அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
’வில்லன், அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர் எதுவும் வேணாம் சார்... நான் வேணும்னா வெயிட் பண்ணுறேன்... பண்ணுனா ஹீரோதான் சார்...!’ - தமிழ் சினிமாவில் இந்த பிரபல காமெடி பன்ச் உங்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும். அதுபோல் நாமும், ’என் பிள்ளைக்கு L.K.G., U.K.G. எதுவும் வேண்டாம். நேரா இஞ்சினியரிங் படிக்க வைச்சுக்குறேன்’ என்று சொல்லக் கூடும். அட என்ன மடத்தனமாக இருக்கிறது என்கிறீர்களா...? அப்படித்தான் இங்கே சில விஷயங்கள் நடக்கிறது!


எஸ்.வி.எஸ் யோகா கல்லூரியின் மூன்று மாணவிகளின் மர்ம சாவை தொடர்ந்து, தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளை தமிழகமெங்கும் பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது. இந்நிலையில், ‘தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழு’வின் இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் நிர்ணய அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில் இன்னும் இன்னும் அதிர்ச்சிகள்!அக்குழுவின் கட்டண நிர்ணயத்தின்படி, தமிழகத்தில் பெருநகரங்களில் உள்ள சில தனியார் பள்ளிகளின் கட்டணம், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான கட்டணத்தைவிட அதிகம். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியலுக்கான கட்டணம் 19 ஆயிரம் ரூபாயாக இருக்கும்போது, சென்னையில் உள்ள ஒரு முன்னணி பள்ளியின் L.K.G கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் என்று இந்தக் குழு நிர்ணயித்துள்ளது. சென்னையில் மட்டுமல்ல, மதுரை, ஈரோடு, மற்றும் கோவை ஆகிய மாநகரங்களில் உள்ள சில முன்னணி பள்ளிகளுக்கும், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் L.K.G-க்கான கல்வி ஆண்டு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“ஏற்கெனவே பெரும்பாலான தனியார் பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணத்தினை பல்வேறு காரணங்கள் கூறி வசூலித்து வரும் இச்சூழலில், இந்தப் புதிய கல்விக் கட்டணமானது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அதிக மனஅழுத்தம் தரும்” என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பல பெற்றோர்கள், குழு நிர்ணயித்த கட்டணத்தைதான் கட்டுவோம் என தமிழகம் முழுவதும் போராடி வருகிறார்கள். அவ்வாறு போராடுபவர்களின் குழந்தைகளுக்கு, பள்ளிகள் தங்களாலான அனைத்து வகை அழுத்தத்தையும் தந்து வருகிறது. அண்மையில், பொள்ளாச்சியில் நடந்த ஒரு மாணவர்கள் சந்திப்பில் ஒரு மாணவி, ‘என் அப்பா, குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைதான் கட்டுவேன் என்று நான் பயிலும் பள்ளிக்கு எதிராக போராடி வருகிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு, பள்ளி என் பிராக்டிகல் மதிப்பெண்களைக் குறைத்துவிடுமோ எனப் பயமாக இருக்கிறது’ என்றார்.

இத்தகைய சூழலில், குழு நிர்ணயித்த கட்டணமே விண்ணை முட்டும் அளவிற்கு கூடினால், விளைவுகள் எப்படி இருக்கும் என கற்பனை செய்து கொள்ளுங்கள்! இந்தச் சூழலில் உச்ச நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பும் கவலை அளிப்பதாக இருக்கிறது. அந்த தீர்ப்பானது சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இந்தக் குழுவின் கட்டண நிர்ணயத்திலிருந்து விலக்கு அளித்துள்ளது. கடிவாளம் இருந்தபோதே, சில சி.பி.எஸ்.இ பள்ளிகள் ஒன்றாம் வகுப்பிற்கே ஒரு லட்சத்துக்கும் அதிகமாக கட்டணம் வாங்கியது. இனி அவர்கள் எவ்வளவு கட்டணம் வாங்குவார்கள் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்!’’ என்று கவலை தெரிவிக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

ஆனால், "இந்தக் கட்டணம் அனைத்துப் பள்ளிகளுக்கான கட்டணம் இல்லை. ஒருசில பள்ளிகளுக்கு மட்டுமே இந்தக் குழு இக்கட்டணத்தை நிர்ணயத்துள்ளது. பல பள்ளிகளுக்கு குறைவான கட்டணத்தையே நிர்ணயம் செய்துள்ளது" என்கிறார் தனியார் பள்ளிகளின் நலச் சங்க தலைவரான லஷ்மணசுவாமி.

மாணவர்களின் பாதுகாப்புக்காக அதிகம் செலவு செய்ய நேரிடுவதால், கல்லூரிகளை விட பள்ளிகளின் நிர்வாக செலவு அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான். அதனால், நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு குறைந்தது ரூ 25,000-ம், கிராமப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ரூபாய் 10,000-ம் நிர்ணயிக்க வேண்டும் என்பது இவரது கோரிக்கை.


இந்த சூழ்நிலையில் என்னதான் தீர்வு? என்று பெற்றோர் தரப்பிலிருந்து கேட்கலாம்.

'அரசுப் பள்ளியில் சேர்க்க சொல்கிறீர்களா...? அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புதான் மோசமாக உள்ளதே...அங்கு எப்படி குழந்தைகளைச் சேர்க்க முடியும்? கடன் வாங்கியாவது, கட்டணத்தை கட்டினால்தான், குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்' என நாம் நம்புவோமானால், நாம் நம்மையும் அறியாமல் நம் பிள்ளைகளை பெரும் கடன் சுமையில் தள்ளுகிறோமென அர்த்தம்.

சரி... நீங்கள் உங்கள் குழந்தைகளின் பள்ளி ஆண்டு கட்டணமாக குறைந்தது ரூபாய் 20 ஆயிரத்தை தனியார் பள்ளிகளில் செலுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பகுதிகளில் இதுபோல் 20 பேர் இதே கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்கிறார்கள். அப்படியானால் ரூபாய் 4 லட்சம். இது எவ்வளவு பெரிய தொகை...! நீங்கள் 20 பேர் சேர்ந்து, தனியார் பள்ளியில் கொட்டும் அத் தொகையைக் கொண்டு உங்கள் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியின் கட்டமைப்பை தனியார் பள்ளிகளைவிட சிறந்ததாக ஆக்க முடியுமே..!
‘ஹா... அதெல்லாம் என் வேலையா...?’ என்று நீங்கள் நினைத்தால், இந்த சமூக கட்டமைப்பை நினைத்து ஆயுளுக்கும் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான். அது உங்கள் சந்ததியினரையும் தொடரும்.

மாற்றம் என்பது நாம் மாறுவது மட்டுமல்ல... நம்மைச் சார்ந்தவைகளையும் மாற்றுவதே!


- மு. நியாஸ் அகமது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-