அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...லக்னோ - வாரணாசி வழிதடத்தில் உள்ள மல்ஹாரா ரயில் நிலையம் லெவல் கிராஸிங் வழியே செல்பவர்கள் பர்தா அணிந்த இளம் முஸ்லிம் பெண் ஒருவர் கேட் கீப்பராக பணியாற்றுவதைக் கண்டு ஆச்சரியப்படலாம். கடந்த மூன்றாண்டுகளாக அந்த லெவல் கிராஸிங்கை கடந்து செல்பவர்களால் "கேட் உமன்' என்றழைக்கப்படும் பட்டதாரிப் பெண்ணான இவரது பெயர் சல்மா பேக் ( 22) பட்டப்படிப்பை முடித்தவுடன் ஆசிரியை ஆக வேண்டுமென்று விரும்பிய இவரது ஆசை எதிர்பாராதவிதமாக நிறைவேறாமல் போனாலும் என்றாவது ஒருநாள் என்னுடைய கனவு நிச்சயம் நிறைவேறும் என்ற உறுதியுடன் இந்த வேலையை ஏற்றுக் கொண்டாராம் சல்மா. இவரது தந்தையின் உடல் நலக் குறைவு மற்றும் காது கேட்காத குறை காரணமாக அவர் செய்து வந்த கேட் கீப்பர் பணியிலிருந்து விலக வேண்டியதாயிற்றாம். இவரது சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நடக்கிறது என்பதால் கருணை அடிப்படையில் சல்மாவுக்கு கேட் கீப்பர் வேலையைக் கொடுக்க ரயில்வே நிர்வாகம் முன்வந்தது. இது குறித்து சல்மா கூறுவதாவது:

""கேட் கீப்பர் வேலைக்கு ஒரு முஸ்லிம் பெண் செல்வது குறித்து எங்கள் சமூகத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் என்ன கூறுவார்களோ என்ற தயக்கம் முதலில் இருந்தாலும், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை காரணமாக இந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். என் தாயார் உடல்நிலையும் சரியில்லை. இந்த வேலையை செய்வதற்குரிய உடல்வலிமையும் மன உறுதியும் எனக்கிருந்தது. இந்த வேலையில் பெண்கள் வேறு யாராவது இருக்கிறார்களா? என்பதும் எனக்கு தெரியாது.

வேறுவேலைக்கு விண்ணப்பித்து வேலை கிடைக்கும்வரை காத்திருக்கவும் விரும்பவில்லை. இதையெல்லாம் நினைத்தே இந்த வேலையை ஏற்றுக் கொண்டேன்.

இதற்கானப் பயிற்சியை ரயில்வே நிர்வாகம் எனக்களித்தது.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை. லக்னோ - வாரணாசி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து அதிகம் என்றாலும், லெவல் கிராஸிங் அருகே உள்ள முக்கிய நெடுஞ்சாலை லக்னோவுடன் இணையும் பைசாபாத் மற்றும் காரக்பூர் செல்லக் கூடியது என்றாலும் வாகன போக்குவரத்து சற்று குறைவாகவே இருக்கும்.

துவக்கத்தில் இந்தப் பணியைச் செய்வதற்கு தயக்கமாக இருந்தாலும் நாளடைவில் இது பழகிவிட்டது. கேட்டை திறப்பதையும் மூடுவதையும் பார்த்து உள்ளூர் மக்களிடமும் நான் நன்கு அறிமுகமாகிவிட்டேன்'' என்கிறார் சல்மா.

இவரின் பெற்றோர் கூறுவது என்ன?

""எங்களுக்கு சல்மா ஒரே மகள் என்றாலும் ஒரு மகன் இல்லாத குறையைத் தீர்த்து வைக்குமளவுக்கு எங்களை கவனித்துக் கொள்கிறாள். இந்த வேலைக்கு அவர் வருவதற்கு முன் அவளைப் படிக்க வைக்கவேண்டும், திருமணம் செய்துதர வேண்டும் என்ற ஆசை எங்களுக்கிருந்தது. எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டோம்'' என்றனர்.

ஆனால் சல்மாவைப் பொறுத்தவரை தற்போதைக்கு என்ன நடக்க வேண்டுமென்று எழுதியிருக்கிறதோ அதன்படி நடக்கட்டும் என்று பொறுமை காக்கிறார்.

""எதிர்காலத்தில் நகரத்திற்கு அருகில் ஏதாவது வேலை கிடைத்தால் மேற்கொண்டு படிப்பைத் தொடரும் எண்ணம் இருக்கிறது'' முதலில் என்னுடையப் பெற்றோரைக் கவனிக்க வேண்டும். தற்போது செய்யும் வேலை திருப்திகரமாக இருப்பதால் அவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'' என்கிறார் சல்மா.

ரயில்வே நிர்வாகத்தினரும் சல்மாவின் திறமையைப் பாராட்டுகிறார்கள். கேட் கீப்பர் வேலையில் இருக்கும் முதல் பெண்மணி இவர்தானா? என்ற கேள்விக்கு நிர்வாகத்தினரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. இதுவரை ஆண்கள் மட்டுமே செய்துவந்த வேலையை எவ்வித தயக்கமும் இல்லாமல் சல்மா ஏற்று கொண்ட வகையில் எங்களுக்கு மகிழ்ச்சி என்கின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-