அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஐதராபாத், ஜன.8-

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலை மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் என அகில இந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் அசாதுதீன் ஒவைசியின் டுவிட்டர் பக்கத்தில் சிலர், ‘உனக்கு உண்மை தெரியாவிட்டால், ஐ.எஸ். இயக்கத்தைப் பற்றி எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டிரு!, இந்தியா மீது ஐ.எஸ். இயக்கம் வெகுவிரைவில் படையெடுக்கும்’ என பதிவிட்டிருந்தனர். பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டதாக தெரிகிறது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக கருத்து தெரிவித்த ஒவைசி, இந்தியாமீது படையெடுக்கப் போவதாக சிலர் டுவிட்டரில் தெரிவித்தால் அதற்கு நாங்கள் தக்கவகையில் பதிலடி தருவோம். இந்தியா எங்களது தாய்நாடு, வன்முறையின் மூலம் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அப்பாவி மக்களை கொல்வதுடன் இதைப்போன்ற மிரட்டலை விடும் ஐ.எஸ். இயக்கத்துக்கும் இஸ்லாமுக்கும் எவ்வித தொடர்புமில்லை.

நாங்கள் கடந்த மூன்றாண்டுகளாகவே ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக பேசி வருகிறோம். உலகின் பலநாடுகளில் உள்ள முஸ்லிம் அறிஞர்களும் இந்த தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். அவர்களின் வன்முறை தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இத்தகைய மிரட்டல் விடுபவன் உலகில் எந்த மூலையில் எலிபோல ஒளிந்துகொண்டு இப்படி பேசுகிறான்? என்பது தெரியவில்லை.

பகைமையின் அடிப்படையிலான ஐ.எஸ். தீவிரவாதிகளின் சித்தாந்தத்தை உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் எதிர்த்து வருகின்றனர். இஸ்லாமிய மார்க்கத்தின் மிகப்பெரிய அறிஞர்கள் பலர் அவர்களுக்கு எதிராக ‘ஃபத்வா’ கொடுத்துள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஒவைசியை கொன்று விடுவோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் நேற்று வெளியாகின. இதற்கு பதிலளித்துள்ள அசாதுதீன் ஒவைசி, இதைப்போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் நான் அஞ்சப் போவதில்லை. என்னை அவர்கள் அச்சுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-