அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய் 22:2015
துபாயில் வேறு வழியில்லாமல் 2 வாரங்களாக ஒரு பேருந்தில் தங்கியிருந்த இந்தியர்களுக்கு உதவி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன் வந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 12 பேர் வேலைக்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துபாய் சென்றனர்.
விசா பெற உள்ளூர் டிராவல் ஏஜெண்டிடம் அவர்கள் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை அளித்தனர். துபாய் சென்ற அவர்கள் கஸ்ர் அல் அமீர் என்ற நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றியுள்ளனர். அவர்கள் புஜைரா-ஓமன் எல்லையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நேரம் கஸ்ர் அல் அமீர் நிறுவனம் திடீர் என்று மூடப்பட்டு அதிகாரிகள் மாயமாகிவிட்டனர். அந்த ஊர் ஏஜெண்டும் தலைமறைவாகிவிட்டார்.
இதனால் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 12 பேரும் தாங்கள் தங்கியிருந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சில நாட்கள் அல் கூஸ் கட்டுமான தளத்திற்கு அருகே தங்கியிருந்த அவர்கள் துபாய்க்கு சென்றனர். அங்கு அவர்கள் வேறு வழியில்லாமல் நிறுவன பேருந்தில் 14 நாட்கள் தங்கியிருந்தனர். பின்னர் அவர்களுக்கு 2 என்.ஆர்.ஐ.க்கள் உதவி செய்து தங்க இடத்திற்கும் ஏற்பாடு செய்தனர்.
உதவி செய்தவர்களில் ஒருவர் பேஷன் டிசைனர் ஜுஹி கான், மற்றொருவர் சமூக ஆர்வலரான கிரிஷ். கிரிஷ் உத்தர பிரதேச அரசை தொடர்பு கொண்டு அந்த 12 பேரின் நிலை குறித்து தெரிவித்துள்ளார். ஜுஹி இந்திய தூதரகத்தை அணுகி அந்த 12 பேர் குறித்து தெரிவித்துள்ளார். இதற்கிடையே கிரிஷும், ஜுஹியும் சேர்ந்து அந்த 12 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அந்த ஏஜெண்ட் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நான் உத்தர பிரதேச மாநில அரசை கேட்க உள்ளேன். துபாயில் உள்ள நம் தூதரகம் அவர்களுக்கு உதவி செய்யும் என தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-