அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சில ஆண்டுகளுக்கு முன்னால் சைனாய் பாலைவனத்தில் இருக்கும் புனித காதரீன் துறவியர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். 1500 வருடங்கள் பழமையானது. இங்கு இருக்கும் ஆவணங்களில் ஒன்று, நபிகள் நாயகம் அவரது காலத்தில் அங்கிருந்த துறவிகளுக்கு எழுதிய கடிதம். அதில் அளிக்கப்பட்டிருக்கும் பல சலுகைகளில் முக்கியமானது கிறித்தவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்ற முழு அனுமதி அளித்திருப்பது. கடிதம் இன்னொன்றும் சொல்கிறது. ஒரு கிறித்தவப் பெண், இஸ்லாமியரை மணம் புரிந்திருந்தாலும் அவர் கிறித்துவ வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை.

கடிதம் போலி, 16-ம் நூற்றாண்டுத் தயாரிப்பு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இந்தத் துறவியர் இல்லம் 1500 ஆண்டுகள் ஆகியும் அழிக்கப்படாமல் இருக்கிறது. போலியாகவே இருந்தாலும் நபிகள் நாயகம் இப்படித்தான் எழுதுவார் என்ற எண்ணம் கடிதத்தைத் தயாரித்தவர்களுக்கு வந்ததே அவர் மீது மற்ற மதத்தினர் வைத்திருந்த மதிப்புக்குச் சான்றாகக் கொள்ளலாம்.

வெற்றி மேல் வெற்றி

ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரேபியாவை இரு பேரரசுகள் நெருக்கிக்கொண்டிருந்தன. ஒன்று, பைசாண்டியப் பேரரசு. மற்றொன்று, பாரசீகப் பேரரசு. நபிகள் நாயகம் இறந்து 100 ஆண்டுகள் முடிவதற்கு முன்னால் பாரசீகப் பேரரசு இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டது. கான்ஸ்டாண்டிநோபிளை (இன்றைய இஸ்தான்புல்) அரேபியர்கள் முற்றுகையிடும் அளவுக்கு பைசாண்டியப் பேரரசு ஆட்டம் கண்டுவிட்டது. எல்லா இடங்களிலும் இஸ்லாமியப் படைகள் வெற்றி மேல் வெற்றி கண்டன.

எதனால் இந்த வெற்றி?

தனது ‘ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்’புத்தகத்தில் எட்வர்ட் கிப்பன் எழுதுகிறார்: அபூபக்கர் ( முதல் காலிபா; நபிகள் நாயகத்தின் மாமனார். ஆயிஷாவின் தந்தை) தான் ஆட்சிக்கு வந்ததுமே தனது சொத்துக்களை மதிப்பீடு செய்யும்படி தனது மகளுக்கு ஆணையிட்டார். அவர் தனக்கு அனுமதித்துக்கொண்டது வாரம் மூன்று தங்கத் துண்டுகள், ஒரு கருப்பின அடிமை, ஒரு ஒட்டகம். வெள்ளி தோறும் மீதியிருக்கும் பணத்தை எளியவர்களுக்கு அளித்துவிடுவார். இறக்கும்போது அவர் விட்டுச்சென்றது ஒரு முரட்டு ஆடையும், ஐந்து தங்கத் துண்டுகளும் மட்டுமே. அவருக்குப் பின்வந்த உமர் காலிபாவும் எளிமையின் இலக்கணமாக இருந்தார். அவரைப் பார்க்க வந்த பாரசீகத் தூதர் அவர் பிச்சைக்காரர்களுக்கு மத்தியில் மதீனா மசூதியில் படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தார். இவர்களுக்கு முன்னுதாரணம் இறைத் தூதர். இத்தகைய அரிய மனிதர்களைச் செதுக்கி உருவாக்கியவர் அவர்.

யார் இந்த மனிதர்?

அறியாப் பருவத்திலேயே தாய், தந்தையரை இழந்த முஹம்மது இறைத் தூதராக ஆகிய வரலாறு நமக்குத் தெரிந்த ஒன்று. ஆனால், பலருக்கு அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்ற தகவல் புதிதாக இருக்கும். இறைவனால் அவர் மூலம் சொல்லப்பட்டதாக இஸ்லாமியர்கள் நம்பும் திருக்குரானின் மொழி மிகவும் அழகானது என்று எல்லா அரேபிய மொழி அறிஞர்களும் சொல்கிறார்கள். நபிகளை முழுவதுமாக எதிர்த்த உமர் பின் அல் காதப் என்பவர் அரேபியக் கவிதையில் தேர்ச்சிபெற்றவர். அவர் திருக்குரானின் மொழியில் மயங்கி இது இறைவனின் சொற்களாகத்தான் இருக்க வேண்டும் என்று மனம் மாறிவிட்டார். இவரைப் போன்று பலரைப் பல வழிகளில் மாற்றி, சிதறிக்கிடந்த அரேபிய இனக் குழுக்களை இருபதே ஆண்டுகளில் ஒன்று சேர்த்தவர் நபிகள் நாயகம்.

கரன் ஆம்ஸ்ட்ராங் தனது ‘இஸ்லாமிய வரலாறு’ புத்த கத்தில் சொல்கிறார்: ‘நபிகளின் செய்தி ஆபிரகாம், மோஸஸ், டேவிட், சாலமன் மற்றும் ஏசு போன்றவர்களின் செய்திகளை ஒத்தது. அவர் கிறித்துவர்களையோ, யூதர்களையோ இஸ்லாமியராக மதம் மாற வற்புறுத்தவில்லை.

‘திருக்குரான் கூறுகிறது: ‘‘வெளிப்பாடுகளை நம்புகிறவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர, மற்றவர்களிடம் பணிவான முறையில் அன்றி வாதம் செய்யாதீர்கள்! எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று கூறுங்கள்.

‘நபிகள் நாயகம் இந்து மதத்தைப் பற்றியோ புத்த மதத்தைப் பற்றியோ.. அறிந்திருந்தால் அவர்களால் மதிக்கப்படும் பெரியவர்களைப் பற்றிக்கூட திருக்குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.’

நபிகள் பலதார மணம் புரிந்தவர் என்று குற்றம் சாட்டப்படுகிறார். அவர் மெக்காவில் இருந்தவரை கதீஜா பெருமாட்டி ஒருவர்தான் அவரது மனைவி. ஆனால், மதீனாவில் அவர் ஒரு ‘சயீதா’க தலைவராக இருந்தார். அன்றைய வழக்கப்படி தலைவர்களுக்குப் பல மனைவிகள் இருந்தார்கள். அவரது திருமணங்களில் பல அரசியல் காரணங்களுக்காக நிகழ்ந்தவை. அவர் எல்லா மனைவிகளையும் சமமாக நடத்தினார். வீட்டு வேலைகளில் மனைவிகளுக்கு உதவி செய்தார். தன் உடைகளின் கிழிசல்களைத் தானே தைத்துக்கொண்டார்.

பெண்களும் ஆண்களும் கடவுள் முன் சமம், அவர்கள் துணைவர்கள் என்று திருக்குரான் சொல்கிறது. விவாகரத்து உரிமையையும் சொத்துரிமையையும் பெண்களுக்கு இஸ்லாம் அளித்தது. பலதார மணத்தை திருக்குரான் அனுமதித்தது என்றால் அதற்குக் காரணம், அந்தக் காலகட்டத்தில் அடிக்கடி நடந்துகொண்டிருந்த போர்களும் அவற்றில் பெருமளவு மரணமடைந்த இளைஞர்களும்தான். திருக்குரானில் எங்குமே பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்றோ வீட்டில் ஒதுக்கப்பட்ட பகுதியில் வசிக்க வேண்டும் என்றோ கூறியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஏழைகளின் தோழர்

இஸ்லாமின் ஐந்து தூண்களில் ஒன்றாக ஏழைகளுக்கு உதவுவது சொல்லப்படுகிறது. நபிகள் தனது வாழ்க்கையில் என்றுமே ஏழைகளின் சார்பில் இருந்தார். ஒரு முறை அவரைக் காண பணக்காரர் ஒருவர் பளபளப்பான உடையில் வந்தார். பின்னால் கந்தலான உடையில் ஏழை ஒருவர் வந்து அவர் அருகில் அமர்ந்தார். பணக்காரர் தனது ஆடை அவர் மீது படாமல் இருக்கும்படி இழுத்துக்கொண்டார். அதைக் கண்ட நபிகள் ‘அழுக்குப்பட்டு விடுமோ?’ என்றார். பணக்காரர் வெட்கப்பட்டு ‘எனது செயலுக்கு வருந்துகிறேன். அதற்குத் தண்டனையாக எனது சொத்தில் பாதியை இவருக்குத் தருகிறேன்’ என்றார். கந்தல் உடைக்காரர் ‘எனக்கு வேண்டாம். நானும் பணக்காரனானால் எனக்கும் திமிர் வந்து ஏழை முஸ்லிம்களை இவர் நடத்தியதுபோல நானும் நடத்தக் கூடும்’ என்றார். இந்தச் சமத்துவச் செய்திதான் நபிகள் மீது அரேபிய மக்களை ஈடுபட வைத்தது. பின்னால் உலகம் முழுவதும் இஸ்லாம் மதத்தினுள் மக்களை வரவழைத்தது.

இஸ்லாமின் மற்றைய நான்கு தூண்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும் – இறைவனையும் நபியையும் நம்ப வேண்டும், ஐந்து முறை தொழ வேண்டும், ரம்ஜான் நோன்பு இருக்க வேண்டும், முடிந்தால் ஹஜ் செல்ல வேண்டும் என்பன அவை. ஜிகாத் ஐந்து தூண்களில் ஒன்று இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நபிகள் தனக்கு இறை சக்தி இருப்பதாக ஒருபோதும் சொன்னதில்லை. தன்னைத் தொழ வேண்டும் என்றும் அவர் சொன்னதில்லை. அவர் தன்னைச் சாதாரண மனிதர் என்றே அழைத்துக்கொண்டார். இந்த மனிதத் தன்மைதான் அவரை மதிப்பீடற்ற மனிதராக ஆக்குகிறது.

– பி. ஏ. கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,

நன்றி தி இந்து நாளிதழ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-