அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் உள்ள 4 வீடுகளில் நகை-பணம் கொள்ளை அடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு

பெரம்பலூர் புறநகர் திருச்சி-சென்னை 4 வழிச்சாலையில் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இதில் வசித்து வருபவர்கள் காவலர்கள் லட்சுமிநாராயணன் (வயது 37), சவுந்தர்ராஜன் (30), ரமேஷ் (29), பாஸ்கர் (30). இவர்கள் விடுப்பில் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம மனிதர்கள் சிலர் குடியிருப்புக்குள் நுழைந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

நகை-பணம் கொள்ளை

அப்போது ‘ எல்’ பிளாக்கை சேர்ந்த லட்சுமிநாராயணன் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை, ‘ஐ’ பிளாக்கை சேர்ந்த சவுந்தர்ராஜன் வீட்டில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்து 500 ரொக்கம், ‘சி’ பிளாக்கை சேர்ந்த ரமேஷ் வீட்டில் இருந்த 2 கிராம் தங்கநாணயம், ‘ஜெ’ பிளாக்கை சேர்ந்த பாஸ்கர் வீட்டில் இருந்த ஒருபவுன் நகை மற்றும் ரூ.3ஆயிரம் ரொக்கம் ஆகியவை உள்பட மொத்தம் 8 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

மேலும் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு நுழைவு வாயில் அருகே முனீஸ்வரர் கோவில் உள்ளது. பைபாஸ்சாலை ஓரம் அமைந்துள்ள சுற்றுச்சுவர் இல்லாத அந்த கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளையும் அள்ளி சென்றனர்.

மர்ம மனிதர்களுக்கு வலைவீச்சு

இந்நிலையில் நேற்று காலை அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் வெளியே வந்து பார்த்தபோது 4 பேரின் வீடுகளில் இருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை போயிருந்ததை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மாவட்ட ஆயுதப்படை குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும், மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலேயே உள்ள துப்பறியும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டனர். மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா உத்தரவின்பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நேற்று முன்தினம்

இந்த சம்பவத்திற்கு முந்தைய தினம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் அரசு போக்குவரத்துக்கழகத்தை ஒட்டி அமைந்துள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் நள்ளிரவு ஒரே நிறத்தில் பனியன் அணிந்திருந்த 5 பேர் கடப்பாரையுடன் அதிகாலை 3 மணிக்கு புகுந்துள்ளனர். இதில் பூட்டியிருந்த 5 வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். ஆனால் ஒரு வீட்டில் இருந்த அரைபவுன் நகையை மட்டும் திருடி சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் நகை, பணம் ஏதும் அகப்படாததால், விரக்தி அடைந்த கொள்ளையர்கள் தொடர்ந்து 2-வது நாளாக போலீசுக்கு சவால் விடும் வகையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பிலேயே தங்களது கைவரிசையை காட்டி உள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கைபெரம்பலூர் நகரிலும், கிராமப்புற பகுதிகளிலும் சமீப காலத்தில் திருட்டு, கொள்ளைசம்பவங்கள், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடந்துவருகிறது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவனத்தில் கொண்டு கூடுதல் போலீஸ் குழுக்களை அமைத்து கொள்ளை சம்பவங்களை தடுக்குமாறு பெரம்பலூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-