அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பறக்கும் படை மற்றும் தீவிர கண்காணிப்புக் குழுக்களின் வாகனங்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார் பெரம்பலூர் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான க. நந்தகுமார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படை, தீவிர கண்காணிப்புக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பறக்கும் படை, தீவிர கண்காணிப்புக் குழுக்களில் மொத்தம் 12 குழுக்கள் இடம்பெற்றுள்ளன. இக்குழுக்களின் வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இக்கருவிகளின் உதவியால் குழுவினர் எந்தெந்த பகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை எளிதில் கண்காணிக்க முடியும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்திலும் இந்த வாகனங்கள் கண்காணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் அனைவரும் தேர்தல் தொடர்பான தங்களது புகார்களை 18004257031 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி மூலமாக தெரியப்படுத்தலாம். இக் கட்டுப்பாட்டு மையம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு, அனைத்து தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் உள்ளுர் கேபிள் சேனல்கள் தொடர்ந்து கண்காணிக்கபட்டு, பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவை தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களோ அல்லது நிகழ்ச்சிகளோ ஒளிபரப்பப்பட்டால் அவை பதிவு செய்யப்பட்டு, அதற்கான செலவுகள் வேட்பாளரின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும்.

மேலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தயார் செய்யப்படும் விளம்பரங்களை அரசியல் கட்சியினர் ஊடக சான்றளிப்பு குழுவினரிடம் அனுமதி பெற்ற பிறகே ஒளிபரப்ப வேண்டும்.

இக்குழுவிற்கான தலைவராக மாவட்ட தேர்தல் அலுவலரும், உறுப்பினர்களாக வருவாய் கோட்டாட்சியர், தேசிய தகவல் மைய அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் தூதர்ஷன் தொலைக்காட்சி செய்தியாளர் ஆகியோர் உள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-