அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
யாரோ ஒருவர் போட்ட ஸ்டேட்டஸை தேடி பிடித்து, கமெண்ட் போட்டு, சண்டையும் போடும் இந்த காலத்தில், தன்னை தீவிரவாதிகளாக சித்தரிப்பவர்களுக்கு வேறுவிதத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார் ஒரு இஸ்லாமிய பெண்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சூசன் கார்லாண்ட். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவரை குறிவைத்து, 'ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறு, ஐஎஸ்ஐஎஸ்சுடன் உனக்கு தொடர்பு இருக்கிறது, நீ ஒரு ஜிஹாதி...' என சராமரியாக வந்தன ட்வீட்கள்.நாள்தோறும் நூற்றுக்கணக்கான எதிர்ப்பு ட்வீட்கள் சூசனுக்கு குவிந்தன. தன்னை ஒரு தீவிரவாதி போல சித்தரிக்கும் சமூகத்தை மாற்ற இயலாமல், அவர்களை சூசன் ப்ளாக் செய்தார். ஒரு சில முறை அவர்கள் சொல்வதை சகித்துக் கொள்ளவும் செய்தார்.

ஆனால் எந்த தவறும் செய்யாமல், தான் ஹிஜாப் அணியும் ஒரு இஸ்லாமிய பெண் என்பதற்காக தன்னை பயங்கரவாதி போல சித்தரிப்பதை மட்டும் சூசனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த சமயத்தில் அவர் நாடியது குரானைதான். “இருட்டை விலக்க வெளிச்சத்தால் மட்டுமே முடியும்” என்ற குரானின் வாசகங்கள் சூசனுக்கு புத்துணர்வையும் புது தெம்பையும் அளித்தன.


இதையடுத்து தன்னைத் திட்டி வரும் ஒவ்வொரு ட்வீட்டுக்கும் 1 டாலர், யுனிசெஃப் குழந்தைகள் அமைப்புக்கு நன்கொடையாக அளிக்க சூசன் முடிவெடுத்தார். உலகமெங்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை தேவைகள் இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த நிதி சென்றடையும். அந்த வகையில் அவரைத் திட்டி வந்த ஆயிரம் ட்விட்டுகளுக்காக சூசன் ஆயிரம் டாலர்களை யூனிசெப் அமைப்பிற்கு நிதியாக வழங்கினார். தான் நன்கொடையாக வழங்கியதையும் ட்வீட்டாக வெளியிட்டார்.


இந்த ட்வீட் வைரலாக பரவியது. ஆஸ்திரேலியாவின் மூலை முடுக்குகளில் இருந்தும் சூசனுக்கு ஆதரவு குவிந்தது. தற்போதும் கடுமையான ட்வீட்கள் சூசனை நோக்கி பாய்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இப்போது சூசன் அவற்றை சட்டை செய்வதே இல்லை. தன்னைத் திட்டி வரும் ட்வீட்டுகளை மட்டும் தவறாமல் எண்ணி யூனிசெப்புக்கு நன்கொடை அளித்து விடுகிறார்.

இவருக்கு ஆதரவு தரும் நெட்டிசன்கள் பலரும் அடுத்த நன்கொடையை தாங்களே செலுத்தவும் முன்வந்துள்ளனர். சகிப்பின்மைக்கு குறிப்பிட்ட நாடு என்று இல்லை. பொதுவாகவே எல்லா இடங்களிலும் அது இருக்கத்தான் செய்கிறது. அதனை எதிர்கொள்ளும் விதத்தில்தான் ஒரு சமூகத்தின் வளர்ச்சி உள்ளது. அதற்கு சூசன் ஒரு உதாரணம்!

ஐ.மா.கிருத்திகா

(மாணவப் பத்திரிகையாளர்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-