அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் அருகே 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்டவழக்கில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற தாயே மகளை கொன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

கட்டிடத் தொழிலாளி

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பகளவாடியை சேர்ந்தவர் அண்ணாதுரை. கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா(27). பெரம்பலூரை அடுத்த கவுல்பாளையத்தில் 2 மாதங்களுக்கு முன்பு தனது மனைவி மல்லிகா, மகள் லட்சுமி(4 வயது) மற்றும் மகன்களை வாடகை வீட்டில் குடித்தனம் வைத்துவிட்டு, அண்ணாத்துரை ராஜஸ்தான் மாநிலத்திற்கு கட்டிட வேலைக்கு சென்று விட்டார்.

சிறுமி பிணம்

இந்த நிலையில் சிறுமி லட்சுமி அங்குள்ள சோளக்காட்டில் நேற்று முன்தினம் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமி லட்சுமியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரது தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசாரின் விசாரணையில், பெற்றதாயே மகளை கொன்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது:- பகளவாடி கிராமத்தில் வசித்தபோது மல்லிகாவிற்கும், துறையூரைச்சேர்ந்த வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. அதன்பிறகு கவுல்பாளையத்திற்கு அண்ணாதுரை குடும்பத்தினர் குடிவந்த பின்பும் அந்த வாலிபர் கவுல்பாளையத்திற்கு வந்து மல்லிகாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனை சிறுமி லட்சுமி நேரில் பார்த்துள்ளார். இதனால், மகள் லட்சுமி எங்கே தனது கள்ளக்காதலை கணவரிடம் கூறிவிடுவாளோ? என்று நினைத்து மல்லிகா பயந்துள்ளார்.

மகளை காணவில்லை என்று நாடகம்

இந்த நிலையில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகள் லட்சுமியை கொல்ல மல்லிகா திட்டம் தீட்டினார். நேற்று முன்தினம் மதியம் தனது மகள் லட்சுமியை அங்குள்ள சோளக்காட்டிற்கு அழைத்து சென்றார். காட்டிற்கு சென்றவுடன் மல்லிகா தனது கையில் மறைத்துவைத்திருந்த பாவாடை நாடாவினால் லட்சுமியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் லட்சுமியின் பிணத்தை காட்டிலேயே போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். இதையடுத்து மகளை காணவில்லை என்று மல்லிகா நாடகமாடினார்.

தாய் கைது

பின்னர் கிராம மக்கள் லட்சுமி பிணமாக கிடந்ததை பார்த்துவிட்டு மல்லிகாவிடம் கூறியபோதும், பெற்ற தாய்க்கு உரிய எந்தவித பதற்றமும் மல்லிகாவிடம் இல்லை. இதனால் பெரம்பலூர் போலீசாருக்கு மல்லிகா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவளை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், தானே மகள் லட்சுமியை பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கைதான மல்லிகாவை பெரம்பலூர் போலீசார் நேற்று மாலை பெரம்பலூர் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், ராஜஸ்தானில் இருந்த அண்ணாதுரைக்கு சம்பவம் குறித்து போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர் ரெயில் பிடித்து பெரம்பலூர் வருவதற்கு 2 நாட்கள் ஆகும் என்பதால், கொலை செய்யப்பட்ட சிறுமி லட்சுமியின் பிணம், பிரேதபரிசோதனைக்கு பிறகு அண்ணாதுரையின் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-