அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் 7 ஆம் ஆண்டு விழா  நேற்று  (26-03-2016)  மாலை 5.30 மணிக்கு துவங்கி மிக சிறப்பாக நடைபெற்றுது.ஊர் மக்கள் பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர்  
பள்ளியின் தாளாளர் மஹஸர் அலி அவர்கள், நிர்வாக இயக்குனர் கமால் பாஷா அவர்கள், தலைமை ஆசிரியர் முருகன், வி.களத்தூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்ட இந்நிகழ்ச்சியில் அரியலூர் அரசுக் கல்லூரி பேராசிரியர் ப.செல்வக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவினை பள்ளியின் அரபி ஆசிரியர் பஷீர் அஹமது அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இதனைத் தொடந்து பள்ளியின் நிர்வாக இயக்குனர் கமால் பாஷா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் பள்ளியின் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. அடுத்து, பள்ளியில் பயிலும் மாணவர்களில், மதிப்பெண் அடிப்படையில் முன்னிலை வகித்தவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயமும் வழங்கப்பட்டது. அடுத்து வி.களத்துர் மண்ணில் பிறந்து, மாவட்டத்திலேயே முனைவர் பட்டம் பெற்ற முதல் இஸ்லாமிய சகோதரி சாஹிரா பானு அவர்கள் இஸ்லாமியப் பெண்களின் கல்வி குறித்து சிறப்பாக உரையாற்றினார். சங்க காலத்தில் பெண்களுக்கு இருந்த சம உரிமை, இடைக்காலத்தில் மறுக்கப்பட்ட பெண்ணுரிமை ஆகியவை குறித்தும், தற்காலத்தில் பெண் கல்வியின் அவசியம் குறித்தும் விவரித்து, பெண்கள் தங்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தை சரியான விதத்தில் பயன்படுத்தி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று எடுத்துரைத்தார். அடுத்து உரையாற்றிய அரும்பாவூர் இலக்கியச் சாரல் அமைப்பின் செயலாளர், தாஹிர் பாட்ஷா அவர்கள், பள்ளியில் பயிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்களை உதாரணம் காட்டி, மத நல்லிலக்கணத்தைப் போதிக்கும் ஐடியல் பள்ளி நிர்வாகத்தைப் பாராட்டினார். மேலும் சிறப்பு விருந்தினரான, ப.செல்வக்குமார் பேசுகையில், காட்டு மூங்கில்களாய் தங்களிடம் ஒப்படைக்கப்படும் குழந்தைகளை, ஐடியல் பள்ளி எப்படி அவர்களை புல்லாங்குழல்களாய் வார்த்தெடுக்கப் பிரயத்தனப் படுகிறது என்றும், பள்ளியில் வகுப்பறை மற்றும் கழிப்பறைகள் எவ்வளவு சுகாதாரமாகப் பராமரிக்கப்படுகிறது என்றும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பள்ளியோடு சேர்ந்து பெற்றோகளும் ஒத்துழைக்க வேண்டும். தொலைக்காட்சி முதலான கேளிக்கைகளைத் தவிர்த்து குழந்தைகள் பயில்வதற்கேற்ற ஒரு நல்ல சூழலை வீட்டில் உருவாக்கித் தரவேண்டும் என்றும், இப்பள்ளியின் மாணவர்கள் பல்வேறு துறைகளில் தடம்பதித்திட வேண்டும் என்றும் கூறி சிறப்பாக உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து ஐடியல் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வண்ண விளக்கொளியில் மேடையில் மாணவர்கள் நிகழ்த்திய ரைம்ஸ் நடனம், எம்மதமும் சம்மதம் என்பதை வலியுறுத்துகிற ஊமை நாடகம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றை பரிகாசம் செய்வதான – வீணா(ப்)! போனா! மற்றும் மாணவிகளின் பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்வதாக அமைந்தது. இறுதியாக பள்ளியின் ஆசிரியை அமுதா அவர்கள் நன்றியுரை கூறினார்கள். வி.களத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களிலிருந்து ஐடியல் பள்ளியில், இந்து – இஸ்லாம் - கிறிஸ்த்துவம் என அனைத்து சமுதாய மாணவர்களும் தோழமையுடன் கல்வி பயில்கின்றனர். ஐடியல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு முன்மாதிரி என்று அர்த்தம், தன் பெயரைப் போலவே வி.களத்தூரின் முன்மாதிரியாக ஐடியல் பள்ளி - கல்விப் பணியில் செயலாற்றி வருகிறது.
நன்றி : கல்லாறு.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-