அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்: திறப்பு விழா காணும் முன்பே விசுவக்குடி அணை பக்கவாட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம், தொண்டமாந்துறை இடையே கல்லாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையின் நீர்வளஆதார அமைப்பின் மூலமாக செம்மலை, பச்சமலை ஆகிய 2 மலைகளை இணைத்து ரூ33.07 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.3.3 கோடியில் உட்புறத்தை ஆழப்படுத்தி, பிரமாண்ட ஷட்டர்கள் அமைத்து, மொத்தம் ரூ.36.37 கோடியில் திட்டமிடப்பட்ட கட்டுமானப்பணிகள் 95 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்துள்ளன. விசுவக்குடி கல்லாறு அணை மூலம் 40.67 மில்லியன் கனஅடிநீரை சேமிக்க முடியும். 33 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கலாம். சமீபத்திய மழையால் இந்த அணையில் 25 அடி உயரத்திற்கு, அதாவது 23 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பியிருந்தது.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு விதிகளின்படி புதிதாக கட்டப்பட்ட அணையில் அதற்கு மேல் தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடாதென்றும், அதற்கு பிறகு எத்தனை கனஅடி தண்ணீர்அணைக்கு வருகிறதோ, அதே அளவுத் தண்ணீரை அணையிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் எனவும், ஓராண்டு கடந்த பிறகே படிப்படியாக அணையில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற விதிகளின்படி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அணையில் பக்க சுவர்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள், அணையின் தரத்தை ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்த வேண்டும் என பெரம்பலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து தற்போது பொதுப்பணித்துறை சார்பில் இந்த விரிசல்களை சரி செய்யும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘இந்த அணை திறப்பு விழா காணும் முன்பே இதுபோன்ற விரிசல்கள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அணையின் உறுதி தன்மை குறித்தும் ஆய்வு நடத்தப்பட வேண்டும்’ என்றனர்.
நன்றி 


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-