அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
எதையும் மாற்றும் திறனாளி!
சித்தளியில்இருந்து
தளராத தன்னம்பிக்கை!

"பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தேன். என்னைக் கடந்து சென்ற ஒரு நபர் சட்டென்று நின்று, ஏற இறங்க என்னைப் பார்த்துவிட்டு, தன் சட்டைப் பையைத் துழாவி ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து விசிறிவிட்டுப் போனார். மாற்றுத் திறனாளிகள் பற்றி சமூகம் கொண்டு இருக்கும் மோசமான பொதுப் பார்வையின் நல்ல உதாரணம் இது'' -கணீரெனப் பேசும் ராமலிங்கம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து இருக்கிறார். கால்கள் போலியோவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் கவலைப்பட்டு மூலையில் முடங்கிவிடாமல் தேனீயாகச் சுற்றிச் சுழல்கிறார். இவரைப் பற்றி என் விகடன் வாசகர் விஜய் குரல் பதிவு மூலம் தகவல் தந்து இருந்தார்.

அரியலூர் செல்லும் சாலையில் இருக்கும் சித்தளி என்ற கிராமம்தான் ராமலிங்கத்தின் ஊர். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு காலையில் பெரம்பலூர் வந்தால், பல பணிகள் அவருக்காக காத்திருக்கின்றன. எந்த உடல் நலக்கோளாறுக்கு, எந்த சிறப்பு மருத்துவரை, எங்கே, எப்போது பார்க்கலாம்?, வங்கிக் கடன், மேற்கல்வி கவுன்சிலிங், பல்வேறு அரசுத் துறைகளுக்கு கோரிக்கை மனு அனுப்புதல் எனப் பொதுமக்களின் இலவச உதவி மையமே ராமுதான். பல்வேறு வேலை வாய்ப்புக்கான தேர்வுகள், விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?, தகுதி விவரம் என்ன? எனத் தகவல் களஞ்சியமாக இருப்பதால், இளைஞர்கள் கூட்டமும் இவரை மொய்க்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்ட அஸ்திரத்தைப் பற்றி இவரிடம் கேட்டால், அத்தனை சுவாரஸ்யமாகச் சொல்கிறார். இப்படி உதவி செய்வதற்கு இவர் போடும் ஒரே நிபந்தனை... உதவி கேட்பவர் எளிமையான பொது ஜனமாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே. முதுநிலைப் பட்டதாரியான இவர், மக்களின் சட்டப் பிரச்னைகளை மனதில் வைத்து எல்.எல்.பி. சட்டப் படிப்பையும் படித்துவருகிறார்.

''பள்ளிப் பருவத்தில் என் கால்களின் நிதர்சனம் எனக்கு உறைத்தபோது மனம் உடைந்து போனது என்னவோ நிஜம்தான். இல்லாத ஒன்றின் வெற்றிடத்தை ஏதோ ஒன்றால் நிரப்பும் தவிப்போடு, இலக்கின்றித் தேடித் தேடி எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மாற்றுத் திறனாளி என்றாலே மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து இருப்பவர் என்பதை உடைக்கும் வகையில், இயல்பை மீறி உழைத்தேன். தொண்டு நிறுவனங்களும் சேவை மையங்களும் என்னை அரவணைத்துக்கொண்டன. தமிழகத்திலும் கேரளாவிலும் நான் பணியாற்றிய தொண்டு நிறுவனங்களின் களப்பணி அனுபவம் வாழ்வின் அர்த்தத்தைப் போதித்தது. நாடு முழுக்கத் துயரம் எங்கே நடந்தாலும் ஓடிப்போய் உதவும் சேவை நிறுவனங்களின் பணியில் என்னைக் கரைத்து இருந்தேன். மாற்றுத் திறனாளி என்றாலே எதையும் மாற்றும் திறனாளி என்று நிரூபிக்க அவை வாய்ப்பாக அமைந்தன.

ஒருமுறை குஜராத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்தபோது நடந்த அந்த பஸ் ஸ்டாண்ட் பிச்சை சம்பவம் மனதை ஆயிரம் ஊசிகொண்டு குத்திக் கிழித்தது. பெரிய சேவை நிறுவனத்தின் களப்பணிகளை வழி நடத்துபவன் என்ற பெருமித பிம்பத்தை உடைத்துப்போட்டு என்னை ஊனமுற்றவனாகவே ஊர் பார்க்கும் யதார்த்தம் எனக்கு வலியாக உறைத்தது. களப்பணி செய்வதை நிறுத்திவிட்டு சித்தளி கிராமத்தில் தங்கியபடி நான் அதுவரைக் கற்றுக்கொண்டதைச் செயல்படுத்த ஆரம்பித்தேன்'' என்று ரோஜாவும் முள்ளுமாக கடந்துவந்த தன் வாழ்க்கைப் பாதையைக் கண்முன் விவரிக்கிறார் ராமலிங்கம்.

அதன் பின் கிராமத்தில் இருக்கும் சுமார் 20 சுய உதவிக் குழுக்களை வழி நடத்துவது, கல்லூரி மாணவர்கள் மற்றும் படிப்பை முடித்தவர்களை வைத்து கிராமப்புற குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது என்று உள்ளூரில் சேவை செய்யும் ராமுவின் மனைவி கிராமப்புற மக்களுக்கு உதவவேண்டும் என்ற ஆசையில் செவிலியர் படிப்பை முடித்த அழகேஸ்வரி. இன்று ராமுவின் முயற்சிகளுக்குத் தோள் கொடுக்கிறார். ''ஏழைக் குழந்தைகளுக்காக சிறப்பான ஒரு பள்ளியைக் கட்டமைப்பதுதான் என் இப்போதைய கனவு''- கண்கள் விரிய தீர்க்கத்துடன் சொல்லும் அந்த 'எதையும் மாற்றும் திறனாளி’யின் கரங்களைக் குலுக்கி கனவுகள் மெய்ப்படட்டும் என வாழ்த்தினேன்!

- எஸ்.சுமன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-