அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இன்றைய கால கட்டத்தில் விளக்கு என்றால் அது மின்சார விளக்குதான். மின்சாரம் இல்லாத வாழ்க்கையை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மின்சாரம் இல்லையென்றால், உலக இயக்கமே இன்று ஸ்தம்பித்து போய் விடும். 1831ல், காப்பிடப்பட்ட தாமிரக்கம்பி சுருளின் இடையே காந்தத்தை முன்னும் பின்னும் நகர்த்தினால் மின்சக்தி உற்பத்தி ஆகும் என்பதை மைக்கேல் பாரடே கண்டுபிடித்து வெளியிட்டார். 1858ல் அருவிகளின் ஊடே டர்பைன்களை சுழலச் செய்து மின்சக்தி பெற முடியும் என்பதை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து நீர் மின்சாரம் உருவானது.

பிறகு நிலக்கரியை எரித்து, நீரைக் கொதிக்க வைத்து, அதில் கிடைக்கும் நீராவியைக் கொண்டு டர்பைனை சுழல வைத்தார்கள். அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்தார்கள். காலப்போக்கில் அணு சக்தியை பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து காற்றின் மூலமும். அந்த வகையில் நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய மின் உற்பத்திக்கான அடித்தளம், சூரிய ஆற்றல் எனப்படும் சோலார் சக்தி.

அது என்ன சூரிய ஆற்றல்?

சிலிகானை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட போட்டோ வோல்ட்டை செல்களின் மீது சூரிய ஒளி கதிர்கள் விழும்போது அது மின்சாரமாக மாற்றப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க இரண்டு முக்கிய வழிகள் உண்டு. ஒன்று நேரடியாக சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவது. இதற்கு போட்டோ வோல்டாயிக் என்று சொல்வார்கள். இரண்டாவது கொஞ்சம் சுற்றி வளைப்பது. அதாவது, சூரிய ஒளியால் தண்ணீரை ஆவியாக்கி, அதை வைத்து டர்பைன் என்ற சுழலியை சுற்ற வைத்து மின்சாரம் தயாரிப்பது.

சூரிய ஒளியானது சோலார் பேனல் மீது பட்டு அதிலிருந்து மின்சாரம் வரும். இது பகலில் மட்டும் பயன்பாட்டை தரும். நமக்கு இரவில்தான் மின்சாரம் தேவை. ஆகவே பகலில் கிடைக்கும் மின்சாரத்தை சேமித்து வைத்து, அதை தேவைக்கேற்ப கொடுக்க பேட்டரியை பயன்படுத்த வேண்டும்.

4 டியூப் லைட், ஒரு மின்விசிறி, ஒரு டிவி, ஒரு ஏசி, ஒரு கம்ப்யூட்டர், இரண்டு மணி நேரம் தண்ணீர் ஏற்றும் மின் மோட்டார் ஆகிய மின் சாதனங்களை 12 மணி நேரம் சூரியஒளி மூலம் பயன்படுத்த – சோலார் தகடுகள், பேட்டரி என அமைக்க – சுமாராக ரூ.2 லட்சம் வரை செலவாகும். மானியமாக 81 ஆயிரம் ரூபாயை அரசு தரும். மீதமுள்ள ரூ.1.19 லட்சத்தை நாம்தான் செலவு செய்ய வேண்டும். ஒரு முறை செலவு செய்தால் போதும் குறைந்தது 20 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பெற முடியும். மழைக்காலங்களில் சோலார் தகடுகள் இயங்குமா என்ற தயக்கம் வேண்டாம். காரணம் சூரிய ஒளியில் இருக்கும் போட்டான் கதிர்களை கிரகித்துதான் மின்சாரம்
தயாரிக்கப்படுகிறது.

எனவே பகலில் மேகமூட்டமோ, மழையோ இருந்தாலும் சோலார் தகடுகள் போட்டானை கிரகித்து மின்சாரத்தை உற்பத்தி செய்து விடும். இந்த வகையில் சூரிய ஆற்றலை பயன்படுத்த லட்சக்கணக்கில் செலவாகும் என்பதால் சூரிய மின்சாரம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இந்த நிலையை மாற்றும் வகையில் – ரூ.500 மதிப்பீட்டில் 5 ஆண்டுக்கு பயன்படும் வகையில் சூரிய சக்தி விளக்கை
கண்டுபிடித்துள்ளார் பி.டெக் பட்டதாரியான செய்யது தாஜூதீன்.

செங்கல்பட்டுதான் சொந்த ஊர். அப்பா அஹசனூதீன், கால்நடை மருத்துவர். அம்மா, ஜெரினாசுல்தான். நான் மூணாவது பையன். அன்பான, தங்கமான குடும்பம். செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளில படிச்சுட்டு சென்னை வந்தேன். பி.டெக் முடிச்சேன். படிப்பு முடிஞ்சதும் ஒருநாள் இணையதளத்துல இருந்தப்ப தென்அமெரிக்காவை சேர்ந்த ஒரு நண்பர் அறிமுகமானார்.

நண்பர்களானோம். மூணு வருஷங்களுக்கு முன்னாடி அவரோட வழிகாட்டுதலோட எரியும் விளக்கை சூரிய ஒளில தயாரிச்சேன். குறைஞ்ச செலவுதான் ஆச்சு. முதல்ல வீட்டுல பயன்படுத்தினேன். நல்ல பலன். உடனே செங்கல்பட்டுல இருந்த நண்பர்கள், உறவினர்களுக்கு எல்லாம் செய்து காட்டினேன். எல்லாருக்குமே பரம திருப்தி. இந்த நேரத்துல சமூக அக்கறை கொண்ட பார்த்திபன் அறிமுகமானார்.

‘ரொம்ப குறைஞ்ச செலவுல ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தறா மாதிரி சூரிய விளக்கை தயாரிச்சிருக்கீங்க. இது ஏழைகளுக்கு பயன்படணும்’னு சொன்னார். என்னுடைய நோக்கமும் அதுவாகவே இருந்ததால மும்பைக்கு போனேன். தாராவில பத்து நாட்கள் வரை தங்கினேன். அங்க இருந்த சிமென்ட் கூரை வீடுகளுக்கு இந்த சூரிய விளக்கை தயாரிச்சுக் கொடுத்தேன்…’’ என்று சொல்லும் தாஜூதீன், ரூ.20 செலவில் இருட்டான வீடுகளில் பகலில் மட்டும் வெளிச்சம் கொடுக்கும் வகையில் சூரிய மின்விளக்கை செய்து கொடுத்திருக்கிறார். இதன் செய்முறையையும் அங்குள்ள இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

ரூ.20 மதிப்புள்ள சூரிய விளக்கு செய்யும் முறை:

முதலில் ஏ4 சீட் அளவில் புதிய அலுமினிய தகடு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலியான பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும். பாட்டில் அளவு தகட்டில் துளையிட்டு, அதனுள் பாட்டிலை பொருத்த வேண்டும். கீழ்பகுதி முக்கால் பரப்பும், மேல் பகுதி கால் பங்கும் கொண்டிருக்க வேண்டும்.

பின்னர் பாட்டிலில் 90% சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும். அந்த நீரில் 20 எம்.எல், பிளீச்சிங் கலவையை சேர்க்க வேண்டும். இதன் பிறகு அந்த பாட்டிலை வீட்டின் மேற்கூரையில் துளையிட்டு பொருத்த வேண்டும். பாட்டிலின் கீழ்பகுதி வீட்டிற்குள்ளும், மேல் பகுதி சூரிய வெளிச்சம் படும்படி கூரையின் மேற்பரப்பிலும் இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் பாட்டிலின் கலவை மேல்பட்டு, பாட்டிலின் கீழ் பகுதி 50 வால்ட் வெளிச்சத்தை கொடுக்கும்.

இந்த விளக்கு 5 வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும். இத்தகைய சூரிய ஒளி விளக்குகளை தாராவி ராஜீவ்காந்தி நகரில் சுமார் 50 வீடுகளுக்கு பொருத்தியுள்ளார் தாஜூதீன். இதனிடையே இரவிலும் எரியும் வகையில் சூரிய விளக்கை இப்போது கண்டுபிடித்துள்ளார் என்பதுதான் ஹைலைட். இதற்கு ரூ.500 மட்டுமே செலவாகும்.

செய்யும் முறை:

ஏ4 சீட் புதிய அலுமினிய தகடு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலியான பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும். தகட்டில் பாட்டில் அளவு துளையிட்டு, அதில் பாட்டிலை பொருத்த வேண்டும். கீழ்பகுதி முக்கால் பரப்பும், மேல் பகுதி கால் பங்கும் கொண்டிருக்க வேண்டும். காலியான பாட்டிலுக்குள் 90 விழுக்காடு சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதனுள் 20 எம்.எல், பிளீச்சிங் கலவையை சேர்க்க வேண்டும். அதன் பின்னர் 5 வால்ட் எல்இடி பல்புகள் 6 வாங்கி அதை ஒயர் மூலம் சால்டிரிங் கொண்டு இணைக்க வேண்டும். பிறகு இதை வெள்ளை நிற டியூப்புக்குள் வைத்து பாட்டிலுக்குள் பொருத்த வேண்டும்.

அந்த வெள்ளை டியூப்பை 2 அடி பிளாஸ்டிக் குழாயோடு இணைத்து, அந்த குழாயை பாட்டில் மேற்பரப்பில் இருக்கும்படி செய்ய வேண்டும். குழாயின் மேற்பரப்பில் பசையுடன் கூடிய செல்போன் ரீ ஜார்ஜபிள்
பேட்டரியை இணைக்க வேண்டும். சோலார் பேனலை (சூரிய ஒளியை உள் வாங்கும் தகடு) பொருத்த வேண்டும். பாட்டிலின் பக்கவாட்டில் ஆன், ஆஃப் சுவிட்ச் ஒன்றை இணைத்துவிட்டு பாட்டிலின் கீழ்பகுதி வீட்டிற்குள்ளும், மேல் பகுதி சூரிய வெளிச்சம் படும்படியும், கூரையின் மேற்பரப்பில் பொருத்த வேண்டும்.

‘‘சூரிய ஒளியை சோலார் பேனல் உள்வாங்கி பேட்டரில சேமிக்கும். நைட் சுவிட்ச் போட்டதும் வெளிச்சம் வரும். இதுக்கான செலவு வெறும் ரூ.500தான். ஆனா, ஐந்து வருடங்கள் தாக்குப் பிடித்து வெளிச்சம் தரும்…’’ என்கிறார் தாஜூதீன். ‘‘இதை இந்தியா முழுக்க கொண்டு போகப் போறோம். இளைஞர்களுக்கு செய்முறை பயிற்சி கொடுத்து அவங்கவங்க பகுதில இதை மக்களுக்கு செய்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப் போறோம்…’’ சிரித்தபடி சொல்கிறார் தாஜூதீன். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-