அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...






இன்றைய அவசரமான வாழ்க்கை சூழலில் வயது வித்தியாசமின்றி எல்லோரும் எதிர்க்கொள்கிற பிரச்சனை அல்சர் (வயிற்றுபுண்). அதிலும் சாஃப்ட்வேர் நிறுவனங்களின் வருகைக்கு பிறகு, இந்தியாவில் இளைஞர்களிடமும், இளம்பெண்களிடமும் அல்சர் தொல்லை மிகவும் அதிகரித்து விட்டது. விரைவு உணவுகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் என்று மேற்கத்திய உணவு கலாச்சாரம் நம்மிடம் புகுந்த பிறகு, காய்ச்சல், தலைவலி பிரச்சனை போல அல்சர் தொல்லையும் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.

அல்சர் என்றால் என்ன ?

தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை பொதுவாக பெப்டிக் அல்சர் (peptic ulcer)என்கிறோம். இரைப்பையில் புண் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர் (gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் டியோடினல் அல்சர் (duodenal ulcer)என்றும் கூறப்படுகிறது.

இரைப்பையில் உணவு செரிப்பதற்காக சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கி சிதைவடையும். இதை இரைப்பை அழற்சி (gastritis) என்கிறோம். இதைக் காலத்தோடு கவனிக்க தவறினால், நாளடைவில் இது இரைப்பை புண்ணாக மாறிவிடும்.

காரணங்கள்

உணவை நேரம் தவறி சாப்பிடுவது, அதிகம் சூடாக சாப்பிடுவது, பட்டினி கிடப்பது, காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவது. மது அருந்துதல், புகைபிடித்தல், மென்குளிர்பானம், காபி, தேநீர், பானங்களை அதிகமாக குடிப்பது. ஸ்டீராய்டு மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது போன்ற தவறான செயல்கள் இரைப்பையை புண்ணுக்கு வரவேற்பாக அமைகின்றன. சுகாததாரமற்ற குடிநீர், கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுசூழல் போன்ற காரணங்களாலும் அல்சர் ஏற்படலாம். மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் அல்சருக்கு காரணங்களாக உள்ளது.

காலை உணவை தவிர்த்தால்...

தினமும் வேளை தவறிச் சாப்பிடுபவர்களுக்கும் காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும், இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்

முதல் அறிகுறி நெஞ்சுபகுதியில் எரிச்சல் ஏற்படும். இதை தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கம். குறைந்த அளவு உணவை சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக, இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், அதிகாலையிலும், மேற்புற வயிற்றி்ல் அடிக்கடி வலிவரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால் இந்த வலி ஏற்படுகிறது.

அதேபோல் உணவு சாப்பிட்ட பிறகும் இதே வலி உண்டாகும். காரணம் புண்ணின் மீது உணவுபடுவதால் இப்படி வலி ஏற்படுகிறது. பொதுவாக சாப்பிட்டதும் வயிற்றுவலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால் அது டியோடினல் அல்சர். இவற்றை தவிர குமட்டலும் வாந்தியும் வரும். அந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே வயிறு, இரைப்பை, சிறப்பு மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறவேண்டும்.

பாதிப்புகள்

இரைப்பை புண் தொடர்ந்து இருந்தால் அது புற்றுநோயாக மாறுவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதிரும் 40வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு சற்று அதிகம். அப்போது புண்ணின் இரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்த வாந்தி வரலாம். புண் இரைப்பையில் இல்லாமல், முன்சிறுகுடலில் இருந்தால், குடல் அடைப்பு ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் குடலில் துளை விழுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

அல்சரை தடுக்க

புகைபிடிக்ககூடாது. மது, காபி பானங்களை குடிக்ககூடாது. வயிற்றுவலியை அதிகப்படுத்தகூடிய உணவு வகைகளை உண்ணக்கூடாது. அதிகமாக சாப்பிடக்கூடாது, பட்டினியும் இருக்ககூடாது. காரம், எண்ணெயில் பொரித்த உணவுகள், உண்பதை குறைக்க வேண்டும். பின் இரவு விருந்துகளை தவிர்க்கவேண்டும். சாப்பிடவேண்டிய உணவுகளைத் தவிர்க்ககூடாது. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக்குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். துரிதவகை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் பயன்படுத்தக்கூடாது. சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குள் படுக்ககூடாது. இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இருக்கமாக உடை அணியக்கூடாது.

செய்ய வேண்டியவை

குறைந்த அளவில் நேரத்திற்கு அடிக்கடி சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும் அதிக வாழைப்பழங்களை சாப்பிடவேண்டும். தயிரில் இருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிடலாம். வேகவைத்த இந்திய பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிடவேண்டும். கீரைகளில் மணத்தக்காளியும், காய்கறிகள் முட்டைக்கோசும் இரைப்பை புண்ணை குணப்படுத்த உதவுகின்றன. இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். அதிகம் சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். யோகாசனம், தியானம், முதலியவற்றை பயில வேண்டும். மனஇறுக்கத்தை விடுத்து மனமகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-