அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...நாகர்கோவில்: தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழக அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் சார்பில் 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா மார்த்தாண்டத்தில் நேற்று நடந்தது. இத்திட்டத்தில், தமிழ்நாடு-கேரள எல்லையான காரோடு முதல் வில்லுக்குறி வரை 27.2 கி.மீ. தூரத்துக்கு ரூ.1274.34 கோடியிலும் குமரி மாவட்டம் வில்லுக்குறி முதல் கன்னியாகுமரி வரை மற்றும் நாகர்கோவில் முதல் காவல்கிணறு வரை 42.7 கி.மீ. தூரத்துக்கு ரூ.1041.99 கோடியிலும் நான்கு வழிச்சாலைகள் அடங்கும். மேலும், தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்புகளில் ரூ.286.95 கோடி மதிப்பில் மேம்பாலங்களும், அவினாசி-திருப்பூர்-அவினாசிபாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையில் 31.8 கி.மீ. தூரத்துக்கு ரூ.162.72 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையும் அடங்கும்.

இந்த திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது 39 திட்டங்களின்படி 1,974 கி.மீ. சாலைகள் ரூ.12 ஆயிரம் கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் மேலும் 9 திட்டங்களாக 1,300 கி.மீ. சாலைகள் ரூ.12 ஆயிரத்து 500 கோடி செலவில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணிகள் தொடங்கப்படும். தமிழகத்தில் 8 சாலை திட்டங்கள் ரூ.7,000 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட இருக்கின்றன. இதற்காக நான் இன்று ஒப்புதல் வழங்குகிறேன். ரூ.33 ஆயிரம் கோடிக்கு தமிழகத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர மேலும் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்களை தேர்வு செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-