அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அவருக்கு வயது 35. கோவை ராமநாதபுரம் பகுதியில் வீடு தேடுகிறார். அவருக்கு வீடு தர அனைவரும் தயங்குகிறார்கள். காரணம் அவர் பெயர் ரஹீம். இன்னொருவர் தன் முதல் மாத ஊதியத்தில் புடவை வாங்குகிறார். அதை திருநெல்வேலியில் இருக்கும் அம்மாவுக்கு அனுப்ப கூரியர் அலுவலகம் செல்கிறார். கூரியர் அலுவலகத்தில் இருப்பவர், “என்ன பாய்... உள்ளே வெடிகுண்டு எதுவும் இல்லையே...?” எனச் சிரித்துக் கொண்டே பார்சலை சரிபார்க்கிறார். காரணம் அவர் பெயர் அபுதாஹீர்.

’பெயரில் என்ன இருக்கிறது...?

பெயருக்கு பின்னால் எல்லாமும் இருக்கிறது!’ என்று முடியும் இரா.காமராசின் கவிதை நினைவுக்கு வருகிறது. பெயருக்குப் பின்னால் இருக்கும் அரசியலை அது சார்ந்த மக்களின் பொது புத்தியை பேசும் எளிமையான கவிதை அது.

ஃபைசல்கள் தனிமைப்படுவது எதனால்...?

ஆம். இங்கு பெயரில்தான் எல்லாம் இருக்கிறது. ஃபைசலுக்கு சென்னையில் நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கிறது. அவன் தன் குடும்பத்தை சென்னைக்கு அழைத்து வர வீடு தேடுகிறான். பல உதாசீனங்களுக்கு பிறகு அவனுக்கு வீடு கிடைக்கிறது. வீட்டின் உரிமையாளரும் இஸ்லாமியர். இது நடந்துவிடக்கூடாது என்றுதான் ஃபைசல் விரும்பினான். அவன் தன் இளமைக் காலத்தை பட்டுநூல் கார தெரு என்று அறியபட்ட தஞ்சை செளராஷ்ட்ரா பகுதியிலும், அக்ரஹாரத்திலும் கழித்தவன். பொது சமூகத்துடன் நன்கு கலந்தவன். அவன் தெருவில் உள்ள பிள்ளையார் கோவில் திருவிழாவின் போது நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு பங்கேற்றவன். பொது சமூகத்தோடு கலந்து, அதனோடு உரையாட விரும்பியவனை எது தனிமைப்படுத்தியது...?

அதற்கான விடை தேட நீங்கள் 18 ஆண்டுகள் பின் பயணிக்க வேண்டும். கொஞ்சம் சிரமம்தான். நொடிக்கு நொடி புது செய்தி கேட்க, பார்க்க விரும்புபவர்களுக்கு, ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை செய்தித் தளங்களுக்கு சென்று F5 பட்டனை அழுத்துபவர்களுக்கு, 18 ஆண்டுகள் பின் பயணிக்க வேண்டுமென்பது கொஞ்சம் அல்ல, நிறையவே சிரமம்தான். ஆனால், வேறு வழியல்ல.

பிப்ரவரி 14, வெறும் காதலர் தினம் மட்டுமல்ல:

தமிழர்களுக்கு, அதுவும் குறிப்பாக கோவை வாசிகளுக்கு பிப்ரவரி 14 நிச்சயம் காதலர் தினம் மட்டுமல்ல. தமிழக வரலாற்றில் கருப்பு நாளும் கூட. 11 வெவ்வேறு இடங்களில் வெடித்த 12 குண்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்த நாள். ஆம். தமிழகத்தின் துயர நாள். 1997-ம் ஆண்டின் இறுதியில் காவலர் செல்வராஜ், இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான அல் - உம்மாவை சேர்ந்தவர்களால் கொலை செய்யப்படுகிறார். அதனைத் தொடர்ந்து ஒரு மாபெரும் கலவரம் வெடிக்கிறது. அதில் 18 இஸ்லாமியர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். 1998 பிப்ரவரி 14-ம் நாள், மாலை 4 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அத்வானி உரையாற்ற வருகிறார். 18 இஸ்லாமியர்களின் கொலைக்கு பழி வாங்கும் விதமாக அவரைக் கொல்லத் திட்டமிட்டு அல்-உம்மா நடத்திய இந்த பயங்கர குண்டுவெடிப்பில்தான் இத்தனை உயிரிழப்புகள் நடந்தது.

நிச்சயம் இவர்கள் யாரும் அந்த 18 இஸ்லாமியர்கள் கொலையில் சம்பந்தபட்டவர்கள் இல்லை. அந்த மனிதத்தன்மையற்ற தாக்குதலுக்கு பிறகுதான் இஸ்லாமியர்கள் மீதான பார்வை மாறுகிறது. இந்தப் பொது சமூகம் இஸ்லாமியர்களை அச்சத்துடன் அணுகத் தொடங்குகிறது. இஸ்லாமியர்கள் தனிமைப்பட காரணமாக அமைந்தது. கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, 400க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டார்கள். நீண்ட பலதரப்பட்ட விசாரணைக்கு பிறகு 18 பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அனைவரும் 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள்.

ஆம். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஒரு சமூகத்தை குறித்த மொத்த பிம்பத்தையும் மாற்றியவர்கள். பரந்த கொள்கையுடைய இஸ்லாமியர்களும் தனிமைப்பட காரணமாக இருந்தவர்கள். இதில் எதுவும் மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த ஒரு நிகழ்வை கொண்டே மொத்த இஸ்லாமியர்களையும் அணுகும் போக்கினால்தான் ரஹீம்களுக்கு வீடு கிடைப்பதில்லை, ஃபைசல்கள் இஸ்லாமிய வீடுகளில் குடியேறுகிறார்கள்!

இஸ்லாமிய கைதிகளும், அரசின் பார்வையும்...

“கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் பலர் நிரபராதிகள். அவர்களுக்கும் இந்த குண்டுவெடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை அறிந்து என் அண்ணன் அப்துல்லா, அவர்களுக்கு சட்ட உதவிகள் செய்ய இறங்கிய போது, அவரை காவல்துறை அழைத்து மிரட்டியது. ஆனால், என் அண்ணன் அவர்களுக்கு சட்ட உதவிகள் செய்வதில் தீவிரமாக இருந்தார். இதனால் கோபமுற்று என் அண்ணன் மீது ஒரு பொய் வழக்கு புனைந்து அவரை கைது செய்துவிட்டது” என்கிறார் இஸ்லாமிய விசாரணை கைதிகளின் விடுதலைக்காக சட்ட போராட்டம் நடத்தி வரும் கோவையை சேர்ந்த சிஹாப்.

“குண்டுவெடிப்பிற்காக சம்பந்தபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எங்களுக்கு இதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால், தண்டனை பெற்றவர்கள் அனைவரும் குற்றவாளிகளா...?. எத்தனை பேர் மீது பொய் வழக்கு புனையப்பட்டது. அப்போது பெண்களிடம் காவல் துறை எப்படி நடந்து கொண்டது. இது அனைத்தும் அவர்களின் மனசாட்சிக்கு தெரியும். நாங்கள் எதிர்பார்ப்பது நீதி. அது காலம் தாழ்த்தியாவது எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என்கிறார் சிஹாப்.“என் கணவர் சர்புதீனுக்கு இந்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் நிரபராதி. இதைப் பல இடங்களில் பல முறை சொல்லிவிட்டேன். அதை யாரும் கேட்கவும், நம்பவும் தயாரில்லை. சரி... இந்தப் பொது சமூகம் அவரைக் குற்றம் செய்தவராகவே கருதி கொள்ளட்டும். அவர் ஏறத்தாழ 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டார். இப்போது அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும். எங்களுக்கு இந்த சமூகத்தின் மீதும், நீதியின்பாலும் பெரும் நம்பிக்கை இருக்கிறது. இத்தனை நாள் கோவை குண்டிவெடிப்பு குறித்து பேசுவதே பெருங்குற்றமாக பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது பொதுவெளியில் அது குறித்த விவாதங்கள் துவங்கி இருப்பது மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது’’ என்கிறார் சுபைதா.

"கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக, 48 இஸ்லாமிய தண்டனை கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். விசாரணை கைதிகளின் எண்ணிகையையும் கணக்கிட்டால் ஆயிரத்தை தாண்டும். இவர்கள் வெளிவர சட்டத்தில் அனுமதி இருந்தும், பொது புத்தியின் காரணத்தினால் இவர்கள் வெளிவர முடியவில்லை" என்கிறார் அகில இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்பாதுரை.

“அபுதாகீர், 17 வயதில் சிறைக்குச் சென்றார். அவருக்கு இரண்டு கண்களும் தெரிவதில்லை. சிறையில் இருக்கும் திண்டுக்கல் மீரானுக்கு இரண்டு சீறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவர்கள் யாரையும் கருணை அடிப்படையில் கூட விடுதலை செய்ய அரசு தயாராக இல்லை. அரசும் காவல் துறையும் இஸ்லாமிய விசாரணைக் கைதிளை வேறு மாதிரி அணுகுகிறது. சச்சார் கமிட்டியும் தன் அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது” என்கிறார் அவர்.

’’முசாகீர் கைது செய்யப்பட்டது ஒரு கொலை வழக்கில். அதுவும் கொலை குற்றவாளிகளுக்கு வண்டி ஏற்பாடு செய்து கொடுத்ததாக. ஆனால் அவருக்கு இடைக்கால ஜாமீன் கொடுக்க கூட, காவல் துறை கடுமையாக ஆட்சேபித்தது. நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு அவர் இரண்டு நாள் இடைக்கால ஜாமீனில் வந்தார். அதுவும் அவர் உறவினரின் மரணத்திற்கு. இது போல் பல விசாரணை கைதிகள் கேட்பாரற்று சிறையில் இருக்கிறார்கள். நாங்கள் கேட்பததெல்லாம் பாரபட்சமற்ற நீதி. ஆனால், அனைத்து இஸ்லாமிய கைதிகளையும் ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கத்துடனே தொடர்புபடுத்தி பார்க்கிறது இந்த காவல் துறை” என்கிறார் சிஹாப்.

“இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 161 ன் படி. தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய அதிகாரமிருந்தும், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435 அதனை தடுக்கிறது. இந்த சட்டம் கூட்டாட்சி முறைக்கு எதிரானது. அதனால்தான் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் விடுதலையாக இயலவில்லை. இதனை ரத்து செய்ய வேண்டும்” என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் அ. மார்க்ஸ்.

இஸ்லாமிய கைதிகளும், அரசின் பார்வையும்!

’’இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்காக அண்மையில் தமிழக முதல்வரை சந்திக்க முயற்சித்தோம். ஆனால், அவர் தம் உதவியாளர் மூலமாக எங்கள் மனுக்களை பெற்றார். தி.மு.க தலைவர் கருணாநிதியும் தமக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லி எங்களை சந்திக்க மறுத்துவிட்டார். ஆனால், அதே நாளில் தேர்தல் நிதி கொடுக்க வந்த தி.மு.க வினரை சந்தித்து மிக உற்சாகமாக நிதி வாங்கினார். சில முற்போக்கு இயக்கங்களே இஸ்லாமிய கைதிகளுக்காக பேச மறுக்கும்போது இவர்கள் எங்களை சந்திக்க மறுத்தது பெரிய வியப்பை தரவில்லை!’’ என்கிறார் சுபைதா.

மரணத்தைவிட பெரிய தண்டனை!

சிஹாப்பிடம் பேசிக் கொண்டிருந்தபோது கண்ணீருடன் ஒரு விஷயத்தை சொன்னார். “மரணத்தைவிட கொடிய தண்டனை என்ன தெரியுமா...? தனிமைப்படுத்துவது. இது எம் அரசு அல்ல; எமக்கான சட்டம் அல்ல; எமக்கான நீதி அல்ல என்ற எண்ணத்தை ஒரு சாரார் மனதில் தொடர்ந்து ஏற்படுத்துவது. அதைதான் இந்த அரசுகளும், காவல் துறையும் செய்கிறது. பொது வெளியில் அதிகம் இஸ்லாமியர்கள் கலக்காமல் இருப்பதற்கும் அதுதான் காரணம்.”

ஒரு நிலையான குடியாட்சிக்கு அடிப்படை தேவை சட்டமும், நீதியும் பாரபட்சமற்று இருப்பது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் எள் முனை அளவும் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவர்கள் ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் என்ற காரணத்துகாகவும், பொது புத்தியை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் குரல்களுக்கு செவிசாய்க்காமல் இருப்பது ஆபத்தானது.

அதே நேரம் பொது புத்தியை மாற்றவும், அனைத்து சமூக மக்களிடம் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தவும் நீண்ட உரையாடல்களை அனைத்து சமூக மக்களுக்குள் ஏற்படுத்த வேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது!

- ஆதவன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-