அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மும்பை: மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த மும்பையை சேர்ந்த நபருக்கு துபாயில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவருடைய அப்பீல் மனுவை துபாய் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். மும்பையை சேர்ந்தவர் அதிப் போபெரே. மும்பையில் இருக்கும்போது மாட்டுங்கா கல்லூரி ஒன்றில் படித்த மினி தனஞ்சயன் என்ற மாணவியை காதலித்தார். இருவரும் கடந்த 2008ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு மினி தனஞ்சயன் தன் பெயரை புஷ்ரா என மாற்றினார். இருவருக்கும் 2009ல் பெண் குழந்தை பிறந்தது.

போபெரே பின்னர் வேலைக்காக துபாய் சென்றார். கடை மானேஜராக வேலை செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புஷ்ராவும் துபாய் சென்று கணவருடன் வசித்து வந்தார். குழந்தைக்கு மூன்று வயதானபோது அதை ராய்கட் மாவட்டத்தில் வசித்து வரும் போபெரேயின் பெற்றோரிடம் கொண்டு விட்டனர். புஷ்ராவின் சகோதரர் நிகில் என்பவர் துபாய் அருகே உள்ள ஒரு இடத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2013ம் ஆண்டு போபெரேயின் பெற்றோர் நிகிலை போனில் கூப்பிட்டு புஷ்ரா எங்கே இருக்கிறாள் என்று கேட்டிருக்கின்றனர். இதைக் கேட்டதும் நிகில் உடனே துபாய் புறப்பட்டுச் சென்றார். அங்கே தன் சகோதரியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். போலீசில் இது குறித்து புகார் செய்தார். மறுநாள் அதாவது 2013 மார்ச் 13ம் தேதி புஷ்ராவின் உடல் துபாயின் அல் புக்கா பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக நிகிலிடம் போலீசார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையில் புஷ்ரா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. புஷ்ராவின் உடல் கண்டெடுக்கப்பட்டதில் இருந்து கணவர் போபெரேயை காணவில்லை. தலைமறைவாகி விட்டார். கூட்டாளி ஒருவர் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார். எனினும் 2013 ஜூன் மாதம் மீண்டும் துபாய் திரும்பி போலீசில் சரணடைந்தார். இந்த வழக்கில் போபெரேக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அவர் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தார். மரண தண்டனைய ஆயுளாக குறைக்கும்படி கோரியிருந்தார். ஆனால் அவருடைய அப்பீல் மனுவை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் நிராகரித்து விட்டது. இதையடுத்து போபெரேவுக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது. அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவார்.

துபாய் சட்டதிட்டங்களின்படி புஷ்ராவின் பெற்றோர் போபெரேயை மன்னித்தால் மட்டும் அவர் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். அப்போது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படும். ஆனால் புஷ்ராவின் தாயார் உமா தனஞ்சயன் அவனை மன்னிக்க தயாராக இல்லை. உமா இது குறித்து கூறும்போது, “இதுவரை எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும்கூட அவனை நான் கண்டிப்பாக மன்னிக்க மாட்டேன்” என்றார். புஷ்ராவின் திருமணத்துக்கு முன்பு உமா தன் மகன் மற்றும் மகளுடன் டோம்பிவலியில் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் துபாய் சென்ற பிறகு உமா கேரளாவுக்கு சென்று விட்டார். தற்போது கேரளாவில்தான் இருக்கிறார். இதற்கிடையே தற்போது 6 வயதாகும் பெண் குழந்தையை போபெரேயின் பெற்றோரிடம் இருந்து தங்கள் வசம் பெறுவதற்காக புஷ்ராவின் பெற்றோர் போராடி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-