அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வேப்பந்தட்டை,

பெரம்பலூரிலிருந்து வி.களத்தூருக்கு காலை, மாலை வேலைகளில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று பள்ளி–கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையிலிருந்து வி.களத்தூர் செல்லும் வழியில் பாலையூர், தொண்டப்பாடி, நெய்குப்பை, என்.புதூர், மரவநத்தம், மேட்டுச்சேரி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களிலிருந்து வேப்பந்தட்டை மற்றும் பெரம்பலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவ–மாணவிகள் தமிழக அரசின் இலவச பஸ் பயண அட்டையை பயன்படுத்தி அரசு பஸ்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் நேரத்திலும் குறிப்பிட்ட நேரத்தில் போதிய பஸ் வசதிகள் இல்லை.

நீண்ட நேரம்

இதனால், பள்ளியிலிருந்து வரும் மாணவர்கள் கூட்டமாக, எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இதேபோல, இப்பகுதியிலிருந்து பெரம்பலூர் செல்ல காத்திருக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உரிய நேரத்துக்கு பஸ் வசதியின்றி நீண்ட நேரம் சாலையோரங்களில் காத்திருக்கும் நிலை உள்ளது.

கோரிக்கை

இதுகுறித்து மாணவர்கள் சிலர் கூறியதாவது:

கிராமப்புறங்களிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரக்கூடிய காலை, மாலை நேரங்களில் போதிய பஸ் வசதியில்லை. வரக்கூடிய ஒரு டவுன் பஸ்சிலும் பயணிகள் அதிகளவில் ஏறிக்கொள்கின்றனர். இதனால் மாணவர்களாகிய நாங்கள் பஸ் படிக்கட்டுகளிலும், மேற்கூரைகளிலும் தொங்கிக்கொண்டு பயணிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதன் காரணமாக வீட்டுக்கு தாமதமாக செல்வதால், உடல் அசதி ஏற்பட்டு மாலை நேரங்களில் படிக்க முடியாத சூழல் உருவாகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி குறித்த நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி சென்று வரும் வகையில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-