அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
குன்னம்,

துபாயில் விற்பனையாளராக வேலை பார்த்த குன்னம் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது நண்பர்களுக்கு வாட்ஸ்–அப் மூலம் பரபரப்பு தகவல் அனுப்பியுள்ளார்.

விற்பனையாளராக...

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒகளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30).இவர் துபாயில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ராஜ்குமார் தனது நண்பர்களுக்கு வாட்ஸ் மூலம் வாய் வழி குறுந்தகவல் அனுப்பிவிட்டு தான் வேலை பார்த்த எலக்ட்ரானிக்ஸ் கடை குடோனில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீதி கிடைக்க வேண்டும்

ராஜ்குமார் தனது நண்பர்களுக்கு வாட்ஸ்–அப் மூலம் அனுப்பிய பரபரப்பான வாய் வழி குறுந்தகவலில் கூறியிருந்தாவது:–

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகளூர் காமராஜ் நகரை சேர்ந்தவன் ராஜ்குமார். எனது தந்தை பாலுசாமி. அம்மா தங்காயி, அம்மா இறந்து விட்டார். கலா, சங்கீதா, அமுதா ஆகிய மூன்று அக்கா உள்ளனர். எனது மாமா ராதாகிருஷ்ணன், தங்கராஜ், ஆறுமுகம் ஆவார்கள். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். நான் வேலை பார்த்த கடை முதலாளிகள் தகாத வார்த்தைகளால் என்னை திட்டி, செத்து போ என்று கூறியதால் இந்த முடிவுக்கு வந்தேன். இந்த மெசேஜை பார்த்த அரை மணி நேரத்தில் என் உயிர் என்னிடம் இருக்காது. நண்பர்களே உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் இதை சேர் செய்யுங்கள்.

அம்மா பக்கத்திலேயே அடக்கம்

எனது அப்பாவை பார்த்து கொள்ளுங்கள், அக்காவையும் பார்த்து கொள்ளுங்கள். தற்போது என் அம்மாவிடம் செல்கிறேன். எனது உடலை ஒகளூரில் அடக்கம் செய்ய வேண்டும். எனது அம்மா பக்கத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும். அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் முருகா... முருகா...முருகா... என இவ்வாறு அவர் பேசி முடித்து உள்ளார்.

உறவினர்கள் கோரிக்கை

வேலை பார்த்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஒரு டி.வி.யை டோர் டெலிவரி செய்வதற்காக ராஜ்குமார் எடுத்த போது கைத்தவறி டி.வி. கீழே விழுந்து உடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கடை உரிமையாளர்கள் தகாத வார்த்தைகளால் ராஜ்குமாரை திட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜ்குமார் அங்குள்ள குடோனில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது.ஒகளூரில் உள்ள ராஜ்குமார் உறவினர்கள் ராஜ்குமார் இறப்புக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும்,ராஜ்குமார் உடலை மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக தமிழகம் கொண்டு வர நடவடிக்கை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-