அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 திருச்சி: தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ஆன்லைனில் புகார் செய்யவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அளித்துள்ள புகார் எந்த நிலையில் உள்ளது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பது, அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட வேட்பாளர்கள் அதிகளவு வாகனங்களில் செல்வது, விதிமுறைகளை மீறி பேனர்கள் வைப்பது போன்ற புகார்களை தெரிவிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி 9444123456 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலோ, 1952 என்ற தொலைபேசி எண்ணிலோ, சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடமோ புகார் தெரிவிக்கலாம். ஆனால் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. பணப்பட்டுவாடா செய்யப்படும் இடங்களுக்கு தாமதமாக தேர்தல் அதிகாரிகள் செல்கின்றனர் என கடந்த தேர்தல்களின்போது பல்வேறு கட்சிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘ஆன் லைனில்’ புகார் தெரிவிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி election.tn.gov.in என்ற தேர்தல் ஆணைய இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம். இந்த இணையதளத்தில் புகார் எந்த தேதியில், எத்தனை மணிக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்த விவரங்கள் புகார் செய்பவரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். பின்னர் இந்த புகார் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரி செல்லும் பறக்கும்படை வாகனம் புறப்பட்ட நேரம், செல்லும் இடம் சம்பவ இடத்திற்கு சென்றடைந்த நேரம் போன்றவை ஜிபிஎஸ் கருவி மூலம் தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பர். இதனால் புகார்கள் மீது தாமதமின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புகார் செய்வது எப்படி?

ஆன்லைனில் புகார் செய்ய election.tn.gov.in என்ற இணைதளத்துக்கு சென்று complaints பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நமக்கென்று தனியார் login ID, Password தயார் செய்து, புகார் பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு my request என்ற பகுதியை கிளிக் செய்து, புகார் செய்ய வேண்டிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

அதில் பேனர், கட்அவுட், கொடிகள், போஸ்டர், சுவர் விளம்பரம் தொடர்பான புகார்கள், அன்பளிப்பு, மதுபாட்டில்கள் விநியோகம், அன்பளிப்பு வழங்குவது, பணம் கொடுப்பது, போலீசில் கொடுக்கப்பட்டுள்ள புகார்கள், டோக்கன் விநியோகம், அளவுக்கு அதிகமான வாகனங்களில் செல்வது, வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகள், பூத் சிலிப் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இதில் எந்த புகார் என தேர்வு செய்து, அதற்குரிய போட்டோ, வீடியோ ஆதாரங்களை இணைக்க வேண்டும்.

அதன்பின் புகார் செய்யப்படும் இடம் எந்த மாவட்டம், எந்த தொகுதி, எந்த தாலுகா, எந்த இடம், லேண்ட் மார்க் போன்ற விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.இப்படி புகார் செய்தபின், புகார் செய்பவரின் செல்போனுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அனுப்பப்படும். மேலும் இணையதளத்தில் நமக்குரிய login IDல் உள்ள இன்பாக்சிலும் இதுகுறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கும். ஒருவேளை இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், புகார் எந்த நிலையில் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறை நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-