அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சென்னை : அதிமுக கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகள், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே சீட் வழங்கப்படும். இந்த நிபந்தனையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சீட்டு ஒதுக்கப்படும் என்று அதிமுக தலைமை திடீரென நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக கூட்டணியில் இணைய கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளதால், தமிழகத்தில் அரசியல் கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது மற்றும் கூட்டணியில் இணைவது உள்ளிட்ட பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தற்போதைய ஆளுங்கட்சியான அதிமுக, கடந்த ஆண்டு இறுதி வரை நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்றது போன்று, சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம் என்று கூறி வந்தது. ஆனால், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளுக்கு பிறகு தனித்து போட்டியிடும் திட்டத்தை கைவிட்டு விட்டதாகவே கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் இறுதியில் சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, “2009, 2011ம் ஆண்டு தேர்தலில் ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றோம். அதேபோன்று வரும் சட்டமன்ற தேர்தலில் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நான் சரியான முடிவை எடுப்பேன்” என்று கூறினார். ஜெயலலிதா இப்படி பேசியது, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயங்குவதையே காட்டுவதாக அரசியல் பிரமுகர்கள் கூறினர்.

ஆனாலும், வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும், அதே நேரத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதை மனதில் வைத்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கட்சி மேலிடம் மூத்த அமைச்சர்களுக்கு கட்டளையிட்டுள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணி கட்சியில் இணைந்து போட்டியிட விரும்பி பேச்சுவார்த்தைக்கு வரும் தலைவர்களிடம் மூத்த அமைச்சர்கள் வைக்கும் முதல் கோரிக்கையே, “நீங்கள் கேட்கும் தொகுதியை ஜெயலலிதாவிடம் கேட்டு வாங்கி தருகிறோம். ஆனால் நீங்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்” என்றுதான் கூறுகிறார்களாம். கடந்த தேர்தலில் கூட சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, இந்திய குடியரசு கட்சி செ.கு.தமிழரசன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி மட்டுமே அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு தனி சின்னத்தில் போட்டியிட்டன.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி கூட அதிமுக கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது. அவர்களிடம் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கையே வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தேசிய கட்சியில் இருந்து பிரிந்து தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கியுள்ள தலைவரும் அதிமுக கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்தார். அவருக்கு முதலில் ஒரு கையை விரித்து, இவ்வளவு சீட்தான் தர முடியும் என்று கூறினர். முடியாது, நாங்கள் வேறு கூட்டணிக்கு செல்கிறோம் என்றதால், தற்போது 12 சீட் வரை கொடுக்க அதிமுக மேலிடம் சம்மதம் தெரிவித்துள்ளதாம். ஆனால், இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தினால் மட்டுமே இவ்வளவு சீட் என்று திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால், அந்த தலைவர் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். இப்படி, அதிமுக கூட்டணியில் சேரும் அனைத்து கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க ஜெயலலிதா திட்டமிட்டு காய் நகர்த்தி வருவது, அதிமுக கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  more 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-