அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கிருஷ்ணகிரி மாவடம், பர்கூரில் உள்ள பார்வையற்றோர் பயிற்றுப் பள்ளியில் உயர்நிலைப் படிப்பும், சென்னை தாம்பரத்தில் மேல்நிலைப் படிப்பும் முடித்து ஆசிரியர் ஆவதே குறிக்கோளாக கொண்டு, இளங்கலை, முதுகலை மற்றும் பட்டப்படிப்பை சென்னையிலுள்ள எம்.சி.சி (M.C.C) கல்லூரியில் முடித்தார் பார்வையற்ற சீனிவாசன் (47).

இவர் தற்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15 ஆண்டுகளாக பனியாற்றிக் கொண்டிருக்கிறார்.

சீனிவாசனின் பெற்றோர் சாமு-துளசி. இவருடைய தந்தை ஓய்வுப் பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். இவருக்கு ஒரு அண்ணன் ரகு (49) மற்றும் அக்கா விஜயா (51). இவர்கள் மூவருக்கும் பிறவியிலேயே பார்வை இல்லை.இவருடைய அண்ணன் திருப்பத்தூர் அருகேயுள்ள குனிச்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பனியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருடைய அக்காவிற்கு திருமணமாகவில்லை. தற்போது தம்பி வீட்டில் இருக்கிறார்.

இவர் தன் குறைபாட்டை பெரிதாக கருதாமல் என்னாலும் முடியும் என்றும் என்னைப் போல் உள்ள அனைவருக்கும் உதவ வேண்டும் என நினைத்து என்னை இழிவாக பார்க்கும் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என நினைத்தார்.

இவர் தனது வாழ்விற்கு முன் மாதிரியாக அவருடைய ஆசிரியரான விஷ்னு பட் அவர்களை எடுத்துக்கொண்டார். இவருக்கு கல்லூரியில் ஆசிரியராக வேண்டும் என்பது முதல் குறிக்கோள். சந்தர்ப்ப சூழ்நிலையால் இவர் பள்ளி ஆசிரியர் ஆனார். மாணவர்களின் அன்பும், சக ஆசிரியர்களின் அர்பணிப்பும் இவருக்கு பிடிக்கவே இவர் இங்கேயே 15 ஆண்டுகளாக இருக்கிறார். மேலும், இவர் சிறந்த எழுத்தாளரும் கூட. அசாம் அரசினால் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் இந்திய அளவில் முதல் இடம் பெற்று சிறப்பித்துள்ளார். அதேபோல், பல கட்டுரைகள் எழுதி பல பரிசுகளைப் பெற்று, பார்வையற்றவர்கள் எதையும் செய்ய முடியும் என நிருபித்துள்ளார். அதோடு, தனக்கு தேவையான உதவிகளை யாரிடமும் கேட்காமல் எல்லாத் தேவைகளையும் தானே செய்துக்கொள்கிறார்.

இவரைப்பற்றி சக ஆசிரியர்கள் கூறுகையில், ''எங்களுக்கு இரண்டு கண்கள் இருந்தும் குருடாதான் இருக்கிறோம். ஆனா, சீனிவாசனை பாத்தா பார்வையற்றவர்னு சொல்ல முடியாது. எங்களால் செய்ய முடியாத வேலைகளையும் அவர் செய்கிறார். எப்படி சார் உங்களால முடியுதுனு கேடா. 'IT IS A SIMPLE SIR' அப்டீனு சொல்லிட்டு போயிடுறாரு. வேலூர் மாவட்டத்துலேயே மிகவும் பின் தங்கிய பள்ளி இது. ஆனாலும், அனைத்து மாணவர்களையும் 80 சதவிகிதம் மார்க் எடுக்க வைப்பார்.

இவர் ஒரு சிறந்த மனித நேயமிக்க மனிதர். எங்க எல்லாருக்கும் மிகவும் உதவியாக இருக்கிறார். இந்த பள்ளியிலேயே கணிப்பொறியில் வேலை செய்யுறது சீனிவாசன் சார் மட்டும்தான். எல்லா ஆசிரியர்களுக்கும் இ-மெயில் அனுப்புவதும் இவர்தான். கண்ணுத் தெரிந்தவன் செய்ய முடியாத வேலைகளையும், கண்ணுத் தெரியாத இவரால செய்ய முடியும்.

இவரிடம் படித்த பலர் அரசு வேலையில் உள்ளனர். அவர்கள் மாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை வந்து இவரைப் பார்த்துவிட்டு போவார்கள். அப்போது நாங்க நினைப்போம், இவரு எங்களுக்கு கிடைச்சது எவ்வளவு பெரிய வரபிரசாதம்னு'' என்றனர்.சீனிவாசனின் மனைவி நளினா கூறுகையில், ''ஒரு பெண்ணுக்கு அன்பான கணவர் கிடைச்சா, அவள் வாழ்க்கையில வேறு என்ன வேணும். இந்த உலகத்துல இருக்கிற எல்லா கணவன் - மனைவிகளிலே நாங்க சந்தோசமாக இருக்கிறோம். அவர் என்ன பாத்துக்கிற மாதிரி, யாரும் அவங்கவங்க மனைவியை பாத்துக்க மாட்டாங்க. எங்க மகிழ்ச்சிக்கு அடையாளமாக இரு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் பெண் சென்னையில் பொறியியல் படிப்பும், இரண்டாவது பெண் ஊத்தங்கரை அதியமான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும் படிக்கிறாங்க. அவரும்கூட எனக்கு குழந்தைதான்.

பொதுவாகவே மாற்றுத்திறனாளிகளை கல்யாணம் செஞ்சுகிட்டா எல்லாரும் ஏளனமாக பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா எனக்கு அந்தக் கவலையில்லை. ஏன்னா வாழப்போறது நான்தான். யாரு என்ன சொன்னாலும் கவலைப்படமாட்டேன். சாதாரண மக்களையும்விட நாங்க ஒருபடி முன்னேறி இருக்கனும்னு நினைச்சோம். அதுக்காக நாங்க எவ்வளவோ கஷ்டப்பட்டோம். இப்போ நாங்க நினைச்சதைவிட ரொம்ப சந்தோசமா இருக்கோம்'' என்றார்.

பெ.மதலை ஆரோன்
(மாணவப் பத்திரிகையாளர்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-