அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...






சந்திர சுழற்சியின் அடிப்படையில் மாதங்களை தீர்மானிக்கும் முஸ்லிம்களாகிய நாம் ஒருமாதத்தை பிறையை பார்த்த இரவிலிருந்து(மஃரிபிலிருந்து) கணக்கிடுகிறோம். இம்முறைகளில் ஒரு மாதத்தின் ஓர் அங்கமான ஒருநாளைப் பற்றிய முழுமையான குறிப்புகளை இறை வேதத்திலும் நபிவழியிலும் அலசிப் பார்ப்போம்;.

''சூரியன் மறையும் எல்கையை அவர் அடைந்த பொழுது (கருப்பு) சேற்றுக் கடலில் அது மறைவதைக் கண்டார்: அவ்விடத்தில் ஒரு சமூகத்தாரையும் கண்டார்...'

(18:86)

''சூரியன் உதயமாகும் எல்கையை அவர் அடைந்த பொழுது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி இருப்பதையும் கண்டார்: அவர்களுக்கு அதைத்தவிர்த்து (அதன் வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ள) எந்த தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை.'

(18:90)

சூரியன் மறைவதும், உதிப்பதும் பொதுவாக உலகின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுதான். இருப்பினும் இத்தொடர்ச்சியான நிகழ்வுக்கு இறைவன் பூமியில் இரண்டு எல்கைகளை நிர்ணயித்துக் காட்டுகின்றான். அதற்குரிய அடையாளங்களையும் சுட்டிக்காட்டுகின்றான். எனவே அந்த எல்கைகளை முதலில் அறிந்துகொள்வோம்.

அல்லாஹ் சூரியன் மறையும் எல்கையின் அடையாளமாக கருப்பு சேற்றுநீரை (அல்லது கொதிக்கும் நீர் என்றும் சில விரிவுரைகளில் உள்ளன) குறிப்பிடுகிறான். மேலும் அங்கு ஒரு சமூகத்தினர் வாழ்ந்து கொண்டிருந்தனர் என்றும் கூறுகின்றான்.

இக்குறிப்புகளை நன்றாக ஆராய்ந்து பார்ததில் அது டெட் சி ( DEAD SEA ) என்ற கடலையே சுட்டிக் காட்டுகிறது என்பதனை விளங்கிக் கொள்ளலாம். உலகின் ஏனைய கடல்களைவிட 20-25 மடங்கு அதிகமாக உப்பும், கனிமமும் இக்கடலில் காணப்படுகின்றன. எனவே இக்கடல் நீர் கறுப்பு நிறத்துடன் சேற்றுமண் கலந்தது போல் தோற்றமளிக்கின்றது. இதுவே இக்கடலின் தனிச் சிறப்பாகும். இக்கடலின் கருப்பு சேற்றுமண்ணை அப்பகுதி மக்களும், அங்கு சுற்றுலா செல்பவர்களும் தங்கள் உடம்புகளில் தேய்த்துக் குளித்து நோய் நிவாரணமும் பெறுகின்றனர்.

இக்கடலில் எவரும் மூழ்கடிக்கப்படுவதும் இல்லை. எவ்வித நீச்சல் சாதனங்களுமின்றி நீந்தத் தெரியாதவர்களும்கூட இக்கடலில் நடக்கலாம் தன்உடம்பால் மிதக்கலாம். இந்தக் கடலில் எவ்வித உயிரிணங்களும் வாழவும் முடியாது. மேலும் இக்கடலின் கரையோரங்களில் கொதிக்கும் நீர் ஊற்றுகளும் ( HOT WATER SPRINGS ) மிகஅதிகமாக காணப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இந்தச் சேற்றுக் கடலில் சூரியன் மறையும் நிகழ்வு ஒரு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. எனவே இந்த நிகழ்வை காண்பதற்கு சுற்றுளா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் அங்கு ஒன்றுகூடுகின்றனர்.

இக்கடலின் ஒருகரையில் அமைந்துள்ள ஜெருசலத்தில் தான் உலகின் முதல் கிப்லாவான பைதுல் முகத்தஸ் என்று அழைக்கப்படும் மஸ்ஜித் அல் அக்ஸா அமைந்துள்ளது. இறைத்தூதர்களின் தூதுத்துவத்தின் கேந்திரமாக பைத்துல் முகத்தஸ் அமைந்திருந்தது என்பதையே அங்கு ஒரு சமுதாயம் வாழ்ந்து கொண்டிருந்தது என்று இறைவன் மேற்கோள் காட்டுகின்றான்.

பூமியின் ஒருபாகம் இரவிலிருந்தால் அதன் மறுபாகம் பகலில் இருக்கும். உலகின் ஒருஎல்கையில் சூரியன் மறைகிறது என்றால், அதன் மறுஎல்கையில் சூரியன் உதித்துக் கொண்டிருக்க வேண்டும். எனவே மஸ்ஜித் அல் அக்ஸாவில் சூரியன் மறையும் நேரத்தில், உலகின் மறு எல்கையில் சூரியன் உதித்துக் கொண்டிருக்க வேண்டும்.

சூரியன் உதித்துக் கொண்டிருக்கும் இந்த எல்கையை பசிபிக் கடலின் நடுவில் மிகப் பரந்த கடல் வெளியில் அமைந்துள்ள பிரன்ச் பாலிணீஸியா என்று அழைக்கப்படும் தீவுகளுக்கருகில் (படம் 2) காணலாம்.




இந்தப் பரந்த கடல் வெளியில் அமைந்துள்ள தீவுகள் அனைத்தும் வெயில் காயும் சுற்றுலா மையங்களாகவே ( SUN BATHING BEACHES) காணப்படுகின்றன. மேலும் கடலில் மீன்களை வேட்டையாடி அரைநிர்வானமாக வாழ்ந்துவந்த பாலிணீஸியர்கள் என்று அழைக்கப்படும் குள்ளமான பழங்குடியினர்கள் இந்தக் கடல்வெளியில் அமைந்துள்ள தீவுகளில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதை ஆய்வுகள் அறிவித்துத் தருகின்றன.

இறைவன் இவ்வுலகில் நிர்ணயித்துள்ள இரண்டு எல்கைகளையும் அது எங்கு அமைந்துள்ளது என்பதையும் அறிந்து கொண்டோம். சூரியன் உதிக்கும் எல்கையை மிகப்பரந்த கடல் வெளியிலும், சூரியன் மறையும் எல்கையை மக்கள் அதிகமாக வாழ்கின்ற நிலப்பகுதியிலும் நிர்ணயித்துள்ளான். இந்த இரண்டு எல்கைகளின் மூலம் ஒருநாள் துவங்குவதற்குரிய சரியான நேரத்தையும், அந்நாள் துவங்குவதற்குரிய முறையான எல்கையையும் அறிந்து கொள்வோம்.

'அவனே பொழுது விடியச் செய்பவன்: (நீங்கள் இளைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான். இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்படாகும்.' (6:96)

'இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்: பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம். உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும் ஆண்டுகளின் எண்ணிக்கையினையும் (மாதத்தின்) கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் , பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.

(17:12)

இந்த வசனங்களில் வெளிச்சம் தளர்ந்து இருள் சூழ்ந்து கொள்ளும் இரவு, அமைதி பெறுவதற்குரியது என்றும் ஆண்டுகளையும், மாதங்களையும், நாட்களையும் கணக்கிடுவதற்குரிய நேரம் பிரகாசமாக உதயமாகும் பகல் என்றும் இறைவன் நமக்கு தெளிவாக அறிவித்துத் தருகின்றான். இதற்கான மேலும் சில ஆதாரங்களையும் காண்போம்.

''தொழுகைகளை , (குறிப்பாக)நடுத்தொழுகையைப் பேணிக்கொள்ளுங்கள். (அப்போது) அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக நில்லுங்கள்.”

(2:238)

இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அஸர் தொழுகையை நடுத்தொழுகையாக குறிப்பிட்டுள்ளதாக முஃமின்களின் தாயார் ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கும் தகவல் புஹாரியில் பதிவாகியுள்ளது.

ஒருநாளை இரவிலிருந்து துவங்கும்போது அதன் முதல் தொழுகை மஃரிபாகவும் பின்னர் இஷா , ஃபஜர் , ளுஹர் என்று அஸர் அந்த நாளின் கடைசித் தொழுகையாக முடியவேண்டும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அஸரை நடுத் தொழுகையாக குறிப்பிட்டுள்ளதால் ஒருநாளின் முதல் தொழுகை ஃபஜ்ராகத்தான் இருக்கவேண்டும். அப்போதுதான் ஃபஜ்ர் , ளுஹர் , அஸர் , மஃரிப் , இஷா என்ற வரிசையில் அஸர் நடுத் தொழுகையாக அமையும். எனவே ஒருநாள் ஃபஜ்ரிலிருந்துதான் துவங்குகிறது என்பதற்கு இது ஒரு ஆதாரமாக அமைகிறது.

ஒருநாளின் கடைசித் தொழுகையாக வித்ரைத் தொழுதுகொள்ளுங்கள். அது தொழுகையின் மூடியாகும் என்பதாக நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதுவும் ஒருநாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான் என்பதற்கான ஒரு ஆதாரமாகும்.

ஒருநாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான் என்பதற்கான ஒரு உறுதியான ஆதாரமாகவும் , ஒருநாளின் பகலைத் தொடர்ந்து சூரியனின் மறைவிற்குபின் வருகின்ற இரவை மறுநாளின் இரவாகவே கணக்கிடும் வழக்கம் நிலவிவந்தது பின்னர் அல்லாஹ் அந்த தவறிலிருந்து நமக்கு சரியான வழியைக் காட்டிவிட்டான் என்பதற்கு ஆதாரமாகவும் , லைலத்துல் கத்ர் என்பது கண்ணியமிக்க ஓர் இரவு மட்டுமல்ல மாறாக ஒரு மாதத்தின் ஓர் அங்கமான ஒரு முழுநாள் என்றும் ஆயிரம் மாதங்களுக்கு நிகரான அந்த கண்ணியமிக்கநாள் ஃபஜ்ரிலிருந்து மறுநாளின் ஃபஜ்ர் உதயமாகும்வரை நீடித்திருக்கும் என்பதற்கான தெளிவான அதாரமாகவும் நபி(ஸல்) அவர்களின் இஃதிகாஃப் அமைந்துள்ளது. இதனை விவரிக்கும் அறிவிப்புகள் அனைத்தும் ஸஹீபுஹாரியிலும் , முஸ்லிமிலும் பதிவாகியுள்ளன.

நபி(ஸல்) அவர்களின் இஃதிகாஃப் எவ்வாறு அமைந்திருந்தது ? என்பதை முதலில் விளங்கிக் கொள்வோம். நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரையில் கடைசி பத்து நாட்களில் இஃதிகாப் இருந்தார்கள் என்ற தகவல் ஆயிஷா(ரழி) அவர்கள் மற்றும் இப்னு உமர்(ரழி) அவர்கள் வாயிலாக புஹாரியில் பதிவாகியுள்ளது. நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்திற்குள் நுழைந்துவிடுவார்கள் என்றும் ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அப்படியானால் கடைசிப் பத்தில் இருபத்தொன்றாம் நாளின் ஸுப்ஹுத் தொழுகையைத் தொடர்ந்து இஃதிகாஃபில் நுழைகின்ற நபி(ஸல்) அவர்களுக்கு இருபத்தொன்றாம் இரவு என்று வழக்கிலிருந்த அன்றைய ஸுப்ஹுவுக்கு முந்திய இரவு கிடைப்பதற்கு நிச்சயமாக வாய்பில்லை. எனவே நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை இருபத்தொன்றாம் இரவாக கணக்கிடவில்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

ஒருநாளை இரவிலிருந்து கணக்கிடும் வழக்கம் இருந்தது. அது தவறானது. எனவே அதனை அல்லாஹ் எவ்வாறு காட்டித்தருகிறான் என்பதையும் காண்போம். ஓர் ஆண்டு நபி(ஸல்) அவர்கள் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருக்கிறார்கள். இருபதாம் நாள் காலையில் இஃதிகாஃபிலிருந்து வெளியேறிவிடுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரை ஒரு இரவாக மட்டுமே கருதியதாலும் இருபதாம்இரவு இருபதாம்நாளின் ஸுப்ஹுவுக்கு முந்திய இரவு என வழக்கத்திலிருந்ததாலும் இருபதாம் நாளின் ஸுப்ஹுவுக்கு பின்னர் இஃதிகாஃபிலிருந்து வெளியேறிவிடுகிறார்கள்.

பின்னர் அந்த இருபதாம் நாள் காலையில் மக்களை அழைத்து ஒரு சொற்பொழிவாற்றுகிறார்கள். அப்போது ''லைலத்துல் கத்ரை கடைசி பத்தில் தேடிக்கொள்ளுங்கள். அது எனக்குக் காட்டப்பட்டது பின்னர் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. நான் ஈரமான மண்ணில் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே என்னுடன் யார் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் உடனே பள்ளிக்கு திரும்பட்டும் , அவர்களுடைய இஃதிகாஃபை தொடரட்டும் , கடைசிப் பத்தின் ஒற்றைபடை நாட்களில் அதனைத் தேடிக்கொள்ளட்டும்.” என்று நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஓர் ஆண்டில் மட்டும்தான் நபி(ஸல்) அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியேறிய மக்களை உடனே திரும்பவும் அழைத்து நடுப்பத்தில் விடுபட்டுவிட்ட இருபதாம் நாளையும் , கடைசிப் பத்தையும் அவர்கள் பூர்த்தி செய்யவேண்டும் என்பதற்காக இஃதிகாஃபை தொடரச் செய்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டிற்குப் பின்னர் நபி(ஸல்) அவர்கள் இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுவிலிருந்து மட்டுமே கடைசிப் பத்தை கணக்கிடுகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்களின் அறிவிப்புகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

''நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரையிலும்” என்ற அதிகப்படியான வார்ததைகளின் அழுத்தத்துடன் இஃதிகாஃப் பற்றிய இந்த அறிவிப்பை ஆயிஷா(ரழி) அவர்கள் பதிவுசெய்கிறார்கள். அதாவது இதற்கு முன்னர் நிலவிவந்த நிலைபாடுகள் மாற்றப்பட்டுவிட்டன என்பதையே இங்கு வலியுறுத்துகிறார்கள்.

''லைலத்துல் கத்ரை கடைசி பத்தில் தேடிக்கொள்ளுங்கள். அது எனக்குக் காட்டப்பட்டது பின்னர் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. நான் ஈரமான மண்ணில் ஸஜ்தா செய்யக் கண்டேன்.” என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் : தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது பின்னர் நபி(ஸல்) அவர்களின்; முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க , ஸுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் எனது இருகண்களும் பார்த்தன. அது இருபத்தொன்றாம் நாளின் ஸுப்ஹு என்றும் அபுஸயீத் அல்குத்ரி(ரழி) அவர்கள் வாயிலாக புஹாரியில் பதிவாகியுள்ளது.

லைலத்தில் கத்ரின் அடையாளமாக நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண்னில் ஸஜ்தா செய்வதாக கணவில் காட்டப்படுகிறார்கள். மேலும் மழைபெய்ததும் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் அடுத்தடுத்து தொடர்ந்தார்போல் நிகழ்ந்த சம்பவங்களாகவே பதிவாகியுள்ளன.

இரவுத் தொழுகையின்போதோ அல்லது ஃபஜர் தொழுகையின் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் தொழுதிருக்கவேண்டிய சுன்னத்தான தொழுகையை நிறைவேற்றியபோதோ நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண்னில் ஸஜ்தா செய்ததாக இல்லை. ஏனெனில் நபி(ஸல்) அவர்களின் முகத்தில் களிமண் ஒட்டிக் கொண்டிருப்பதை இருபத்தொன்றாம் நாளின் ஸுப்ஹு தொழுதுவிட்டு திரும்பும்போதுதான் நபித்தோழர்கள் காண்கிறார்கள். எனவே மழைபெய்தது முந்திய இரவில் அல்ல , அது இருபத்தொன்றாம் நாளின் வைகரையில் தான் என்பது உறுதியாகிவிடுகிறது.

இருபத்தொன்றாம் நாளின் ஸுப்ஹுவிற்கு முந்திய இரவை நபி(ஸல்) அவர்கள் இருபத்தொன்றாம் இரவாக கணக்கிடவில்லை என்பதையும் முன்னர் தெளிவாக விளங்கிக் கொண்டோம். மேலும் அல்லாஹ் திருமறையில் லைலத்தில் கத்ரை விவரிக்கும்போது அது விடியற்காலை(மத்லாயில் ஃபஜ்ர்) உதயமாகும்வரை நிலவியிருக்கும் என்றும் விவரிக்கின்றான்.

எனவே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்குக் கணவில் காட்டப்பட்ட , ஈரமான களிமண்னில் ஸஜ்தா செய்த ஸுப்ஹு நேரத்தின்போது நிலவியிருந்த லைலத்துல் கத்ர் நிச்சயமாக முந்திய இரவிற்குரியதாக இருக்கமுடியாது. மாறாக அன்றைய ஸுப்ஹிலிருந்து மறுநாளின் ஸுப்ஹு உதயமாகும்வரை நிலவியிருக்க வேண்டிய லைலத்துல் கத்ரினுடைய ஒரு முழு நாளாகவே இருக்கவேண்டும்.

ஆகவே லைலத்துல் கத்ர் என்பது ஓர் இரவு மட்டுமல்ல மாறாக ஒரு பகலையும் அதனைத் தொடர்ந்து வரும் இரவையும் கொண்ட ஒரு முழுமையான நாளாகத்தான் இருக்கவேண்டும். அது கடைசி பத்து நாட்களில் அமையும் ஒரு ஒற்றைப்படை நாளில் ஸுப்ஹிலிருந்து மறுநாளின் ஸுப்ஹ் உதயமாகும்வரை நிலவியிருக்கும். இதுவே நபிவழியாகும்.

''துல்ஹஜ் பத்தாம் நாளின் வைகறைக்கு முன்னர் ஒருவர் அரஃபாவின் எல்கையை அடைந்துவிட்டால் அவர் ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டார்.” என்ற நபியின் அறிவிப்பு திர்மிதியில் பதிவாகியுள்ளது. இதுவும் ஒருநாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான் என்பதற்கான ஒரு ஆதாரமாகும்.

இதனை மறுப்பவர்கள் எடுத்துவைக்கும் ஆதாரத்தையும் காண்போம். அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் திங்கள்கிழமை மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையில் மரணிக்கின்றார்கள். அன்றிரவே அவர்கள் நல்லடக்கமும் செய்யப்படுகின்றார்கள். இதனை அன்னையார் ஆயிஷா(ரழி) அவர்கள் தன் தந்தை செவ்வாய் இரவு மரணித்தார்கள் என்றும் அன்றிரவே அடக்கமும் செய்யப்பட்டு விட்டார்கள் என்றும் அறிவிக்கின்றார்கள்.

நபி(ஸல்) அவர்களைப்போல் திங்கள்கிழமையான அன்றே தானும் மரணிப்பேன் என்று தன்மகளிடம் கூறிய அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் தான்கூறியதுபோல் திங்களின் இரவிலேயே மரணித்து விடுகின்றார்கள். ஆனால் எவ்வாறு வியாழன் இரவை ஜும்மெராத் என்று அழைக்கும் சொல்வழக்கம் உள்ளதோ அதுபோலவே அந்த இரவையும் அன்னையார் அவர்கள் செவ்வாய் இரவு என்று அழைக்கிறார்கள்.

எனவே பிரகாசமாக சூரியன் உதயமாகும் கடல் எல்கையிலிருந்து வைகறையில் (பஜ்ரில்) ஒருநாள் துவங்க வேண்டும். மஸ்ஜித் அல் அக்ஸாவில் சூரியன் அஸ்தமிக்கும் (மஃரிபின்) போது பகலை முடித்து இரவில் நுழைய வேண்டும். பின்னர் தன் பயனத்தை தொடர்ந்து அந்த பஸிபிக் கடல் எல்கையில் இரவை முடித்து வைகறையில் மறுநாளில் நுழைய வேண்டும். இதுவே சரியான முறையாகும்.

ஆங்கில நாட்காட்டியின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலையை இறைவனின் திருவேதம் நமக்கு வகுத்தளிக்கின்றது. ஆங்கில நாட்காட்டிகள் பஸிபிக் கடல் வெளியில் நடுநிசியில் ஒருநாளைத் துவங்குகிறது அதன் நடுப்பகலை லன்டனில் கடந்து மறுபடியும் கடல்வெளியை அடைந்து அங்கே அந்த நாளை முடித்துக்கொண்டு மறுநாளைத் துவங்கிறது.

ஆனால் ஆங்கில நாட்காட்டிகள் தொகுக்கப்படுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறங்கிய இறைமறைக் குர்ஆன் இக்கருத்திற்கு முற்றலும் மாறாக பகலையும் இரவையும் உள்ளடக்கியுள்ள ஒரு நாளின் நடுப்பொழுது சூரிய அஸ்தமம் என்றும் அது இறைவன் நிர்ணயித்துள்ள பிரதான நிலநடுக் கோடான (Pசiஅந ஆநசனையைn) கஃபாவை சூரிய அஸ்தமத்தில் (மஃரிபில்) கடக்க வேண்டும் என்றும் உறுதி செய்கிறது. சூரியனின் சுழற்சியின் அடிப்படையில் மட்டுமே ஒருநாள் கணக்கிடப்பட வேண்டுமானால் இந்த அகிலத்தைப் படைத்த இறைவன் காட்டித்தரும் இந்த அழகிய வழிமுறையே அறிவுப்பூர்வமானதாக விளங்குகிறது.

இறைவனின் கட்டளையின்படியே முஸ்லிம்கள் முன்னோக்குவதற்கான கிப்லா, இறைவன் நிர்ணயித்துள்ள நிலநடுக் கோட்டின் வடக்கில் அமைந்துள்ள மஸ்ஜித் அல்அக்ஸா எனும் பைத்துல் முகத்தஸிலிருந்து நிலநடுக் கோட்டின் மையத்தில் அமைந்துள்ள பைத்துல்ஹராம் என்று அழைக்கப்படும் இறை இல்லமாகிய கஃபாவுக்கு மாற்றப்படுகின்றது.

ஆகவே , (நபியே !) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் , உம் முகத்தை (கிப்லா என்னும்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே திருப்பிக்கொள்ளும் : . . (நம்பிக்கையாளர்களே !) நீங்களும் எங்கிருந்தாலும் (கிப்லாவாகிய) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்பிக்கொள்ளுங்கள் : . . .

(2:144 - 150)

இறைஇல்லமாகிய கஃபா அல்லாஹ் நிர்ணயித்துள்ள பிரதான நிலநடுக் கோட்டின் நடுவில் அமைந்து இவ்வுலகின் மையமாக விளங்குகின்றது. அந்த இறைஇல்லத்தை அர்ரஹ்மானை நினைவுகூறும் தொழுகையாளிகள் யுகமுடிவின் வரையிலும் இவ்வுலகின் ஒவ்வொரு முனைகளிலிருந்தும் இடைவிடாது 24 மணி நேரமும் அதனை முன்னோக்கியவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள். தங்களின் 5 நேர கடமையான தொழுகையினை நிறைவேற்றும் போது கிழக்கிலிருந்தும் , மேற்கிலிருந்தும் , வடக்கிலிருந்தும் , தெற்கிலிருந்தும் கஃபாவை முன்னோக்கியவர்களாக அர்ரஹ்மானை வணங்கிக் கொண்டிருப்பார்கள். இது இந்த அகிலத்தைப் படைத்தவனின் மாபெரும் அத்தாட்சி அல்லவா !

PART II



நிலையானதும் , இறைவன் திட்டவட்டமாக தீர்மாணித்து மனித சமுதாயத்தின் கிப்லாவாக நிர்ணயித்துள்ள கஃபாவை மையமாகவைத்தே நாம் ஒருநாளைத் துவங்க வேண்டும். அந்த அடிப்படையில் ஒருநாளின் உதயம் மக்காவின் சராசரி நேரமாகிய (ஆயமமயா ஆநயn வுiஅந) ஆஆவுயின்படியே தீர்மாணிக்கப்பட வேண்டும். அது எவ்வாறு சாத்தியம் என்பதைக் காண்போம்.




பூமியின் ஒருபாகம் இரவிலிருந்தால் அதன் மறுபாகம் பகலில் இருக்கும்(படம் 2). உலகின் ஒரு எல்கையில் சூரியன் மறைகிறது என்றால் , அதன் மறுஎல்கையில் சூரியன் உதித்துக் கொண்டிருக்க வேண்டும். எனவே மக்காவில் சூரியன் மறையும் நேரத்தில் , உலகின் மறு எல்கையில் சூரியன் உதித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படியானால் ஒவ்வொரு நாளும் மக்காவில் சூரியன் அஸ்தமிக்கும் அந்த நேரத்தில் அதன் எதிர் முனையில் மறுநாள் உதயமாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இறைவன் விதித்துள்ள வரையறைகள்.

ஒரு நாளைத் துவங்குவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேசத் தேதிக்கோடு (INTERNATIONAL DATE LINE) என்பது கீழ்திசையில் மனிதனால் யூகிக்கப்பட்டுள்ள ஒரு அடையாளக் குறியீடுதான். அந்தத் தேதிக்கோட்டினை பொருத்தவரையில் அதனருகில் அமைந்துள்ள நாட்டினர்கள்கூட அதனைப் பேனுவதில்லை. அவர்கள் அவர்களுடைய அண்டை நாடுகள் அல்லது உறவு நாடுகளிடையிலான வியாபாரத் தொடர்புகளுக்கு ஏற்றார் போல் அவர்களுடைய நாட்களை துவங்கிக் கொள்கின்றனர்.

ஆனால் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து நிர்வகித்துக் கொண்டிருக்கும் ரப்பில் ஆலமீன் கஃபாவை மட்டுமே இவ்வுலகின் கிப்லாவாக நிர்ணயித்துத் தருகின்றான். எனவே ஒரு புதிய நாளின் உதயத்தை திருமறையின் வழிகாட்டுதலின்படி மக்காவில் சூரியன் மறையும் நேரத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்மாணிப்பதுதான் அறிவுப்பூர்வமான முடிவாகும்.

மக்காவை மையமாகவைத்து அதன் சூரிய அஸ்தமத்தின் அடிப்படையில் மட்டுமே ஒருநாளைத் துவங்கும் போதும் மேலும் பஸிபிக் கடல்வெளியின் நடுவில் உள்ள தீவுகள் ஒருநாளை அவர்களுடைய வசதிகளுக்கு ஏற்றார்போல் முன்னுக்குப் பின் துவங்கும் சூழ்நிலையிலும்; கடல்வெளியின் நடுவில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அமைந்துள்ள பகுதியில் வாழும் மக்களுக்கு கிப்லாவை முன்னோக்குவதில் அதாவது அவர்களுடைய கீழ்திசையையும் மேல்திசையையும் நிர்ணயிப்பதில் பிரச்சனைகள் ஏற்பட வேண்டும்.

இந்த பிரச்சனைக்கான தீர்வையும் அல்லாஹ் திருமறையின் (73:20)ஆம் வசனத்தில் பதிவு செய்துவிடுகிறான்.

'அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான். அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான். ஆகவே அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான்.'

(73:20)

ஒவ்வொரு நாளும் கஃபாவில் சூரியன் மறைந்து கொண்டிருக்கும் போது பஸிபிக் கடலின் நடுவில் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே தினமும் சூரியன் உதித்துக் கொண்டிருப்பதில்லை. ஏனெனில் சூரியனைச் சுற்றிவரும் பூமியின் பாதைகளையும், கோணங்களையும் பொருத்து, சில நாட்களுக்கு நீண்ட இரவுகளும், சில நாட்களுக்கு நீண்ட பகலும் ஏற்படுகின்றன. இது ஒருநாள் உதயமாகும் எல்கை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல், உலகின் மிகப்பெரும் கடலின் நடுவில் மிகப்பரந்த இடைவெளியில் சுமார் -134டிகிரி மேற்கிலிருந்து சுமார் -176டிகிரி மேற்குவரையில் சுமார் 42டிகிரி இடைவெளியில் மாறிமாறி வருகின்றது என்பதையே விளக்குகிறது.

எனவே கடல்வெளியின் நடுவில் அடையாளமிட்டு அங்கு ஓர் இடத்தில் தேதிக்கோட்டை யூகித்து அதனைச் செயல்முறைபடுத்துவது அறிவிப்பூர்வமாக அமையவில்லை. அதனை முறையாக செயல்படுத்தவும் நம்மால் முடியாது. எனவேதான் அல்லாஹ் அந்த மாறிமாறி சூரியன் உதித்துக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் உள்ளவர்களுக்கு மட்டும் வசனம் 73:20ல் விதிவிலக்கு வழங்குகிறான்.

மக்காவில் சூரியன் அஸ்தமிக்கும் ஒரு நீண்ட இரவைக் கொண்ட நாளின் போது வடஅமெரிக்காவின் மேற்கு எல்கையாகவும் தற்போதைய சர்வதேசத் தேதிக்கோட்டின் கடைசி தளங்களில் அமைந்துள்ள அலாஸ்கா என்னும் நிலப்பரப்புகளுக்கு அப்பால் உள்ள கடல்வெளியில் பஜ்ராக இருக்கும். எனவே மேற்குத் திசையின் எல்கையாக அலாஸ்காவை நிர்ணயித்துக் கொள்வதிலும் தவறு ஏதும் இல்லை.

எனவே வசனம் 73:20ல் இறைவன் வழங்கும் விதிவிலக்கின்படி அலாஸ்காவிற்கும் ஃபிஜியிற்கும் இடையில் அமைந்துள்ள தீவுகள் கிழக்கிலிருந்தோ அல்லது மேற்கிலிருந்தோ கஃபாவை முன்னோக்கிக் கொள்ளளாம். அதனால் அவர்களின் மீது எந்த தவறும் இல்லை.

கீழ்திசையில் கடல்வெளியின் நடுவில் மனிதன் யூகித்துள்ள சர்வதேசத் தேதிக்கோடு (INTERNATIONAL DATE LINE) நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஆனால் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டும் இறைவன் நிர்ணயித்துத் தந்துள்ள கிப்லா எனும் கஃபா இறைவனின் வல்லமையை பறைசாட்டும் மாபெரும் அத்தாட்சியாக அமைந்துள்ளது.

எனவே ஒவ்வொரு புதிய நாளின் உதயத்தையும் திருமறையின் வழிகாட்டுதலின்படி மக்காவில் சூரியன் மறையும் நேரத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்மாணிப்பதுதான் அறிவுப்பூர்வமான முடிவாகும்.

''நிச்சயமாக எவர்கள் இறையச்முடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடனும் எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கின்றான்.''

(16:128)

சதக்கல்லாஹுல் அழீம் !

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-