் டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இருந்தபடி நாளை முதல் கண்காணிக்க முடியும்.

தமிழகத்தில் 1.10 கோடி பேஸ்புக் கணக்கு
வாக்காளர்களுக்கு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக தற்போது டிவிட்டர் நிறுவனத்துடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோன்று, பேஸ்புக் நிறுவனத்துடனும் விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ள ஒரு கோடியே 10 லட்சம் பேர் பேஸ்புக் அக்கவுன்ட் வைத்துள்ளனர். அவர்கள் பேஸ்புக் பக்கத்தை திறந்தாலே வாக்களிப்பதன் அவசியம், தேர்தல் சம்பந்தப்பட்ட செய்திகள் உள்ளிட்ட அனைத்து தகவலும் தெரிந்து கொள்ள முடியும். இதற்காக பேஸ்புக் நிறுவன தேசிய தலைமை அதிகாரி இன்னும் ஒரு வாரத்தில் சென்னை வருகிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-