அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காத்திருந்து, காத்திருந்து வயசும் ஏறிப்போச்சு. வேலையும் கிடைக்கவில்லை என பலர் புலம்புவது இன்றும் நம் காதில் ஒலிப்பதை காண முடிகிறது. மதுரை, விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் இன்றும் புலம்பித் தவிக்கின்றனர். படித்து விட்டு வேலையில்லாமல், வேலை தேடுபவர்கள் வசதிக்காக தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டதுதான் வேலைவாய்ப்பு அலுவலகம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகம், படித்தவர்களுக்கு வேலை தராத அலுவலகமாக மாறி வருகிறது. மாணவ, மாணவிகள் பள்ளியில் உயர்நிலை படிப்பான எஸ்எஸ்எல்சி படித்ததும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, அதற்கடுத்து மேல்நிலைப்படிப்பை தொடருகின்றனர். அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க வேண்டிய தேதியில் புதுப்பித்தும் வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து பிளஸ் 2, இளநிலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு என அடுத்தடுத்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். மேலும் தாங்கள் படித்திருக்கும் கூடுதல் கல்வித்தகுதியையும் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இன்று தமிழகத்தில் படித்த அனைவருக்கும் வேலை என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் பல பிரபல தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடத்துகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லும் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. அதனால்தான் படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தங்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் எப்படியும் இன்டர்வியூ அழைப்பு வரும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என காத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் வயதுதான் ஏறிக்கொண்டே போகிறது. வேலை எதுவும் கிடைத்தபாடில்லை.
போதாக்குறைக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என அவ்வப்ேபாது அறிக்கை வெளியிடுகிறது. அதுவும் காலியாக உள்ள சில இடங்களுக்கு மட்டுமே இதுபோன்ற அறிவிப்பு வெளியாகிறது. இன்டர்வியூ செல்பவர்கள், அங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்த்ததும், அதிர்ச்சியாகி விடுகின்றனர். ஒன்றிரண்டு காலிப்பணியிடங்களுக்கு கூட ஆயிரக்கணக்கானோர் வந்து காத்திருக்கும் அவலம் இன்றளவும் தொடர்கிறது. ஆம்... அந்தளவுக்கு இன்று படித்த பலர் வேலையின்றி உள்ளனர். அவ்வாறு இன்டர்வியூவுக்கு வருபவர்கள், தாங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 15 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். எங்களுக்கு முறையான இன்டர்வியூ கடிதம் வரவில்லை. நாங்களாக செய்தித்தாளில் வந்த தகவலை பார்த்துத் தான் வந்தோம். முன்கூட்டியே அழைப்பு அனுப்பியிருந்தால், இன்டர்வியூவுக்கு தயாராக படித்து வந்திருப்போம்.
தவறாமல் புதுப்பித்து வந்தும், எங்களுக்கு ஏன் இன்டர்வியூ கடிதம் வரவில்லை என தெரியவில்லை என புலம்பித் தவிக்கின்றனர். காத்திருந்து, காத்திருந்து எங்களுக்கு வயசு ஏறிவிட்டது. இனி நினைத்தாலும் அரசு வேலைக்கு செல்ல முடியாது. என்னைப் போன்ற பலர், தனியார் வேலைக்கு கூட செல்ல முடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்தவர்கள் புலம்பியபடி சென்றனர். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகம் முறையான இன்டர்வியூ அழைப்பை, முன்கூட்டியே அனுப்பி வேலையில்லாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பல ஆயிரக்கணக்கானோரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். அதுவே, வேலையில்லாமல் காத்திருக்கும் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு விடுக்கும் கோரிக்கை.
32 ஆண்டாக காத்திருக்கும் 48 வயது பெண்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை இபி. காலனி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் குமுதவள்ளி தாயார் (48). இவர், மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1984ல் முதன்முதலில் எஸ்எஸ்எல்சி படிப்பை பதிவு செய்தார். அடுத்தடுத்து பிளஸ் 2 மற்றும் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு என பதிவு செய்தார். பின்னர் அதே பதிவு எண்ணில் விருதுநகர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1994ல் பதிவு செய்தார். இவர் எவ்வித விடுதலும் இன்றி தவறாமல் 29 ஆண்டுகளாக புதுப்பித்து வருகிறார். ஆனால் இவருக்கு இன்று வரை ஒரு இன்டர்வியூ கடிதம் கூட வரவில்லை.
அரசு வேலை கிடைக்கும் என்ற ஆர்வத்தில் 32 ஆண்டுகளாக பதிவு செய்து வந்த இவருக்கு காத்திருந்து, காத்திருந்து ஏமாற்றம் தான் மிஞ்சியது. தன்னைப்போல் பலரும் இதுபோன்ற நிலைமையில் உள்ளனர் என புலம்பித் தவிக்கிறார். தனக்கு இன்டர்வியூ கடிதம் அனுப்பாத காரணத்தை தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் தெரிவிக்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனக்கு நேர்ந்துள்ள நிலைமை குறித்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலக பொது தகவல் அலுவலர் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அரசு சார்புச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-