அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 


கோயில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தான் தேவதாசிகள் என்றழைக்கப்படும் தேவரடியார்கள். பக்தி இலக்கியம் கோலோச்சிய ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இவர்கள் சமூகத்தினரால் மரியாதையாகப் பார்க்கப்பட்டனர். காலப்போக்கில் அந்த மரபின் வழி வந்தவர்களுக்குப் போதிய அங்கீகாரமும் கவனிப்பும் இல்லாமல், தேவதாசிகள் என்பவர்கள் மிகக்கீழ்த்தரமாகச் சித்தரிக்கப்பட்டனர். மேலும் பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு அல்லது அரசர், செல்வந்தர் போன்றவர்கள் முன்பு நடனமாட சொல்லி அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகவும் பயன் படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் பெரிய எதிர்ப்பு இருந்தது. அதன் காரணமாக 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தது. கர்நாடக மாநிலம் தேவாநகர் மாவட்டம் உத்தங்கி மலை துர்கா கோவிலில் தேவதாசிகளாக பெண்களை நேர்ந்துவிடும் செயல் நடைபெறுகிறது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே கர்நாடக அரசு இந்த முறையை ஒழிக்கவும், மத்திய அரசு தேவதாசி முறையை ஒழிக்க ஒரு சட்டமும், வழி காட்டுதலும் இயற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் மதன் பி.லோகுர், யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, மிகப் பழமையான வழக்கமான தேவதாசி முறை இன்னும் தொடர்வது தேசிய அவமானம், இதனை உடனடியாக தடுத்து நிறுத்த மத்திய அரசும், கர்நாடக அரசும் நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதில் மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மத்திய அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், இறுதி கெடுவாக அடுத்த 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டதுடன். இந்த வழக்கை ஜனவரி 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-