அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சென்னை,

வெளிமாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பஸ்களில் ஆந்திர கொள்ளையர்கள், பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை தொடர்ந்து கொள்ளையடித்து வருகிறார்கள். முகூர்த்த நாட்களில் மட்டும் இந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். நகைகளை பறிகொடுத்த 100-க்கும் மேற்பட்டோர் இதுவரை புகார் கொடுத்துள்ளனர்.

வெளிமாவட்ட பஸ்கள்

வெளிமாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பஸ்களில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். இவர்கள் கோயம்பேடு பஸ்நிலையத்தில் வந்து இறங்குகிறார்கள். இவ்வாறு பஸ்சை விட்டு இறங்கும் பயணிகள் தங்களது சூட்கேசை காணவில்லை, பைகளை காணவில்லை, அதற்குள் வைத்திருந்த ரொக்கபணம் பறிபோய்விட்டது, நகைகள் திருட்டு போய் விட்டது என்று கூச்சலிடும் குரல்களை சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் அன்றாடம் காணலாம்.

இதுதொடர்பாக சென்னை கோயம்படு பஸ்நிலைய போலீஸ் நிலையத்தில் கடந்த 6 மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன. வெளிமாவட்டங்களிலிருந்து வரும் அரசு பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும் பயணிகளிடம் இதுபோன்ற திருட்டுகள் அதிக அளவில் நடக்கின்றன. திருமண முகூர்த்த நாட்களில் இந்த திருட்டுகள் பெரும்பாலும் அரங்கேற்றப்படுவது வழக்கமாக உள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியிலிருந்து சென்னைக்கு வந்த நகை வியாபாரி ஒருவர் ஓடும் பஸ்சிலேயே 1லு கிலோ நகைகளை களவு கொடுத்து விட்டார். அவர் கோயம்பேடு பஸ்நிலைய போலீசில் பரிதாபமாக புகார் கொடுத்துவிட்டு சென்றார். சென்னை நகரில் பணியாற்றி ஓய்வுபெற்ற 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் 50 சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகளை பஸ்சில் பறிகொடுத்தனர்.

மணப்பெண்ணின் நகைகள்

இதுபோல திருச்செந்தூரிலிருந்து ஆம்னி பஸ் ஒன்றில் மணப்பெண் ஒருவர் சென்னைக்கு வந்தார். அவர் திருமணத்திற்காக வைத்திருந்த சுமார் 70 சவரன் நகைகளை கொள்ளையர்கள் பஸ்சிலேயே சுருட்டி சென்றுவிட்டனர். ,

திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த அந்த மணப்பெண் கண்ணீருடன் புகார் கொடுத்துவிட்டு சென்றார். இதுபோல நகைகளை மட்டுமல்லாது ரொக்கபணத்தையும் பறிகொடுத்து விட்டு சென்றவர்களின் கண்ணீர் கதைகள் ஏராளம்.

இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் மீது கோயம்படு பஸ்நிலைய போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கும் போடவில்லை. புகார் கொடுப்பவர்களிடம் திருட்டு எங்கள் எல்லையில் நடக்கவில்லை நாங்கள் என்ன செய்வோம் என்று அனுப்பி வைத்து விடுகிறார்கள். உயர் போலீஸ் அதிகாரிகள் கூட இதைக் கண்டுகொள்ளவே இல்லை. நகைகளை பறிகொடுத்தவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும் படையெடுத்து மனு கொடுத்து விட்டனர். அதற்கும் எந்த பலனும் இல்லை.

ஆந்திர கொள்ளையர்கள்

இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் தான் என்பது தெரியவந்துள்ளது. அந்த கொள்ளையர்கள் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை பிடிக்க கோயம்பேடு பஸ்நிலைய போலீசாரை ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து செல்வதற்கான செலவுத்தொகையை கூட புகார்தாரர்கள் தருவதாக சொல்லிப்பார்த்தனர். அதையும் கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் கண்டுகொள்ளவில்லை. கொள்ளையர்கள் யாரென்று தெரிந்தும், அவர்களை கைது செய்து நகை-பணத்தை மீட்டு தர சென்னை போலீசார் தயக்கம் காட்டும் நடவடிக்கைக்கு புகார் கொடுத்தவர்கள் கடும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

குற்றம் எங்கு நடந்தாலும் அதை பார்க்காமல் புகார் எங்கு கொடுக்கப்படுகிறதோ அந்த போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும் ஓடும் பஸ்களில் மேற்கண்ட கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. அது எங்கு நடந்தது என்பதை கூட சொல்ல முடியாது. பஸ்சில் நடந்த திருட்டை பஸ்நிலைய போலீசார் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கடந்த 6 மாதமாக புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், சி.எஸ்.ஆர் கூட கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாக பாதிக்கப்பட்ட பயணிகள் கண்ணீரோடு சொல்கிறார் கள்.

வெளியூர்களுக்குசெல்லும் பயணிகள்

கோயம்பேடு பஸ்நிலையத்தில் வந்து இறங்கும் வெளியூர் பயணிகளுக்கு தான் இந்த நிலை என்றால், கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு பஸ் ஏற வரும் பயணிகளுக்கும் இதே நிலைமை தான். அவர்களும் ஏராளமான நகை-பணம் மற்றும் பொருட்களை கடந்த 6 மாதத்தில் பறிகொடுத்துள்ளனர். ஏராளமான லேப்-டாப்களும் திருட்டு போயிருக்கின்றன.

கோயம்பேடு பஸ்நிலையத்திலேயே சுற்றி திரியும் திருடர்களை கூட கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் பிடிப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது. சமீபத்திய மழை வெள்ளத்தால் பஸ்களில் நடந்த கொள்ளை சம்பவங்களும், ஓடும் பஸ்சில் நடக்கும் கொள்ளை சம்பவங்களும், கோயம்பேடு பஸ்நிலையத்தில் நடந்த திருட்டு சம்பவங்களும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

தை மாதம் பிறந்தவுடன் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடும் என்று பயணிகள் அச்சத்துடன் உள்ளனர். சென்னை நகரின் புதிய போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது உரிய வழக்குப்பதிவு செய்யவும், அதில் சம்பந்தப்பட்ட ஆந்திர கொள்ளையர்களை கைது செய்யவும், விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயணிகள் எதிர்பார்க்கிறார் கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-