அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் டிவி, பிரிஜ், வாஷிங்மெஷின், ஸ்மார்ட்போன்கள் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு திடீரென அதல பாதாளத்துக்கு செல்வதும் பின்னர் சற்று உயர்வதுமாக இருக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் புத்தாண்டு தினத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 66.14ஆக இருந்தது. பின்னர் கடந்த மாத மத்தியில் 67 ரூபாயை தாண்டியது. தொடர்ந்து மேலும் சரிந்து 68 ரூபாயை தாண்டியது. இப்படி ஏற்றத்தாழ்வுடன் இருப்பது ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கிறது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அசெம்பிள் செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளிநாட்டு பிராண்ட் பிரிட்ஜ், டிவி, வாஷிங்மெஷின்கள் பொருட்களாக இறக்குமதி செய்யும்போது செலவு அதிகம் என்பதால், உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிளிங் செய்யப்படுகின்றன. செலவு குறைப்பு நடவடிக்கையாக சில நிறுவனங்கள் இவ்வாறு செய்தாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் உதிரிபாக இறக்குமதியாக இருந்தாலும் இழப்பு ஏற்படுகிறது என வீட்டு உபயோக தயாரிப்பு நிறுவனங்கள் சில தெரிவிக்கின்றன.

‘‘அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவது இந்திய எலக்ட்ரானிக் சந்தையில் பெரும் சவாலானதாக இருக்கிறது. அதிலும், ரூபாய் மதிப்பு 68 ஆக வீழ்ச்சி அடைந்திருப்பது பெரும் பாதிப்பையே ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு மதிப்பளித்து விலையை ஏற்றாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்து வருகிறோம். இதே நிலை தொடர்ந்தால் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை’’ என ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனை செய்துவரும் நிறுவனம் தரப்பில் கூறுகையில், ‘‘இப்போதுள்ள ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை வைத்து கணக்கிடும்போது விலையை ஏற்றாமல் இருக்க முடியாது. ஆனாலும், இது ஸ்திரத்தன்மையில் இல்லாமல் அடிக்கடி வீழ்ச்சியையும் ஏற்றத்தையும் சந்தித்து வருகிறது. இப்படி இருக்கும்போது எதை வைத்து முடிவு செய்வது என தெரியவில்லை’’ என்றனர்.

இருந்தாலும் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சில தங்களது வர்த்தக பங்குதாரர்களிடம் விலை உயர்வு குறித்து முன்னறிவிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மொபைல் சில்லரை விற்பனையில் ஈடுபட்டுவரும் பிரபல மொபைல் போன் நிறுவனத்தின் நேரடி விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது சந்தையில் உள்ள மாடல்களை பொறுத்தவரை விலை உயர்வு பற்றிய அறிவிப்பு எதுவும் வரவில்லை. அதேநேரத்தில், புதிதாக வர இருக்கும் மாடல்கள் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கருத்தில் கொண்டு கூடுதல் விலையே நிர்ணயம் செய்யப்படும் என நிறுவனங்கள் தரப்பில் கூறுகின்றனர்’’ என்றனர்.

எலக்ட்ரானிக் சந்தை நிபுணர்கள் இதுகுறித்து கூறியதாவது: ரூபாய் மதிப்பு ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தை வெகுவாகவே பாதித்திருக்கிறது. ஒரே நிலையில் இல்லாததால் உடனடி முடிவு எடுக்க முடியவில்லை. இது தற்காலிக பாதிப்புதான். அதேநேரத்தில் திருமண சீசன், கோடை காலத்தில் விற்பனை அதிகரிக்கும்போது தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்திருந்தால் இழப்பும் அதிகமாகத்தான் இருக்கும். அதற்கு முன்னதாகவே இறுதி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பல நிறுவனங்கள் இருக்கின்றன.

எனவே, வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்களான டிவி, பிரிஜ், வாஷிங்மெஷின் மற்றும் ஸ்மார்ட்போன்கள் விலை 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவ்வாறு சந்தை நிபுணர்கள் கூறினர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-