அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
புதுடெல்லி,

அபுதாபி பட்டத்து இளவரசர் 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். பிரதமர் மோடி விமானநிலையம் சென்று அவரை வரவேற்றார்.

இளவரசர் வருகை

அபுதாபி பட்டத்து இளவரசரும், அந்நாட்டின் செல்வாக்குமிக்க தலைவருமாக இருப்பவர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான். இவர் முதல்முறையாக நேற்று இந்தியா வந்தார்.

3 நாள் பயணமாக வந்துள்ள இளவரசர், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

பிரதமர் வரவேற்பு

அபுதாபி இளவரசரை வரவேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரடியாக விமானநிலையத்திற்கு சென்றார். அங்கு இளவரசரை பிரதமர் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிறப்பு நண்பருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி நேரடியாக சென்று இளவரசரை வரவேற்றார்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அபுதாபி இளவரசரின் இந்திய வருகை குறித்து மோடி தனது டுவிட்டர் சமூகவலைதளத்தில், ‘இது இளவரசர் ஷேக் முகம்மது முதல் இந்திய பயணம். அவர் குடும்பத்துடன் வந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. அவர் ஒரு தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவர். இளவரசரின் இந்திய வருகையின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு வலுப்பெறும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று இளவரசரை சந்தித்து பேசினார்.

முக்கிய ஒப்பந்தங்கள்

பிரதமர் நரேந்திர மோடியை அபுதாபி பட்டத்து இளவரசர் இன்று (வியாழக்கிழமை) சந்தித்து பேசுகிறார்.

அப்போது அணுசக்தி, எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், ரெயில்வே உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. மேலும் இந்த சந்திப்பின்போது, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை ஒடுக்குவது, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார். 34 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பது நினைவுகூரத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-