அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தமிழகத்தில் ஆணவக் கொலை வெறியாட்டங்கள் தொடர்கின்றன. இந்த பட்டியலில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று பட்டப்பகலில் நடந்த கொலை பதறவைக்கிறது. இந்தக் கொலை பாதகம் அரங்கேறும் காட்சியின் வீடியோ பதிவு வாட்ஸ் அப்பில் பரவி மேலும் பதற்றத்தை கூட்டி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் கவுசல்யா. இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்பவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப்பிறகு இருவரும் குமரலிங்கத்தில் குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று 13-ம் தேதி சங்கர்-கவுசல்யா இருவரும் மளிகைப் பொருட்கள் வாங்க சென்றனர். அப்போது நாலைந்து பேரால் வழிமறிக்கப்பட்ட சங்கர் கொடூரமாக வெட்டப்பட்டார். அவர்களை தடுத்த சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கும் வெட்டு விழுந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம், அங்கு நின்று கொண்டிருந்தவர்களை குலைநடுங்க செய்தது. காதல் தம்பதியை வெட்டி சாய்த்த கொலையாளிகள் எந்த பயமும் இல்லாமல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அரிவாளை தோளில் தொங்கவிட்டபடி தப்பிச்சென்றனர்.

#‎TNHonourkilling

மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சங்கர், ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். கவுசல்யா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.தலித் சமூகத்தை சேர்ந்த சங்கர், பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்ததுதான் கொலைக்கு காரணம். இந்தக்கொலைக்கான பின்னணியில் கவுசல்யாவின் தாய்மாமன் பாண்டித்துரை இருப்பதாக தகவல் வருகிறது. இந்நிலையில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி நிலக்கோட்டை கோர்ட்டில் சரணடைந்துள்ளார். கொலையாளிகள் எந்தவொரு பதற்றமோ, மனிதாபிமானமோ இல்லாமல் வந்து சென்றுள்ளனர்.

சாதி மாறி திருமணம் செய்தால் கொலைதான் தண்டனை என்று மீண்டும் சமூகத்துக்கு சாதி வெறியர்கள் அறிவித்துள்ளார்கள். தேர்தல் வேலைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இந்த ஆணவக்கொலைகள் பற்றி ஒவ்வொரு அரசியல் கட்சியும் என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கும் என்று தெரியவில்லை. எல்லோருடைய வாக்கும் அவர்களுக்கு தேவை.சங்கர் படுகொலை விவகாரத்தில் நீதி கேட்டு மக்கள் போராடி வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து சமூகச் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கூறுகையில், “ வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த சங்கரும், கவுசல்யாவும் ஒன்றாக படிக்கும்போது காதலித்து விரும்பி திருமணம் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்து இருவருக்கும் மிரட்டல் வந்திருக்கிறது.

இடையில் பெண்ணை கடத்தி விட்டார் என்று சங்கர் மேல் பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்த பெண் என்னை யாரும் கடத்தவில்லை என்று சொல்லியிருக்கிறார். அதோடு எனக்கு மகள் இல்லை என்று கூறிவிட்டு கௌவசல்யாவின் பெற்றோர் கோபத்துடன் சென்று விட்டனர்.

ஆனாலும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில்தான் படுகொலை நடந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு ஆணவக்கொலை குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை, அந்த தைரியம்தான் இதுபோன்று கொடூரங்கள் தொடர காரணமாக உள்ளன.

இந்த ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வரவேண்டும். இந்தியாவில் 22 மாநிலங்கள் ஆணவக்கொலைகள் நடப்பதாக ஒப்புக்கொண்டுள்ளன. 2013 லிருந்து இதுவரை தமிழகத்தில் 81 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன.

இதில் கொலை செய்யப்பட்டவர்களில் 80 சதவீதம் பெண்கள். நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம், இளவரசன், கோகுல்ராஜ், இப்போது சங்கர் வரிசையாக பார்த்துக் கொண்டே வருகிறோம். .....’’ என்கிறார் வேதனையுடன்.

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-