அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

நமது சகோதரர்களின் விளக்கங்கள் புல்லரிக்கிறது. ஈரான் அரபு நாடுகளில் குழப்பம் செய்கிறதாம். அதனால் சவுதி செய்வது சரியாம். அதனால் ஈரானை அழித்து விட வேண்டுமாம்..

ஈராக்கில் அணு ஆயுதங்கள் உள்ளது என்று கூறி பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்றது யார் ? அமெரிக்காவா ? ஈரானா ? பின்னர் தவறான தகவல் அடிப்படையில் தாக்குதல் நடத்தி விட்டோம் என்று "சாரி" சொன்னது யார் ?

ஈராக்கில் கொல்லப்பட்ட அனைவரும் சன்னி முஸ்லிம்களே. இதற்காக சவுதி என்ன செய்தது. அமெரிக்க உறவை துண்டித்து விட்டதா ? குறைந்த பட்சம் தூதரக உறவையாவது துண்டித்ததா ?

பலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இஸ்லாத்தின் புனித பள்ளிவாசல்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவை ஆக்கிரமித்து இன்று வரை பலஸ்தீன முஸ்லிம்களின் இரத்தத்தை குடித்து கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு பிண்ணணியில் இருப்பது யார் அமெரிக்காவா ? ஈரானா ?

உசாமா(ரஹ்) அவர்களை தேடுகிறோம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் மீது போர் நடத்தி லட்சக்கணக்கான முஸ்லிம்களை கொன்று இன்று வரை ஆப்கனை சுடுகாடாக்கி கொண்டிருப்பது யார் ? அமெரிக்காவா ? ஈரானா ?

அமெரிக்கா,இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாகவும் பலஸ்தீன முஜாஹிதீன்களுக்கு அடைக்கலமாகவும் ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு பொருளாதார, ஆயுத உதவிகள் வழங்கி கொண்டிருந்த சிரியாவை நாசமாக்கி இரத்த காடாக்கி கொண்டிருப்பது யார் ? அமெரிக்காவா ? ஈரானா ?

சூடானில் ஆயுதத் தொழிற்சாலைகளை அழிக்கிறோம் என்று மருந்து தொழிற்சாலைகள் மீது குண்டு போட்டு அப்பாவி முஸ்லிம்களை கொன்றது யார் அமெரிக்காவா ? ஈரானா ?

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆளில்லா விமானங்களை அனுப்பி தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்று அப்பாவி மக்களை கொன்று குவிப்பது யார் ? அமெரிக்காவா ? ஈரானா ?

இன்னும் நிறைய இருக்கிறது. விரிவஞ்சி தவிர்க்கிறேன்.

கடந்த 2012 ல் இஸ்ரேல் பலஸ்தீனின் காசா (Gaza) மீது தாக்குதல் நடத்தியது. காசாவை ஆட்சி செய்யும் பலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸை இத்தோடு அழித்து விடுவோம் என சவால் விட்டது. பொதுமக்களையும், குழந்தைகளையும் கொல்ல முடிந்ததே தவிர ஹமாஸ் அமைப்பினரை ஒன்றும் செய்ய இயலவில்லை. கடைசியில் தனது ஏராளமான ராணுவத்தினரை பலி கொடுத்து விட்டு அலறியடித்து ஓடியது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா வெளிப்படையாக இந்த வெற்றிக்கு காரணம் எகிப்தும்,ஈரானும்தான் என்று நன்றி தெரிவித்தார்.

ஏனெனில் அன்று எகிப்தை ஆட்சி செய்து கொண்டிருந்த இஹ்வான் அமைப்பின் தலைவர் முஹம்மது முர்சி எகிப்தின் பாலஸ்தீன எல்லையை (ரபாவை) திறந்து விடப் போவதாக அறிவித்தார். ஈரானோ ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கியது.

தோல்வியால் அதிரந்து போன இஸ்ரலும்,அமெரிக்காவும் திட்டமிட்டு சவுதியின் துணையோடு எகிப்தின் இஹ்வான் ஆட்சியை கவிழ்த்து இராணுவ கொடுங்கோல் அரசை அமைத்து பாதுகாத்து வருகின்றன. இப்போது இதே சவுதியைக் கொண்டே ஈரான் மீது முழு அளவிலான போரை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. அதன் முதல்படிதான் தற்போதைய காட்சிகள். ஒருவேளை அப்படி ஒரு போர் நடந்தால் ஷியாயிசத்துக்கு எதிரான ஜிஹாத் என்று சவுதி உலமாக்கள் ? பத்வா கொடுப்பார்கள். அதை நம்பி நம்ம ஆட்களும் கச்சை கட்டி கிளம்பினாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

ஹமாசும்,ஈரானும்,எகிப்தும் ஒன்றிணைந்து இஸ்ரேலை விரட்டியடிக்கும் ஒரு சூழலை அதாவது சுன்னிகளும்,ஷியாக்களும் இணைந்து போராடுவதை அமெரிக்காவும், இஸ்ரேலும் விரும்புமா என்ன ? இந்த ஒற்றுமை நீடிப்பது அமெரிக்காவுக்கல்லவா ஆபத்து.

இதை புரியாத அப்பாவி முஸ்லிம்கள் ஷியா- சன்னி மோதல் என்றும் சன்னிகளின் நலன் காக்கும் சவுதி அரேபியா என்றும் நம்ப வைக்கப் படுகின்றனர். நான் மேலே சொன்ன அமெரிக்கா நடத்திய அனைத்து தாக்குதல்களும் சன்னி முஸ்லிம்கள் மீதே நடாத்தப்பட்டது. இஸ்ரேலால் கொல்லப்படும் பலஸ்தீன முஸ்லிம்களும் சுன்னத் வல் ஜமாத்தினர்தான். அப்போதெல்லாம் சவுதி என்ன புடுங்கி கொண்டிருந்தது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கே விட்டு விடுகிறேன்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-