அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 9ம் தேதி மாணவர்கள் சிலர், இந்தியாவுக்கு எதிராகக் கோஷமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சர்ச்சையானது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், “இந்தியாவின் இளைஞர்கள் ‘பாரத் மாதா கி ஜே!’ என்று சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

இந்தப் பிரச்சினையில் ஜேஎன்யு மாணவர்கள் 3 பேர் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாகக் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ பொய்யாக ஜோடிக்கப்பட்டது எனத் தெரியவந்தது. இருந்தாலும், இதுதொடர்பாக தேச விரோத வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்திருக்கும் அந்த மாணவர்கள், இன்னும் தேசத் துரோக வழக்கைச் சந்தித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த புதன்கிழமை மகாரஷ்டிர மாநில சட்டப்பேரவையில் எம்.ஐ.எம். கட்சியின் எம்.எல்.ஏ. வரீஸ் பதான் ‘பாரத் மாதா கி ஜே!’ எனச் சொல்ல மறுத்ததற்காக, சிவசேனா, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் அவரை, சட்டப்பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். இதற்கு, சட்டப்பேரவையில் இருந்த மற்ற கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.இதையடுத்து, ஹைதராபாத்தில், மார்ச் 13ம் தேதி, எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அஸாத்துதீன் ஓவைஸி அளித்த பேட்டியில், ‘அவர், ஏன் பாரத் மாதா கி ஜே என்று சொல்ல மறுத்தார்’ என்று விரிவாகப் பேசினார்.

நான் என்னுடைய கேள்வியை ரொம்ப எளிமையாகத் தொடங்குகிறேன். ‘பாரத் மாதா கி ஜே!’ என்று சொல்லுவதில் என்ன தவறு?

சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களால் பல முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘ஜெய்ஹிந்த்’ என, பல முழக்கங்கள் இருந்தன. அதில், இந்த முழக்கமும் ஒன்று என்பது எனக்குத் தெரியும். அதனால், மற்ற முழக்கங்களைப்போல ‘பாரத் மாதா கி ஜே’! என்று யாராவது சொன்னால் அது, எனக்குப் பிரச்சினை இல்லை என்பதை தெளிவாகக் கூறிவிடுகிறேன்.

‘பாரத் மாதா கி ஜே!’ என்ற முழக்கம், நாட்டுக்கு தெய்வத்தன்மையைக் கொடுக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொல்லும்போது, அதை நான் சொல்லாவிட்டால், நான் தேச விரோதி என்று முத்திரை குத்தப்படுவேன் என்பதை நானறிவேன். தேச பக்தர்களாக நீங்கள் இருப்பதற்கு யாராவது கட்டாயப்படுத்தி ‘பாரத் மாதா கி ஜே!’ என்று சொல்லவைத்தால் அதை நான் உறுதியாக எதிர்ப்பேன். அப்படிச் சொல்லாவிட்டால் அவரை இந்தியன் என்று அழைக்க மாட்டோம் என்கிறார்கள். அவர்கள் தேசப்பற்றை வரையறுப்பதற்கு, முஸ்லிம்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

நாம் அரசியலமைப்பின் முகவுரையைப் படிக்கும்போது அதில், மாதா அல்லது அம்மா என்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை. அதில் ‘பாரத் அல்லது இந்தியா’ என்று மட்டும்தான் குறிப்பிடப்படுகிறது. ஆகையால், அரசியலமைப்புஷரத்துகள் பிரிவு, 19, 25, 29 மற்றும் 30ன் படி, எனக்கு என்ன தேவையோ அதைச் சொல்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. இவை, அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள்.அவர்கள் தெய்வத்தன்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, நாம் சாவர்க்கரிடம் செல்ல வேண்டியிருக்கிறது.

“இனம், ரத்தம், பண்பாடு, தேசியம் ஆகியவற்றின்படி நீங்கள், இந்துத்துவத்துக்கு அடிப்படையான அனைத்தையும் கொண்டிருக்கிறீர்கள். நமது மூதாதையர்களின் இல்லங்கள் வன்முறையாளர்களால் பலாத்காரமாகக் கைப்பற்றப்பட்டுள்ளது. நமது பொதுவான அன்னைக்கு இதயங்களை அர்ப்பணிக்க வேண்டும். இது தந்தையர் நிலமாக மட்டுமல்லாமல், நமது புனித பூமியாக இருக்கிற அன்னை பூமிக்கு அன்பு செய்யப்பட வேண்டும். அப்போது நீங்கள் இந்து மதத்துக்கு அழைக்கப்படுவீர்கள்”

இந்திய அரசியலமைப்பு உத்தரவாதமளிக்கிற அடிப்படை உரிமைகளையும் நான் என்னுடைய மத அடையாளத்தை இழப்பதையும் ஆர்.எஸ்.எஸ். உறுதிப்படுத்த முயற்சிக்கிறது. நான் இந்தியாவின் விசுவாசமிக்க குடிமகன் என்பதை தெளிவுபடுத்திவிடுகிறேன். நான் என்னுடைய நாட்டை நேசிக்கிறேன். ஆனால், நான் அல்லாவை வணங்குபவன். நான் சவுதி அரேபியாவுக்கு பிரார்த்தனை செய்யவில்லை. இருந்தாலும் இஸ்லாம் இரண்டு புனிதத்தலங்களைக் கொண்டுள்ளது. நான் புகழ் மிக்க அல்லாஹ்வைத் தொழுகிறேன். ஆனால், அதேநேரத்தில் இந்தியாவின் விசுவாசியாக இருக்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது.

மேலும், நான் இந்துத்துவத்துக்கு எதிரானவன் என்பதை விளக்குகிறேன். இறைவன் இந்த உலகத்தில் என்னை வாழ அனுமதித்திருக்கும்வரை இந்த எதிர்ப்பைத் தொடர்வேன். நான் இந்து மதத்துக்கு எதிரானவன் இல்லை. ஏனென்றால், இந்துத்துவமும், இந்து மதமும் தனித்தனி என்று சாவர்க்கரே சொல்கிறார். நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை.சங்பரிவாரின் இந்துத்துவக் கொள்கைக்குத்தான் எதிரானவன். அவர்கள் இந்தியாவை ஒற்றை மதமாக, இந்து ராஷ்டிரமாக மாற்றக் கோருகிறார்கள். ஆனால், இந்தியப் பண்பாடு எல்லா மதங்களையும் கொண்டாடுகிறது. அது, பன்முகத்தன்மையையும், பன்மைத்துவத்தையும் அனுமதிக்கிறது.

ஆனால், ‘என் கழுத்தில் யாரேனும் கத்திவைத்துக் கேட்டாலும் ‘பாரத் மாதா கி ஜே!’ என்று சொல்லமாட்டேன்’ என்ற, உங்களுடைய பேச்சை இப்போது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், ‘ஒவ்வொருவரும் ‘பாரத் மா தா’ என்று சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லும்போது அதில், அவர் முஸ்லிம்களைக் குறிப்பிடவில்லை. அதில் ஜேஎன்யு மாணவர்களைத்தான் குறிப்பிட்டார். பிறகு ஏன், நீங்கள் அதற்குப் பதிலளித்தீர்கள்?

முதலில், ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களைப் பற்றி பேசும்போது மட்டும்தான், நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசியல் கட்சித் தலைவராகவும் பதிலளிக்க வேண்டுமா? நான் என்னுடைய நாட்டின் மதச்சார்பின்மையைக் காப்பது பற்றியும், இந்த நாட்டின் பண்பாட்டைக் காப்பது பற்றியும் பேச உரிமை இல்லையா? என்னை ஏன், ஒரு முஸ்லிம் என்ற அடையாளத்துக்குள் மட்டும் அடைக்கிறீர்கள்? ஒரு பத்திரிகையாளராக, நீங்கள் என்னை ஒரு முஸ்லிம் என்று அடைத்தால் ஒரு இந்தியனாக இதுபற்றிப் பேசமுடியாது. நான் முஸ்லிம் பிரச்சினைகளை எழுப்புவது பற்றி இந்தக் கட்டுரை மிக எளிதாகச் சொல்கிறது.

பாரத் மாதா கி ஜே என்று, சொல்ல மறுத்ததற்காக உங்களுடைய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வரீஸ் பதானை மகாராஷ்டிர சட்டப்பேரவையிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இதற்கு, மதச்சார்பின்மை பேசும் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாதக் காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு உங்களுடைய எதிர்வினை என்ன? அவர் ‘பாரத் மாதா கி ஜே!’ சொல்லவேண்டுமா?

சட்டப்பேரவைத் தலைவருக்கு முதலில் என்னுடைய மிகுந்த மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கேள்வி இதுதான்! நான் 1994ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவைக்குள் நுழைந்தபோது, ஒரு எம்.எல்.ஏ. என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற புத்தகத்தை அனைவருக்கும் கொடுத்தேன். அதில் எழுதியிருந்த முதல் விஷயம், ஒரு அரசின் சட்டப்பேரவை உறுப்பினர் கோஷமிடக் கூடாது. ஏனென்றால், அது சட்டப்பேரவை மாண்புக்கு எதிரானது. ஆகையால், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு உறுப்பினர் கோஷமிடாதபோது, தண்டிக்கப்பட்ட சம்பவம் இதுவே முதல்முறையாக இருக்கும்.இரண்டாவதாக, இந்த கோஷம்பற்றி மகாராஷ்டிர சட்டப்பேரவை விதியில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒரு உறுப்பினர் ‘பாரத் மாதா கி ஜே!’ என்று சொல்லாவிட்டால், அவர் சட்டப்பேரவையிலிருந்து நீக்கப்படுவார் என்று, அது எங்கேயாவது சொல்லியிருக்கிறதா? எந்த சட்டப்படியானாலும் இது ஒரு சட்ட மீறல்.

மூன்றாவதாக, காங்கிரஸ் மற்றும் தேசியவாதக் காங்கிரஸ் கட்சிகளின் இந்தச் செயல், போலி மதச்சார்பின்மையைப் பின்பற்றும் இந்தக் கட்சிகளின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.ஜேஎன்யு பிரச்சினையிலும், தலித் ஆய்வாளர் ரோஹித் வெமுலா தற்கொலை பிரச்சினையிலும் காங்கிரஸ் கட்சி பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-ஐ எதிர்ப்பது மாதிரியான ஒரு பெரிய ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளது.

அவர்கள், சாவர்க்கர் கொள்கையை எதிர்ப்பதாகச் சொல்கிறார்கள். இப்பொழுது, மகாராஷ்டிர சட்டப்பேரவை தீர்மானத்துக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அப்போது, அவர்கள் சாவர்க்கர் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இல்லையா?

நான் இந்த நாளிலிருந்து சொல்கிறேன். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் இந்தியாவின் மதச்சார்பின்மையை அழிக்க முயற்சி செய்கிறார்கள். நீங்கள் அவர்களோடு கொஞ்சிக் குலாவுவீர்களானால், காங்கிரஸ் உங்களை வகுப்புவாதி என்று முத்திரை குத்தாது, பாஜக உங்களை தேசவிரோதி என்று முத்திரை குத்தாது. ஆனால், அவர்களுக்கு எதிராக உங்களுடைய செயல் திரும்புமானால், உங்கள்மீது முத்திரை குத்தப்படும். மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் எனக்கெதிராக ஒரு வெறுப்புணர்வு போய்க்கொண்டிருக்கிறது. இதை, காங்கிரஸ் ஆதரிப்பதனால் காங்கிரஸ் சகிப்புத்தன்மைபற்றி அளவுக்கதிகமான உரிமை கோருதல்களைக் காட்டிக்கொண்டிருப்பது முழுப் பொய்யாக இருக்கிறது.

இந்த அரசியலிலிலிருந்து ஆதாயம் அடைபவர்கள் யார்? உங்களுடைய கருத்தை, நீங்கள் ஒரு முஸ்லிமாகக் கேட்கவில்லை என்று எடுத்துக்கொள்கிறேன். ஆனால், இந்த விஷயங்களைச் சொல்வதால், தேர்தலில் நீங்கள் இதை எதிர்நிலையாக்கமாட்டீர்களா? இது, வகுப்புவாதக் கட்சிகளுக்கு உதவிசெய்யாதா?

இந்தக் கேள்வியை என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள். நான் உங்களைக் கேட்கிறேன். மோடி 282 இடங்களோடு அரசியல் அதிகாரத்துக்கு வருவதற்கு நானா காரணம்? ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியும், பாஜக-வும் அரசமைப்பதற்கும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கும், ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி தோற்றதற்கும் நானா பொறுப்பு? ஹைதராபாத் உள்ளூர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டதற்கும், புதிய ஆந்திர மாநிலத்தில் அக்கட்சி துடைத்தெறியப்பட்டதற்கும், நானா பொறுப்பு? தெலுங்கானாவை உருவாக்கியிருந்தாலும் காங்கிரஸ் அந்த மாநிலத்தில் தோற்றிருக்கிறது. அதனால், இந்த எதிர்நிலையாக்கங்களுக்கு நான் எப்படி பொறுப்பாக இருப்பேன்?நான் ஒரு எளிமையான கருத்தை எழுப்புகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் எனக்கு சில உரிமைகளை கொடுத்திருக்கிறது. எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன். அவற்றை வெளியே எடுத்துவிடாதீர்கள். என்னுடைய உறுதியான எதிர்ப்பும் அல்லது கருத்து வேறுபாடும் ஏன் ஒரு பிரச்சினையாகிறது? நான் என்னுடைய அடிப்படை உரிமைகளை நம்பி வாழ்கிறேன். நாடாளுமன்றமேகூட, அரசியலமைப்பின் அடிப்படை வடிவத்தை மாற்ற முடியாது. அதனால், நான் எப்படி தவறிழைத்தவனாவேன். நான் என்னுடைய உரிமைகளைக் கோருகிறபோது, நான் செய்வதெல்லாம் எப்படி எதிர்நிலையாக்கமாகும்?

நான் முஸ்லிம்களின் தலைவராவதற்கு ஆசைப்படுகிறேனா? இல்லை. நான் என்றைக்கும் முஸ்லிம்களின் தலைவராகத் தேவையில்லை. எனக்கு, நான் ஒரு அமைச்சராக வேண்டும் என்ற லட்சியமிருக்கிறதா? இல்லை. அதை என்னிடமிருந்து எடுத்துவிடுங்கள். நான் என்றைக்கும் ஒரு அமைச்சராக இருக்கமாட்டேன். ஆமாம்! நான், சில முக்கியப் பிரச்சினைகளை எழுப்ப விரும்புகிறேன். முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் சமூக பொருளாதார முன்னேற்றமே எனக்குத் தேவை. எனக்குத் தேவை சமத்துவம். எனக்குத் தேவை நீதி. எனக்குத் தேவை அரசியலமைப்பு உரிமைகள். அதனால், இதில் என்ன தவறு இருக்கிறது? நான் சட்டத்தை மீறுவேனானால் நீங்கள் எனக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.

கடந்தகாலத்தில், உங்களுடைய கட்சிகூட வகுப்புவாத பிரச்சினைகளை எழுப்பியது. அக்பருதீன் ஓவைஸி அப்படியான வெறுப்பு பேச்சுக்காக வழக்கில் இருக்கிறார். வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஹைதராபாத்துக்கு வருகைதர இருந்தபோது உங்கள் கட்சி வன்முறையில் ஈடுபட்டது. அதனால், ஆர்.எஸ்.எஸ்-சின் மோகன் பாகவத்தும், நீங்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கிறீர்களா? பிறகு, எந்த அடிப்படையில் நீங்கள் மோகன் பாகவத்மீது விமர்சனம் வைக்கிறீர்கள்?

அஸாத்துதீன் இந்தியாவின் மதச்சார்பின்மையையும், பன்முகத்தன்மையையும், பண்பாட்டையும் கொண்டாடுகிறான் என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். அஸாத்துதீன் இந்தியாவை மதகுருக்கள் ஆளும் நாடாகவோ? மதவாத அரசாகவோ மாற்ற விரும்பவில்லை. அஸாத்துதீன் ஓவைஸி இந்திய அரசியலமைப்பை நம்புகிறான். ஆனால், இந்த நாளில் மோகன் பாகவத் இந்தியா ஒரு இந்து ராஷ்டிரமாக வேண்டும் என்கிறார். இந்தக் கருத்துதான் அவர்களால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிற புத்தகங்களில் எழுதப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஆர்.எஸ்.எஸ்-க்கும் அஸாத்துதீன் ஓவைஸிக்கும் இடையே உள்ள மிக முக்கியப் பிரச்சினை. அஸாத்துதீன் எந்த மதக் கட்டமைப்பையும் தகர்க்கும் செயல்களில் ஈடுபடவில்லை. மக்கள் இறைச்சி விற்பனையாளர்களை எரித்துக்கொள்வதை அஸாத்துதீன் ஓவைஸி பாதுகாக்கவில்லை. நாங்கள் சொல்வது எல்லாம் சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். எங்களுக்கு எங்களுடைய அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் தேவை. அவ்வளவுதான்.

நீங்கள் உங்களுடைய கேள்வியில் இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அக்பருதீன்மீது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அது, சட்டப் பிரச்சினை. அதை சட்டத்தின் கையிலேயே விட்டுவிடுவோம். ஆனால், நான் சொல்வது அரசியலமைப்பைவிட என்னுடைய உணர்வு பெரியதா? இல்லை. அதை நான் சொல்லவில்லை.

தமிழில் - எ.பாலாஜி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-