அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் ஷாகித் அப்ரிடி | படம்: ஏ.பி.டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி, தனது நாட்டில்கூட இவ்வளவு அன்பை தான் அனுபவித்தது இல்லை என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் அணியினர் இந்தியா வருவது தள்ளிக்கொண்டே சென்ற நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு பாகிஸ்தான் அணி வீரர்கள் டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆரம்பம் முதலே பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை பெரிதுபடுத்தாத அப்ரிடியும், சோயப் மாலிக்கும் இந்தியாவில் எவ்விதத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என தெரிவித்தனர்.

கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அப்ரிடி, "இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் போது கிடைக்கும் பேரானந்தத்தை நான் வேறு எங்கும் அனுபவித்ததில்லை. என் கிரிக்கெட் தொழிற்பயணத்தின் கடைசி நாட்களில் நான் நின்றுகொண்டிருக்கிறேன். இத்தருணத்தில் நான் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் கிடைக்கப்பெற்ற அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இந்த அளவிளான அன்பை நான் பாகிஸ்தானில்கூட உணர்ந்ததில்லை. பாகிஸ்தானைப் போல் இங்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அதிகம் இருக்கின்றனர். மொத்தத்தில் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதை நான் எப்போதுமே ரசனையுடன் செய்திருக்கிறேன்" என்றார்.

அப்ரிடியின் கருத்துகளை ஆமோதித்த சோயப் மாலிக், "இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக பலமாக இருக்கின்றன. இதற்காக இந்திய அரசாங்கத்துக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மனைவி ஓர் இந்தியப் பெண் (சானியா மிர்சா). அதனால், நான் நிறைய முறை இந்தியா வந்து செல்கிறேன். ஆனால், ஒருபோதும் நான் பாதுகாப்பு குறைபாட்டை உணர்ந்ததில்லை. இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒரே மொழியை பேசுகின்றனர். ஒரே மாதிரியான உணவை புசிக்கின்றனர். பாகிஸ்தானியர்களுக்கும், இந்தியர்களுக்கும் இடையே நான் எவ்வித வித்தியாசத்தையும் உணரவில்லை. இந்தியா வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. என்னை இந்திய மக்களும், ஊடகங்களும் எப்போதுமே அன்புடன் நடத்துகின்றனர். இந்தியா வந்ததில் பெருமிதம் கொள்கிறேன்" என்றார்.

அரசியல் வேண்டாமே..

இந்தியாவில் நடைபெறும் டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளிப்பதில் காலம் தாழ்த்தியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை. நாங்கள் கிரிக்கெட் வீரர்களே அரசியல்வாதிகள் அல்ல. அரசு என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்று நடப்போம்" என அப்ரிடி கூறினார்.

வெற்றி வாய்ப்புகள் குறித்து அவர் கூறும்போது, "சர்வதே கிரிக்கெட் போட்டி என்றாலே அழுத்தங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் வரும் என்பதை உணர்ந்திருக்கிறோம். எனவே, சவாலை சந்திக்க உடலையும், மனதையும் தகுதியுடன் வைத்திருக்கிறோம். அழுத்தங்களை கையாளத் தெரிந்த அணியே நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-