அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 


சென்னை: நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால், வருகிற 26ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக 22 ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜேக்ேடா அறிவித்துள்ளது. இதனால், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வுகள் சரியாக நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 53000 பள்ளிகளில் பணியாற்றும் 2 லட்சம் ஆசிரியர்கள் கடந்த 5 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால் அரசு அவர்களை அழைத்துப் பேசவில்லை. இதனால் 22 சங்கங்கள் ஒன்றிணைந்து ஜேக்டோ அமைப்பை மீண்டும் தொடங்கினர். 5 கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு மவுனமாக இருந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தொடர் மறியல் போராட்டத்தில் ஜேக்டோ அமைப்பினர் ஈடுபட்டனர்.

அதில் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கைதாயினர். அதற்கு பிறகு கடந்த 9ம் தேதி ஜேக்டோ அமைப்பினரை அழைத்து அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் எந்த முடிவும் எட்டவில்லை. சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியாகும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர். நேற்று முன்தினம் ஜேக்டோ அமைப்பின் உயர் மட்டக் குழு சென்னையில் கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்தது. கூட்டத்துக்கு பிறகு உயர்மட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அனைவரும், ‘‘இனிமேலும் காத்திருக்க முடியாது. அதிமுக அரசு தொடர்ந்து ஆசிரியர்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. அதனால் அரசு ஊழியர்களைப்போல நாமும் போராட்டம் தொடர வேண்டும் என்றே கருத்து தெரிவித்தனர்.

முதலில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, அடுத்து வருகிற 25ம் தேதி பேரணி நடத்தி கோட்டையை முற்றுகையிடுவது, இறுதியில் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதை முறையாக ஜேக்டோ அறிவித்தது. ஆசிரியர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது பிளஸ்2 செய்முறைத் தேர்வு நடக்கிறது. அடுத்து 10ம் வகுப்புக்கான செய்முறைத்தேர்வு தொடங்க உள்ளது. மார்ச் 4ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 1ம் தேதி தேர்வு முடிவடையும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி முடிவடைய உள்ளது. இந்த தேர்வுகளில் பறக்கும்படை, கேள்வித்தாள் கட்டுக்காப்பு மைய பொறுப்பு, தேர்வு அறை கண்காணிப்பு, தேர்வு மைய பொறுப்பு ஆகியவற்றில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் தான் ஈடுபடுவார்கள்.

அவர்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுத் தேர்வுகள் நடக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பேரவையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று சில சலுகைகளை அறிவித்தார். இது குறித்து, ஜேக்டோ அமைப்பின் உயர்மட்டக் குழுவின் சுழல் முறைத் தலைவர் தியாகராஜன், உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்கள் பேட்ரிக் ரைமண்ட், ரங்கராஜன், தாஸ் ஆகியோர் கூறியதாவது: தற்போது நடக்கும் சட்டப் பேரவை கூட்டத்திலும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க நேற்று முன்தினம் சென்னையில் உயர்மட்டக் குழுவைக் கூட்டி முடிவுகளை எடுத்துள்ளோம். பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்து கண்காணிக்க கமிட்டி அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு முன்னோடியாக தமிழக அரசுதான் கடந்த 2003ம் ஆண்டு புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்தியது. அப்போது இந்த கமிட்டி அமைத்து ஏன் ஆய்வு செய்யவில்லை என்பது புரியவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளையும் பணப்பயன்களையும் சலுகைகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டியது அரசின் கடமை. புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆறாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கும் வழங்க அரசு முன் வர வேண்டும்.அதனால் இன்று அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது.

25ம் தேதி சென்னை கோட்டை முன்பு பெரிய அளவில் பேரணி நடத்துவது என முடிவு செய்துள்ளோம். இதற்கு பிறகும் அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், 26ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு ஜேக்டோ அமைப்பினர் தெரிவித்தனர்.

தேர்ச்சி விகிதம் பாதிக்குமா? பெற்ேறார்கள் அச்சம்
கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் ஒரு மாதம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆசிரியர்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தம் தேர்வை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் தேர்ச்சி வீதம் பாதிக்கப்படும் என்று பெற்றோர் அச்சப்படுகின்றனர். இது தவிர தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட முடியாது. வாக்காளர் பட்டியல் தயாரித்தல், பட்டியலை சரிபார்த்தல், வீடுவீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்குவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-