அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அபலைப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிஜ சம்பவம் இது. பெண்கள் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரை.காஞ்சிரபுரத்தை சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் சுஜி (பெயர் மாற்றம்). சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்டார். இதனால் குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு சுஜியின் தாய், தம்பி மீது விழுந்தது. 'பட்டகாலிலேபடும், கெட்டக்குடியே கெடும்' என்பதற்கு ஏற்ப சுஜியின் தம்பி விபத்தில் சிக்கி இறந்துவிட, குடும்பம் நிலைகுலைந்து போனது. இந்த கவலையில் சுஜியின் தாய் படுத்தபடுக்கையாகி விட்டார். ஆதரவின்றி தவித்தார் சுஜி. அன்பான வார்த்தைக்கும், ஆறுதலான பேச்சுக்கும் ஏங்கியது அவரது மனம்.

சுஜியின் முழுக்கதையும் தெரிந்த விநாயகம் (பெயர் மாற்றம்), 'உனக்கு வேலை வாங்கித் தருகிறேன். உன் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு' என்று அறிமுகமாகிறார். இவர்களது நட்பு ஒரு மாதக்காலம் போனிலும், நேரிலும் தொடர்கிறது. ஆதரவின்றி தவித்த சுஜி, விநாயகத்தை முழுமையாக நம்புகிறார். இதன்பிறகு அவரது உண்மை முகம் வெளியில் தெரியவரும் போது சுஜி, வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நிற்கதியாகிறார். சில மாதங்களுக்கு முன்பு, சுஜிக்கு விநாயகத்திடமிருந்து போன் அழைப்பு. உடனே புறப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வா என்று விநாயகம் சொல்ல... சுஜியும் அங்கு கிளம்பி செல்கிறார். சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட அரக்கோணம் மின்சார ரயிலில் விநாயகமும், சுஜியும் பயணித்தனர். அரக்கோணத்தில் இறங்கிய அவர்களுடன் இன்னும் மூன்று பேர் அங்கு வந்து விநாயகத்துடன் கைகுலுக்கிறார்கள். அவர்களை தன்னுடைய நண்பர்கள் என்று சுஜியிடம் அறிமுகப்படுத்துகிறார் விநாயகம். அப்போது கூட சுஜிக்கு விநாயகத்தின் மீது சந்தேகம் வரவில்லை.ரயில் நிலையத்திலிருந்து ஒற்றையடிப்பாதையில் அவர்கள் செல்ல.... ஆட்கள் அரவமற்ற அந்த இடத்தை அவர்கள் அடைந்த போது சுஜிக்கு மனதில் திக் என்ற பயம் தொற்றிக் கொள்கிறது. அதை விநாயகத்திடம் நேரிடையாக அவர் கேட்க, விநாயகத்தின் பார்வையும், பேச்சும் வேறுவிதமாக இருப்பதை சுஜி உணர்ந்தார். சீக்கிரம் இங்கிருந்து செல்வோம் என்று சுஜி அவசரப்படுத்த, விநாயகம் உனக்கு வேறு உலகத்தை காட்டப்போகிறோம் என்று சுஜியிடம் சொல்லி அத்துமீறுகிறார். சுஜியும் முடிந்தவரை அந்தக்காட்டில் அவர்களுடன் போராடி கடைசியில் தோற்றுப் போகிறார்.

பிறகு விநாயகம், சுஜியிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு தன்னுடைய நண்பன் ரமேசை அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார். அந்த கசப்பான சம்பவத்தை மறந்து ரமேசும், சுஜியும் குடும்ப வாழ்க்கையை தொடங்க, அன்பு பரிசாக ஆண் குழந்தை பிறந்தது. இதன்பிறகும் விநாயகம் மீண்டும் சுஜியின் வாழ்க்கையில் விளையாடத் தொடங்குகிறார். இன்னொரு நண்பர் மனோகருக்கு சுஜியை திருமணம் செய்து வைக்க உறுதி அளித்த விநாயகம், அதற்கான ஏற்பாடுகளை செய்ய... சுஜி, ரமேஷ் வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது.

வாழவழியின்றி தவித்த சுஜி, தன்னுடைய குழந்தையை ஆவடியில் ஒரு தம்பதியிடம் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார். தன்னுடைய வாழ்க்கையை அழித்த விநாயகத்துக்கு தக்கப்பாடம் புகட்ட நினைத்த சுஜியின் அதிரடி ஆக்சனால் இப்போது தலைமறைவு வாழ்க்கையை நடத்துகிறார்கள் விநாயகம், ரமேஷ், மனோகர்.

தன்னைப் போல இன்னொரு அபலைப் பெண்ணுக்கு வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று விநாயகத்திடம் போனில் பேசிய சுஜி, மெரீனா கடற்கரைக்கு வரவழைக்கிறார். அங்கு வந்த விநாயகமும், மனோகரையும் கையும் களவுமாக பிடிக்கிறார். ஆனால் சுஜியிடமிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

சுஜியை ஏமாற்றிய விநாயகம் அன்ட் குரூப்ஸ் பற்றிய அதிர்ச்சித் தகவல்களை நம்மிடம் சொன்னார் அவரால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்.

"மிஸ்டு கால் கொடுத்து இளம்பெண்களிடம் பேசுவார்கள். நன்றாக பேசுபவர்களிடம் அவர்களின் முழுவிவரத்தை கேட்கும் அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்ப பின்னணி மற்றும் பிரச்னைகளை தெரிந்து கொள்வார்கள். பிறகு உதவி செய்வது போல நடித்து அந்த பெண்ணின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கி விடுவார்கள். இவர்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் யாரும் தைரியமாக போலீஸில் புகார் கொடுக்கவில்லை. இதனால் இந்த கும்பலின் அட்டூழியத்தால் பல பெண்கள் ஏமாந்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு நானே நல்லதொரு உதாரணம்" என்றார் கண்ணீருடன்.

விரைவில் சுஜி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கவுள்ளார். அதன்பிறகே இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-எஸ்.மகேஷ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-