அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
 

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் ரேடார் வாயிலாக கண்காணித்து அபராதம் விதிக்க ரூ.10லட்சம் மதிப்பில் புதியபிரிவு உருவாக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்துள்ள 2015–ம் ஆண்டில் போலீஸ் துறையில் குற்றவழக்குகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:–

கொலை வழக்குகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2015–ல் 8 கொலை வழக்குகளில் 7 கொலை வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டும், 12 வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக பதிவான வழக்குகளில் 8 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் ரூ.1 கோடியே 11 லட்சத்து 72ஆயிரத்து 584 மதிப்புள்ள சொத்துகள் களவுபோனதில் ரூ.1கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. வாகன விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 27 ஆயிரத்து 463 வழக்குகளும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 327 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு. ரூ.29 லட்சத்து 9 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

12 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

2015–ம் ஆண்டில் 12 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும், மதுவிலக்கு தடுப்பு காவல் சட்டத்தில் கீழ் 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிராக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் குறித்து 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 57 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகப்படும்வகையில் இருந்ததாக ஆயிரத்து 799 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 601 பிடிஆணைகள் நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்டு அதில் 538 பிடிஆணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2014–ம் ஆண்டில் 769 சாலைவிபத்துக்களில் 161 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் 2015–ம் ஆண்டில் சாலைவிபத்துக்கள் 537 ஆகவும், அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 155 ஆகவும் குறைந்துள்ளது.ரூ.10 லட்சம் செலவில் ரேடார் பிரிவு

பெரம்பலூரில் விளாமுத்தூர் பிரிவு சாலை மற்றும் பாலக்கரை ஆகிய 2 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்கள் இம்மாதத்திற்குள் தொடங்கப்படும்.

சென்னை–திருச்சி நான்குவழிச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக ரேடார் கன் என்ற பிரிவு விரைவில் தொடங்கப்படும். அதாவது வேகமாக செல்லும் வாகனங்களை ரேடார் கன் பிரிவை சேர்ந்த ஒரு குழுவினர், 200மீட்டருக்கு அப்பால் அந்த வாகனத்தை வீடியோவில் பதிவுசெய்வார்கள். அந்த வாகனத்தின் பதிவு எண், அதன்வேகம் உள்ளிட்ட விபரங்கள் வீடியோவில் தெளிவாக பதிவாகும். அதனை மற்றொரு இடத்தில் ரோந்துபணியில் உள்ள ஹைவே போலீசாருக்கு கணினியில் 3ஜி வசதி மூலம் உடனே தெரிவிக்கப்படும். போலீசார் அந்த வாகனத்தை செக்போஸ்ட் உள்ள இடத்தில் நிறுத்தி டிரைவருக்கு எச்சரிக்கையும் விடுப்பதுடன், அபராதம் விதிப்பார்கள். மேலும் ரூ.10 லட்சம் மதிப்பிலான இந்த ரேடார் பிரிவு விரைவில் செயல்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், ஞானசிவகுமார், துணை சூப்பிரண்டுகள் கார்த்திக், செல்லபாண்டியன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-