அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...







வெளிநாடு செல்லும் பெண்கள் யாரும் அங்கே ராணி போன்று நடாத்தப்படுவதில்லை காசு கொடுத்து வாங்கிய அடிமையாகவே நடாத்தப்படுகின்றார்கள். நிறைய நம் நாட்டுப் பெண்கள் ஊதியம் வழங்கப்படாமல் பல வருடங்களாக உடல், உள ரீதியாக பல சித்திரவதைகளையும் அனுபவித்துக் கொண்டு எந்த வித பொருளாதார முன்னேற்றமும் இன்றி சென்றதை விடவும் மோசமாக அவலப்பட்டுத்துத்தான் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

என்ற ரீதியில் அவர்கள் பாலியல் ரீதியாகவே அதிகமாக துன்புறுத்தப்படுகின்றார்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அவர்களது வீட்டு எஜமானர்களால் மாத்திரமன்றி அந்த எஜமானரின் பிள்ளைகளாலும் அங்கே இருக்கும் நம் நாட்டவர்களாலும், ஏனைய நாட்டவர்களாலும் அதிகமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றார்கள். கற்பிழந்தும், கருத்தரித்தும், தரித்த கருவை மரித்தும் பெண்கள் அங்கே உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்பப்படுகின்றார்கள், கஷ்டப்படுகின்றார்கள், வாழ்க்கையில் நஷ்டப்படுகின்றார்கள்.

இன்று வளைகுடா நாடுகளுக்கு பணிப் பெண்களாகச் செல்லும் அதிகமானோர்களில் கணவனை இழந்தவர்களும், கணவனால் கைவிடப்பட்டவர்களும், கணவனால் விவாகரத்துப் பெற்றவர்களும், குமருப் பெண்களைப் வைத்துக் கொண்டு அவர்களை கரை சேர்க்க முடியாதவர்களும், கணவன் இருந்தும் அவரது கையாலாகத்தனத்தின் காரணமாக குடும்ப சுமையை சுமந்த வீ்ட்டுத் தலைவிகளும், குடும்பத்தால் கவனிக்கப்படாதவர்களும் மற்றும் கணவன்மார்களால் வழியனுப்பி வைக்கப்பட்ட பெண்களுமே அதிகம் அதிகமாக இன்று வெளிநாடு சென்று கொண்டிருக்கின்றார்கள் .

சில ஆண்கள் தங்களது மனைவியர்களின் சம்பாத்தியத்தில் கால் ஆட்டி ஆட்டி உண்டு குடித்து வாழ்வதற்காக மனைவிமார்களை வெட்கமில்லாது வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டு பிறரின் பாலியல் தேவைகளுக்கு தங்களது மனைவிமார்கள் இரையாக வழிசமைத்துக் கொடுக்கின்றார்கள்.

என்ன மனிதர்கள் நாம் … ??? இன்னும் நம் சகோதரிகளின் வாழ்வைப் பற்றி, மனைவியர்களின் வாழ்வைப் பற்றி சிந்திக்க தவறிக் கொண்டுதானே இருக்கின்றோம்.

நம் சமூகத்தில் இருக்கக் கூடிய அத்தனை பேரும் இது விடயத்தில் அதிகம் அதிகமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பெண்கள் வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். எங்களது வீட்டில் இருந்து யாரும் வெளிநாடு செல்லவில்லை ஆகவே நாங்கள் ஏன் அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று வெளிநாடு செல்லும் பெண்கள் விடயத்தில் நாம் சுயநலமாக இருந்து விட முடியாது.

ஒரு பெண் பிழைப்புக்காக பல ஆயிரம் மையில் கடந்து தனித்துச் சென்று அடிமை போல் அதுவும் வெறும் 600 றியால் 700 றியால் சம்பளத்துக்குச் வேலை செய்யச் செல்கிறாள் என்றால் அவளது குடும்பத்தில் உள்ள ஆண்வர்க்கமும், அவள் செல்கையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சமூகமாகிய நாமும் வெட்கித்தலை குணிய வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் கழுத்து வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட றுசானா நபீக் தொடக்கம் இன்று கல்லெறிந்து கொல்லப்படும் தண்டனை வழங்கப்பட்டுள்ள தெஹிவளைப் பெண் வரை அங்கே அவலப்படும் அத்தனை பேருடைய சாபாத்துக்கும் அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் செல்வதை தடுக்க முற்படாதிருந்த அந்தந்த பிரதேச தனவந்தர்களும், உலமாக்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும், ஸகாத் நிதியங்களும், சீதனம் என்ற பெயரில் விலைபேசும் பெற்றோர்களும் , இளைஞர்களுமே பொறுப்புக் கூற வேண்டும்.

ஒரு பெண் தனது கணவர் மற்றும் தந்தை, சகோதரர்கள் போன்ற மஹ்ரமான ஆண் துணையின்றி தனித்து எங்கும் செல்வதை இஸ்லாம் தடை செய்திருக்கின்றது அப்படியிருக்கையில் நம் பிரதேசத்தில் இருந்து ஒரு பெண் வெளிநாடு செல்கிறாள் என்றால் அந்த குடும்பத்தில் இருக்கும் ஆண்களும், அந்தப் பிரதேசத்து உலமாக்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும், பொறுப்புவாய்ந்த பதவிகளில் இருப்பவர்களும் ஏன் அனுமதிளிக்கிறார்கள் … ??? இந்தப் பெண்கள் வெளிநாடுகளில் அவலப்படும் போது அதற்கு நாம் அத்தனை பேரும் பொறுப்புதாரிகள் அல்லவா … ??? நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே இது நாம் வெறுமனே வாசித்து விட்டு பேசிவிட்டுச், கேட்டு விட்டுச் செல்லும் மிகச்சாதாரணமான விடயமல்ல.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-