அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
புற்றீசல் போல இந்தியாவில் ஏராளமான என்ஜினியரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டுக் கொண்டிருந்தன. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான தகவல் வெளியாகியுள்ளது.

தொடக்கத்தில் இருந்த அளவிற்கு தற்போது என்ஜினியரிங் படிப்பிற்கு மாணவர்களிடையே அதிக வரவேற்பு இல்லை. இதனால் கடந்த இரு ஆண்டுகளாக என்ஜினியரிங் படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களின் சதவீதம் குறையத் தொடங்கியிருந்தது. மாணவர்கள் வெறும் படிப்பை வைத்துக்கொண்டிருந்தால், எதுவும் செய்ய முடியாது. அவர்கள் தொழிற்சாலையில் வேலை செய்யும் அளவிற்கு திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். என்ஜினியரிங் படிக்கும் ஏராளமான மாணவ -மாணவிகளுக்கு சரியான வேலை வாய்ப்பு இல்லாமலோ அல்லது திறமையின்மை காரணமாக கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலையோ உள்ளது.
அதனால்தான் மாணவர்கள், சுய தொழில் புரிய முன் வர வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைப்பது உண்டு. ஆனால் சுய தொழில் புரிவதற்கு நடைமுறையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதனால்தான் வேலை பார்த்தாமோ... சம்பளம் வாங்கினோமா என்ற மனநிலை மாணவர்களிடையே வளரத் தொடங்கியிருந்தது. அதற்கு என்ஜினியரிங் படிப்பு உகந்ததாக இருந்தது. ஆனால் தற்போது சரியான வேலை வாய்ப்பு இல்லாதது மாணவர்களை என்ஜினியரிங் படிப்பில் இருந்து விலகிச் செல்ல வைத்துள்ளது.

அதே வேளையில் கலை அறிவியல் படிப்பிற்கு மாணவ- மாணவிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. பி.பி.ஏ, பி.காம் போன்ற படிப்புகளை தேர்வு செய்யவே மாணவர்கள் விருப்பம் காட்டத் தொடங்கியுள்ளனர். அத்துடன் இயற்பியல், வேதியியல் போன்ற படிப்புகளையும் மாணவ - மாணவிகள் விருப்பப் பாடமாக தேர்வு செய்து படிக்கத் தொடங்கியுள்ளனர்.

கலை -அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்களிடையே மோகம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக பெரும்பாலான என்ஜினியரிங் கல்லுரிகளில் சீட் நிரம்பவில்லை. அத்துடன் என்ஜினியரிங் படிப்பிற்கு நன்கொடை, அதிக கல்விக்கட்டணம் போன்றவற்றால் பெற்றோருக்கு நெருக்கடி கொடுக்கவும் இளைஞர்கள் விரும்பவில்லை. மாணவர்களும் யதார்த்த நிலையை புரிந்து கொண்டு, வேறு பாதையை மாற்றத் தொடங்கியுள்ளதால், என்ஜினியரிங் கல்லூரிகள் காற்றாடத் தொடங்கின.

கடந்த 2009-ம் ஆண்டு தமிழகத்தில் 51,371 என்ஜினியரிங் சீட்டுகள் நிரப்பப்படவில்லை. அதுவே 2010-11ம் ஆண்டு 64, 880 ஆக உயர்ந்தது. 2012-13ல் 79, 673 ஆக அதிகரித்தது. இது அரசு மற்றும் மேனேஜ்மெண்ட் கோட்டாவை உள்ளடக்கியது. தமிழ்நாட்டில் அரசு என்ஜினியரிங் கல்லூரிகளில் 2 லட்சத்து 5 ஆயிரம் சீட்டுகள் உள்ளன. இதில் கடந்த 2013-14-ம் ஆண்டு 80 ஆயிரம் சீட்டுகள் நிரப்பப்படவில்லை.

இதே ஆண்டில், 39 என்ஜினியரிங் கல்லூரிகள் கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்ற விருப்பம் தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் விண்ணப்பித்திருந்தன. அதில் 20 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் விண்ணப்பித்துள்ள 20 கல்லூரிகளில், பெரும்பாலானவை தமிழ்நாட்டை சேர்ந்தவை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கலை, அறிவியல் படிப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளதால், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-