அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
 ஊட்டி ஜன. 14–

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவுக்கு தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

அரசு தாவரவியல் பூங்காவில் பசுமையான புல்வெளிகள், வண்ண வண்ண மலர்கள் இடம் பெற்று உள்ளன. இவை அருகே நின்று புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள் தங்களது புகைப்படங்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்ப இணையதள வசதி இல்லாமல் தவித்து வந்தனர்.

குறிப்பாக ஊட்டி மலைப்பிரதேசமாக இருப்பதால் சிக்னல் கிடைப்பதில் இடையூறுகள் நிலவி வந்தன. இந்த நிலையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழமை வாய்ந்த பூங்காக்களை நவீன மயமாக்கும் சர்வதேச இணைய திட்டத்தில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவும் இணைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அரசு தாவரவியல் பூங்காவை நவீனப்படுத்தும் விதமாக தடையில்லா இணையதள இலவச வை–பை வசதி இன்று முதல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இன்று காலை நடைபெற்ற விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் இணைய வசதியை தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவில் இருந்தபடியே தங்களது புகைப்படங்களை எடுத்து உறவினர்களுக்கும், சமூக வளைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகளில் பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணி ஒருவர் கூறும்போது ஊட்டிக்கு சுற்றுலா வரும்போது இயற்கை காட்சிகளை படம் பிடித்து உறவினர்களுக்கு அனுப்ப விரும்புவோம். ஆனால் செல்போனில் சிக்னல் கிடைக்காத காரணத்தால் இணையதள மையங்களை தேடி அலைந்த நிலை இருந்தது. இந்த நிலையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள தடையில்லா இணைய தள வசதி மூலம் உடனுக்குடன் இணைய வசதியை பயன்படுத்தி வருகிறோம். இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-