அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


பெரம்பலூர், : அம்மா உணவகத்தில் எலிகள் செய்யும் அட்டகாசத்தால் மகளிர் குழுவினர் கடும் அவதியடைந்துள்ளனர். பெரம்பலூர் நகராட்சியில் சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக் காமல் வருமானம் ஈட்டக்கூடிய வாடகைக் கடைகளுக்காக அதிகம் முக்கியத்துவம் தருவதென்பது மாவட்டத்திலுள்ள எல்லோருக்கும் தெரிந்தஒன்று. பெரம்பலூர் நகராட்சியில் ‘நம்ம டாய்லெட்’ எனப்படும் நவீன கழிப்பறைகள் கடந்த 2014ம்ஆண்டு கொண்டுவரப்பட்டன. இவை பழையபஸ்டாண்டு பெரியார் சிலை அருகேயுள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்திலும், புதுபஸ்டாண்டு சனிமூலைப் பகுதியிலும் வைக்கப்பட்டன. தொடக்கவிழா காணப்படாமல் கழிப்பறைகள் பலமாதங்களாகக் காட்சிப் பொருளாகக் கிடந்த நிலையில், அவை திறக்கப்படாமலேயே அவசரக்காரர்களால் அரைகுறையாக பயன்படுத்தி அசிங்கமாவதையறிந்து, கடந்தாண்டு புத்தகக் கண்காட்சி தொடங்கும்போது புதுபஸ்டாண்டிலிருந்த கழிப்பறை மட்டும் திடீரென திறந்துவிடப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பழைய பஸ்டாண்டு நம்மடாய்லெட் திறக்கப்படாமல் உள்ளநிலையில், கடைகளைக்கட்டி வருமானத்தைப் பார்ப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம், வழக்கம்போல், பெரியார் சிலையருகே வைக்கப்பட்ட நம்மடாய் லெட்டைச் சுற்றிலும் கடைகளைக் கட்டி யுள்ளதே தவிர அங்குள்ள நம்மடாய்லெட்டைப் பொதுமக்கள் பயன்படுத்த வழிகாணவில்லை.
சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத்தயங்கும் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம், பெரிய கடைவீதியில் ஆண்களுக்கான பொதுகழிப்பிடம் லாரிமோதி உடைந்து மாதக் கணக்காகியும் அதற்கு மறைவு கட்டாமலேயே உள்ளது. ஆனால் அம்மா உணவகத்திற்காக அரசு சித்தா மருத்துவமனைக் கட்டிடத்தையே இடித்துப் பின்னுக்குத் தள்ளியதைத்தான் இன்னமும் சாதனையாக கருதுகிறது. இந்நிலையில் ஆரவாரமாக தொடங்கப்பட்ட அம்மா உணவகம் வாராவாரம் தனது பாதுகாப்பை இழந்துவருவது கண்கூடாகத் தெரிகிறது. குறிப்பாக அரைமணி நேரத்தில் உணவு தீர்ந்து போனால் ஆட்கள் யாரேனும் நுழைந்து விடாதிருக்க ஷட்டரை இழுத்து சாத்தும் அம்மா உணவகத்தில் எலிகளின் அட்டகாசத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மா உணவகத்தில் சமைக்க வைத்துள்ள அரிசி மூட்டைகளை தினமும் கடித்துக்குதறுவதால் அரிசியோடு சணல் துகள்கள் சேர்த்து உணவுப்பொருளை உருக்குலையச் செய்துவருகிறது. இதனால் அங்குப் பணிபுரியும் மகளிர்குழுவினர், தினமும் சமைப்பதற்கு எடுக் கப்படும் அரிசியை அள்ளியெடுத்து வந்து தண்ணீரில் கொட்டி அலசுவதற்கு முன்பாக, அரிசியில் சேர்ந்துள்ள சணல் துகள்கள், எலியின் கழிவுகள், பருப்புகளை பிரித்தெடுக்கும் வேலையைத்தான் பார்த்துப்பார்த்து செய்து வருகின்றனர். உண்ணுகிற உணவுப்பொருளான அரிசி, பருப்பு, கோதுமைமாவுக்கும், காய்கறிகளுக்கும் உரிய பாதுகாப்புத்தந்து, அட்டகாசம் செய்திடும் எலிகளுக்கு அவசரகதியில் தீர்வுகாண வேண்டுமென சுகாதார ஆர்வலர்கள் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-