அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்..!’ என்று ரஜினி சொல்வது சோஷியல் மீடியா வைரல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். யாரும் எதிர்பாரா சமயம் குபீரென கிளம்புகின்றன வைரல்கள். அதை யார் நினைத்தாலும் உருவாக்க முடியாது, பரபரப்பாக இருப்பதை அடக்கவும் முடியாது. அப்படி 2015-ல் தமிழர்கள் அதிகம் எதிர்கொண்ட வைரல்களில் ‘டாப்-50’ மட்டும் இங்கே...   
1. சென்னை வெள்ளம்

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்ற வார்த்தைகளுக்கு புது அர்த்தம் கொடுத்தது சென்னை வெள்ளம். சென்னை, கடலூர்  உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆர்வலர்கள், உலகெங்கிலுமிருந்து உதவிக்கரம் நீட்ட ஏதுவாயிருந்த சாதனம் சமூக வலைத்தலங்களே. அண்மையில், தரையில் மட்டுமின்றி, சமூக வலைத்தலங்களின் திரையிலும் நிரம்பி ஓடியது தமிழகப்  பெருமழை மற்றும் வெள்ளமே.


2. சாகித்ய அகாதமி விருது

எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி படுகொலையில்  தொடங்கி, எழுத்தாளர் சுதிந்திரா குல்கர்னி  மீது கருப்பு மை ஊற்றப்பட்ட விவகாரம் எனப் பல்வேறு  சம்பவங்களால்,  நாடெங்கும் சுமார் 30 க்கும் மேற்பட்ட  எழுத்தாளர்கள், அவர்களின் எழுத்தாற்றலைக் கவுரவிப்பதற்காக வழங்கப்பட்ட உயரிய விருதான சாகித்ய அகாதமி விருதுகளைத் திருப்பியளித்தனர்.

3. டெல்லி தேர்தல்

’காமன் மேன்’ எனப்படும் சாதாரண மனிதன் என்ற அடையாளத்தை எத்தனை பெரிய அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பதன் முன்னுதாரணம்தான், 2015-ம் ஆண்டின் டெல்லி தேர்தல் முடிவுகளில் முத்தாய்ப்பாய் வெளியானது.  அரசியல் சார்புகளைக் கடந்து, ஆம் ஆத்மி கட்சியின் தாக்கம் எல்லாக் குடிமக்களின் மீதும் படர்ந்து வெளிப்பட்டது சமூக வலைதளங்கள் மூலமே!

4. சல்மான் கான் விவகாரம்

’மான்’ விஷயத்திலேயே சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடிய ’கான்’, காரேற்றிக் கொன்ற விவகாரத்திலும் தப்பித்துவிட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆவணங்களை விட சட்டத்துறை வல்லுநர்களுக்குக் கொடுக்கப்படும் தீவனம்தான்  தீர்ப்பெழுதுகிறது என்று பல்வேறு பதிவர்கள் கொந்தளித்துள்ளனர்.

5. ஜெயலலிதா வழக்கு 
நீதிபதி மைக்கேல். டி. குன்ஹா ஊரைவிட்டே ஓடும்நிலை வந்தாலும் பரவாயில்லை என்று, நேர்ப்பட எழுதிய தீர்ப்புக்கு, எதிர்திசையில் அமைந்தது நீதிபதி குமாரசாமி கொடுத்த தீர்ப்பு. குமாரசாமி கணக்கில் ஏற்பட்ட சில சட்டக் குளறுபடிகள் பலவிதமாக விமர்சிக்கப்பட்டன. 
6. நேபாள நிலநடுக்கம்

2015-ம் ஆண்டில், தேசிய ஊடகங்கள்மீது விழுந்த முதல் சவுக்கடி, நேபாள் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எழுந்ததே ஆகும். தானம் கொடுத்த மின்விளக்கின் வெளிச்சத்தை மறைக்குமளவிற்கு தன் பெயரை அதில் எழுதிவைக்கும் சிலர் போலத்தான் இந்திய ஊடகங்கள் நடந்து கொண்டன என்பதே நேபாளிகளின் குற்றச்சாட்டு. அர்த்தமற்ற கேள்விகளையும், ஆடம்பர பேட்டிகளையும் ஒளிபரப்பும் நோக்குடன் இந்திய ஊடகங்கள் செயல்பட்டதாகக் கடிந்து கொண்ட நேபாளிகளின் தாக்கம், சமூகவலைத்தளங்களில் பரவி, #GoHomeIndianMedia என்ற ஹேஷ்டேக் மூலம் அநேகர் தங்கள் கருத்தைவெளிப்படுத்தினர்.

7. செம்மரக் கடத்தல் விவகாரம்

மரக் கடத்தல் மாஃபியா காங்கி ரெட்டி, டி.எஸ்.பி. தங்கவேல், தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் எனப் பல்வேறு புள்ளிகள் கைது செய்யப்பட்ட செம்மரக் கடத்தல் விவகாரம் சமூக வலைத்தளங்களில் சூடு பிடிக்கத் தொடங்கியது, 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டப் பின்புதான். செம்மரக் கடத்தல் மாஃபியாவையும், அதற்குத் துணை நிற்போரையும், சம்பந்தமில்லாமல் கொலை நடவடிக்கை எடுத்த போலீசாரையும் அநேகப் பதிவர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.

8.யாகூப் மேமன் வழக்கு 

 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட  யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட செய்தி பரவலாகப் பேசப்பட்டது. குறிப்பாக, இந்திய அரசாங்கத்தை அந்நியப்படுத்துவது போல், ஆங்கில பத்திரிக்கை ஒன்று வெளியிட்டிருந்த கட்டுரையின் தலைப்பு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

9.மிஸ்டர் துணிச்சல் சகாயம் 

கிரானைட் குவாரி தொடர்பான நரபலி வழக்கு விசாரணையில், முக்கிய ஆதாரங்களைக் காவல் காப்பதற்காக இரவு முழுவதும் சுடுகாட்டில் காத்துக்கிடந்து,  சகாயம் ஐ.ஏ.எஸ்  காட்டிய துணிச்சலும் உறுதியும் பரவலாக ஆதரிக்கப்பட்டன.  #standwithsahayam என்ற ஹேஷ்டேக்-ன் மூலம் அநேகப் பதிவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

10. கரை ஒதுங்கிய சிரியா சிறுவன்
சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் பிரச்னைகளின் பின்புலம் அறியாதவர்களைக் கூட சர்வதேச அளவில் அதிர்ச்சியிலும், ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியது அந்த நிழற்படம். ஐந்து வயது கூட ஆகாத அந்தக் குழந்தை இறந்து கரை ஒதுங்கியதைக் கண்டு கொதித்தவர்கள், கரையில் அடித்துச்செல்லப்பட்டது மனிதம் என்று பலவாறு தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர்.

11. அப்துல் கலாம் மரணம்

சாலையோரைத்தில் பூக்கடை வைத்திருப்பவர் முதல், சர்வதேச அணு விஞ்ஞானி வரை அனைவரையுமே கலங்க வைத்த ஒரு செய்தி, அப்துல் கலாமின் இழப்பு.

12. மீத்தேன் திட்ட எதிர்ப்பு

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உண்டாக்கிய தாக்கத்தால் இயற்கை வேளாண்மை மற்றும் மரபு சார்ந்த உணவுப் பழக்கத்துக்கு மக்களிடையே அமோக ஆதரவு எழுந்தது. தமிழக டெல்டா பகுதிகளை சீரழித்துவிடும் என மீத்தேன் வாயு திட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட, அதற்கு சமூக வலைத்தளங்களிலும் அபார வரவேற்பு எழுந்தது. 
 13. கூடங்குளம் சிக்கல் 

2015-க்கு முன்பாகவே இந்தப் பிரச்னை வெகுவாகப் பேசப்பட்டாலும், ஃபுகுஷிமா, செக்கஸ்லோவாக்கியா என சர்வதேச தர நிர்ணயங்களோடும், விபத்துக்களோடும் ஒப்பிடப்பட்டு, கூடங்குளம் விவாதிக்கப்பெற்றது 2015-ல் தான். 

14. வாட்ஸ் அப் யுவராஜ்

சினிமா வில்லன்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, வாட்ஸ்அப் மூலம் பேட்டி, வாக்குமூலம் என வலம் வந்தவர் யுவராஜ். போலீஸ் அதிகாரி விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கில் இவர் கைது செய்யப்பட்டது, ஆன்லைன்...ஆஃப்லைன் இரண்டிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. 

15. அடல்ட்ஸ் ஒன்லி படங்களுக்கு தடை

இந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் வறுக்கப்பட்ட ஒரு செய்தி என்றால் அது ஆபாச இணையத்தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்து, பின் ஒரே நாளில் அத் தடையை நீக்கிய விவகாரம்தான். சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்த அமைச்சரில் தொடங்கி, சன்னி லியோன் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுவரை ’நெட்டிஸன்’கள் இந்த விஷயத்தில் நின்று விளையாடினார்கள்.

16. மாட்டிறைச்சி மீதான தடை

மகாராஷ்டிர மாநிலத்தின்  மாட்டிறைச்சிக்கானத் தடை,  பலவாறாகச் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம், தாலி அறுக்கும் போராட்டம் என இவற்றின் தொடர்நிலையும் பரபரப்பானது. கூடவே உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் பசு மாட்டிறைச்சியை உண்டார் என இஸ்லாமிய முதியவர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவமும் ஏகத்திற்கு வைரலாகி பலதரப்பட்ட விமர்சனங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது.


17. சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள் மாநாடு, இந்த ஆண்டு சென்னையில் நடந்தது. அரசின் வணிகப் போக்கை மெச்சியே ஆக வேண்டும் என்று தொடங்கி, ஆங்கிலத்தில் அடுக்குமொழியில்  அம்மாவைப் புகழ்ந்து தள்ளிய பேச்சாளரின் பேச்சைக் கேட்டு, கடைசியில், ’மீம்ஸ்’ போட்டதுதான் மிச்சம்.

 
18. புலியோ புலி

புலி என்று சொன்னாலே விலங்கோ, அரசியலோ மட்டுமே நினைவுக்கு வந்துகொண்டிருந்த நமக்கு, புலி என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் ’குபீர்’ சிரிப்பை வர வைக்குமளவிற்கு அந்த வார்த்தையை வைத்து வலம் வந்தார் டி.ஆர். புலி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய ‘அட்ராக்ட் பண்ற புலி...’,  சமூக வலைத்தளங்களில் இன்னமும் சக்கைப் போடு போடுகிறது.

19. சாக்‌ஷி மஹராஜ்

’நாம் இருவர்... நமக்கு ஒருவர்’ என்ற தேவை இருக்கும் சூழலில், ‘ஹிந்து பெண்களெல்லாம் குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று பேட்டியளித்த சர்ச்சை சாமியார் சாக்‌ஷி மஹராஜ்,  இந்தாண்டின் தொடக்கத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

20. கட்டப்பாகாரூ எந்துக்கூ கொன்னாரூ?

இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்டப் படைப்பாக இவ்வாண்டு வெளிவந்த  பாகுபலி திரைப்படத்தின் க்ளைமேக்ஸில் அவர் வைத்திருந்த  ராஜவிசுவாசியான கட்டப்பாவே, இளவரசர் பாகுபலியைக் கொன்றுவிட்டார் என்ற அதிர்ச்சி திருப்புமுனைதான். ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாரு?’ என்று நெட்டிஸன்கள் ஒவ்வொருவரும் ஆளாளுக்கு ஒன்று சொல்லி அலற வைத்தனர்.
 21. அமீர் கானும் சகிப்புத்தன்மையும்

கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’ பிரச்னையிலேயே துளிர்விட்ட சகிப்புத்தன்மை விவகாரம்,  பெருமாள் முருகன், கல்புர்கி, சோனியா காந்தி என வளர்ந்து  இந்திய அளவிலான விஸ்வரூபத்தை அடைந்தது அமீர்கானின் மனைவி விடுத்த அறிக்கையில்தான். சகிப்புத்தன்மை என்ற வார்த்தைக்கே சகிப்புத்தன்மை போகுமளவிற்கு சகட்டுமேனிக்கு பொரிந்து தள்ளிவிட்டனர் நம் ஆட்கள். 

22. கூகுள் சுந்தர் பிச்சை

அண்மையில் தமிழகமே கொண்டாடிய செய்தி, தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனதுதான். ஆண்ட்ராய்டு பரிமாணங்கள், பொதுவாக இனிப்பு வகைகளின் பெயரிலேயே வழங்கப்படுகின்றன. லாலிபாப், கிட்கேட் எனத் தொடரும் இந்தப் பட்டியலில், இந்திய இனிப்பு வகை வருவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்ததுதான் தாமதம்; அவரைக் கொஞ்சிக் கொண்டாடிவிட்டார்கள். 
 23. நாஸ் நிறுவன வழக்கு

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக நாஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு,  இவ்வாண்டுதான் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பானது.  இயற்கைக்கு முரணான பாலியல் குற்றங்கள் எவை என்று, இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவு 377 பட்டியலிடுகிறது. அவற்றில் ஓரினச்சேர்க்கையும், தண்டனைக்குரிய குற்றமாக கண்டறியப்பட்டுள்ளது. இதை மாற்றக் கோரி, நாஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இது சமூக வலைத்தளங்களில் சரமாரியாக விவாதத்தைக் கிளப்பியது.

24. வண்ணக் குழப்பம்

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு ‘நெட்டிஸன்’கள் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டுப் பார்க்கும் அளவிற்கு கிளம்பிய சர்ச்சைதான், ஆடை வண்ணக்குழப்பம். ஒரு குறிப்பிட்ட ஆடை சிலரது கண்களுக்கு கருப்பும் நீலமுமாகவும், சிலரது கண்களுக்கு வெண்மையும் பொன்னிறமாகவும் தென்பட்டது. இது ட்விட்டரில் தொடங்கி, அத்தனை சமூக வலைத்தளங்களையும் ஒரு வாரத்திற்குக் கலக்கி எடுத்து, பின் காணாமல் போய்விட்டது.

25. ஹரஹரமஹாதேவக்கீ சாமியார்
பகிரங்கமாய் பலத்த எதிர்ப்பையும், ரகசியமாய் பலத்த வரவேற்பையும் பெற்ற ஒரு விஷயம்தான் வாட்ஸ்அப் மூலம் வாயிலேயே வயலின் வாசித்த குறுங்கதைகள். பிரபல பிரசங்கி ஒருவரின் குரலைப் போல் ’மிமிக்ரி’ செய்து, கெட்டவார்த்தைகள் மூலம் நகைச்சுவையாக பேசி, தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்ட வாட்ஸ் அப் சாமியார், வாசம் செய்யாத அலைபேசியே இல்லை என்று சொல்லுமளவிற்கு ஒரு ‘வைரல்’ வைரஸ்.

26. மந்திரி தந்திரி

’இந்த வாரமா, அடுத்த வாரமா?’ என்று தமிழக அமைச்சர்கள் அனைவரும் இருக்கை முனையில் அமர்ந்து நகங்கடிக்க வைத்த ஒரு படைப்பு, ஆனந்த விகடனில் வெளியான ’மந்திரி தந்திரி’. தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றிய கட்டுரைக்கு எதிராக, அவதூறு வழக்குத் தொடரப் போய், நீதிமன்றமே 'அவதூறு வழக்குகளில் உங்கள் மாநிலம் முன்னோடியாய் உள்ளது' என்று அவதூறு செய்யுமளவு வேடிக்கையான கதையில் போய் முடிந்தது.  

27. கிஸ் ஆஃப் லவ் 

பொது இடங்களில் முத்தமிடுவது ஆபாசமானதல்ல என்ற குறிக்கோளோடு களமிறங்கிப் போராடிய இயக்கம் ’கிஸ் ஆஃப் லவ்’. முத்தமிடுவது தவறல்ல என்பதை எடுத்துரைக்க, முத்தமிடுவதையே ஆயுதமாகக் கொண்டு இளைஞர்கள் போராடினார்கள். சமூக வலைத்தளங்களெங்கும், ‘கிளிகள் முத்தம் தருதோ... அதனால் சத்தம் வருதோ’ டைப் பதிவுகள்தான். இதற்கிடையே, ’நமக்கு யாரும் சிக்கலையே’ என்கிற ஆதங்க ’மீம்ஸ்’களும் என களைகட்டியது. ஆனால், வருட இறுதியில் இந்தப் போராட்டத்தின் முன்னோடியான, கேரளாக்காரர் ராஹுல் பசுபாலனும் அவர் மனைவியும் விபச்சார வழக்கில் சிக்கிக் கொண்டதுதான் திரைக்கதையில் பெரிய திருப்புமுனை.

28. சீமானும் முருகனும்

’கடவுள் இல்லையா?’ என்ற கேள்விக்கான பதிலைக் குழப்பியடிப்பதில் கமலஹாசன்தான் முன்னோடி. ஆனால் அவரைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு ஒரு நெத்தியடி அடித்தார் சீமான். ’நான் கடவுள் மறுப்பாளன்; ஆனால் முருகனைக் கும்பிடுவேன்; ஆனால் முருகனை நான் கடவுள் என்று பார்ப்பதில்லை ’ என்றார். சரவெடியைப்போல மீம்ஸ்கள் வெடித்துத் தள்ளிவிட்டன.

29. கோவன் கைது 
 ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ பாடலைப் பாடிய கோவனைக் கைது செய்ததன் மூலம்தான் இந்தப் பாட்டு இவ்வளவு பேரைச் சென்றடந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. பாடகர் கோவனின் கைது, கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதங்களை ஒருமித்தப் பார்வையாக வைக்கப் பயன்பட்டது. 

30. சோட்டா ராஜன் 
’டோங்ரி டு துபாய்’ என்ற புத்தகத்தைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும், ஒரு மும்பைக் கடத்தல் மன்னனின் பயணம் எப்படிப்பட்டது என்பது. ’சாமான்யர்களால் அவர்களை நெருங்கக் கூட முடியாது’ என்ற எண்ணம் முறியடிக்கப்படும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம்தான் தாவூத் இப்ராஹிமின் வலக்கையான சோட்டா ராஜன் கைது விவகாரம்.  

31. வோல்க்ஸ்வேகன் ஊழல்

ஒரே வாரத்தில் பங்குச் சந்தையில்,  25 பில்லியன் யூரோக்கள் சரிவடையும் வண்ணம் மிரட்டியது வோல்க்ஸ்வேகன் ஊழல். இதை அம்பலப்படுத்த முக்கியக் காரணமாய் இருந்தவர் ஒரு தமிழ் பேசும் இந்தியர் என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் என்பதால் சமூக வலைத்தளங்கள் அரவிந்த் திருவேங்கடத்தைக் கொண்டாடிவிட்டனர்.


32. என் உடல்... என் விருப்பம்!

நடிகை தீபிகா படுகோனே வெளியிட்ட காணொளிதான் ‘மை பாடி... மை சாய்ஸ்!’. இந்தக் காணொளியில்,  'பெண்கள் திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக்கொள்வதும், திருமணம் ஆன பின்பும் வேறொருவருடன் உறவு வைத்துக்கொள்வதும் அவரவர் விருப்பம்' என்று தீபிகா சொல்ல, நாட்கணக்கில் வைரல் தீனியானது அந்த விவாதம். 
33. நெட் நியூட்ராலிட்டி

இணையத்தில் ஜாம்பவான்களாக இருக்கும் பெரு நிறுவனங்கள், தங்கள் வலைத்தளங்களை மட்டும் இலவசமாக வழங்குமாறு இணையத்திட்டங்கள் வகுத்தளிக்கத் தொடங்கியுள்ளன. இது நடைமுறைப் படுத்தப்பட்டால் அப்பெருநிறுவனங்கள் வெளியிடுவதைத் தவிர வேறெந்த செய்தியையும் இணையத்தில் நம்மால் அணுக இயலாது. இது இணையச் சமநிலையின்மையை ஏற்படுத்தும். எனவே இதை எதிர்க்க வேண்டும் என்பதே ‘நெட் நியூட்ராலிட்டி’யின் வாதம். இதை அனைவரும் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் தங்கள் கருத்தைப் பதிவு செய்யத் தவறவில்லை. ’நெட் நியூட்ராலிட்டி தேவை’ என்று ஒரு புறம் பதிவிட்டுக்கொண்டே, ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ திட்டத்திற்குப் பரிந்துரைக்கவும் செய்கின்றனர் நம் நெட்டிஸன்கள். இவங்க ரொம்ப நல்லவங்க...! 


34. அடத் தள்ளுப்பா

மதராஸப்பட்டினம் படத்தில் ஹனீஃபா,  கேமராவைப் பார்த்தால் அலர்ட் ஆவது போல, நிஜத்தில் இந்தியப் பிரதமர் அலர்ட் அட்டேன்ஷனிலேயே இருந்தார். ஃபேஸ்புக் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற நம் பிரதமர், காமிராவைக் கண்டதும், மார்க்கையே தள்ளி நிற்க வைத்த காட்சி, நெட்டிஸன்கள் பாஷையில் சொன்னால் ‘ROFL’.35. மோடி - ஜூக்கர்பெர்க் சந்திப்பு 


’இப்படி ஒரு தங்கமகனைப் பெற்றதற்கு நீங்கள் பெருந்தவம் செய்திருக்க வேண்டும்’ என்று ஜூக்கர்பெர்க் பெற்றோரிடம் பேசியது தொடங்கி, ‘பாரத நாட்டின் தாய்மார்களின் ஆசீர்வாதம் நம் அனைவரையும் காக்கட்டும்’ என ஃபேஸ்புக் தலைமையகத்தையே ’ஃபீலிங் சென்டிமென்ட்டல்’ ஆக மாற்றிய நிகழ்வுதான் மோடி-ஜுக்கர்பெர்க் சந்திப்பு.

36. ஃபேஸ்புக்கில் வண்ணமடிப்போம்
‘புரொஃபைல் பிக்சர்’ எனப்படும் நிலை நிழற்படம் மாற்ற முன்பெல்லாம் ஒரு புகைப்படக்கார நண்பர் தேவைப்படுவார். இப்போதெல்லாம் இருண்ட நிலைப்படங்களுக்கு வண்ணம் பூசும் வேலையை ஃபேஸ்புக்கே செய்துவிடுகிறது. ஓரினச்சேர்க்கையாளர் ஆதரவு, பாரிஸ் தாக்குதல், மோடி சந்திப்பு எனப் பல்வேறு காரணங்களுக்கு, இந்த வண்ணப்பூச்சை வழங்கி வருகிறது ஃபேஸ்புக். ஆனால் நமது நெட்டிஸன்களில் பாதி பேர் பார்க்க நன்றாக இருக்கிறது என்பதற்காக மட்டுமே இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்கின்றனர் என்பதுதான் விந்தை.

37. செய்தி ‘அறை’ 
பிரபல செய்தித் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் ஜோசியம் குறித்து நிகழ்ந்த விவாதம் ஒன்றில், ஹிந்துமஹாசபா உறுப்பினரான ஒரு மூத்த குடிமகனை, பெண் ஜோசியரான தீபா ஷர்மா எழுந்து போய் அறைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.38. கமலின் வரிப்பணம்!  

சென்னை வெள்ளப் பாதிப்புகள் சமயம் ‘நான் கட்டிய வரிப்பணம் எங்கே?’ என கமல் ஆதங்கத்துடன் கேட்க, அதற்கு தமிழக அமைச்சர் ஓ.பி.எஸ் வரிந்துகட்டிக் கொண்டு பதில் கடிதம் எழுதினார். இது தொடர்பாக கமல் அலுவலகத்தில் கரண்ட் கட், சாலை மறிப்பு என ஏக களேபரம் எழுந்து அடங்கியது.

39. ஜெயலலிதா மீண்டும் முதல்வர் 

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பதவி இழந்ததில் துவங்கி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டது,  மேல்முறையீட்டில் விடுதலையாகி பின்னர் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டது, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றது வரை எப்போதும் வைரல் மோடிலேயே இருந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா!

40. மிஸ்டு கால் மட்டும் கொடுங்க

ஒரே நாளில் ஒரு லட்சம் பேரைக் கட்சியில் சேர்த்தோம் என்று சொல்லி, ’எர்வாமேட்டின் டேபிள்மேட்’ போல ’மிஸ் கால் மார்க்கெட்டிங்’ செய்த பாரதிய ஜனதா கட்சியின் நடவடிக்கை, அட்டகாசமான ’மீம் டெம்ப்ளேட்’ ஆகிவிட்டது.

41. ஜான் ஸ்னோ

HBO தொலைக்காட்சியின் முன்னணி தொடர்கதையான, Game of thrones-ல் ஒரு முக்கியக் கதாப்பாத்திரமான ’ஜான் ஸ்னோ’ கத்திக் குத்து வாங்கி வீழ்ந்தவுடன், அவருக்குக் கண்ணீர் அஞ்சலி பதாகைகளெல்லாம் தயாரித்துப் பட்டையைக் கிளப்பினார்கள்.

42. ரமணன் மீம்ஸ்

மழை, ரமணன், பள்ளி விடுமுறை என்பது ஒரு காலச் சுழற்சி நிகழ்வானதில், கிட்டதட்ட 21 நாள் விடுமுறை மோடில் திளைத்தார்கள் வடதமிழக மாணவர்கள். 

43. சர்வதேச யோகா தினம்

மோடி முதல் விஜயகாந்த் வரை யோக தினத்தன்று செம ஸ்கோரிங் அடித்தார்கள். குறிப்பாக நம் கேப்டனின் யோக முத்திரைகளும், முக பாவனைகளும், அள்ளாத ‘லைக்குகளே’ இல்லை எனலாம்.


 
44. பாண்டி முதல்வர்
டிஜிட்டல் புரட்சிக்கு முன்பிருந்தே பரபர பப்ளிசிட்டி கிளப்பும் பாண்டி முதல்வர், இந்த ஃப்ளெக்ஸ் காலகட்டத்தில் சும்மா இருப்பாரா? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பட்டையைக் கிளப்பினார்! 45. தற்படம்
’செல்ஃபி’ அதன் உச்சக்கட்ட பிரபலத்தை அடைந்தது. எத்தனை ரகங்கள்... எத்தனை விதங்கள்? காதலன், காதலி, பாம்பு, சிங்கம், விண்கலம், பிணம், என எதோடும், எவரோடும் எடுத்துவிடக் கூடிய எளிய நினைவகமாக மாறிப்போன, நம்மோடு ஊறிப்போன செல்ஃபி 2015 -ன் ஒரு முக்கியக் கொடை.

46. பீப் சாங்
விளையாட்டாய் செய்த ஒரு பதிவு இன்று தமிழகத்தையே இவ்வளவு ஆவேசமாக, ஆக்ரோஷமாக விவாதிக்க வைக்கும் என்று அனிருத்தும் சிம்புவும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

அதே நேரத்தில் சென்னை வெள்ளத்தின் பாதிப்பை உணர்ந்து, தெம்பும் நம்பிக்கையும் ஊட்டும் விதத்தில், தெலுங்கு இசையமைப்பாளர் ஜோஸ்யபாத்லா வெளியிட்ட ‘Let's Support Chennai’  பெருவாரியான வரவேற்பைப்பெற்றது.

47. தாலிபான் கல்லூரிகள்

சென்னையின் புகழ்பெற்ற கல்லூரிகள் இரண்டு , தங்கள் கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவியர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ற பெயரில் மிகவும் பிற்போக்குத் தனமான கட்டாயங்களை அடுக்கியிருந்தன. இதனைத் தொடர்ந்து, பண்பலைத் தொகுப்பாளர் பாலாஜி ‘தாலிபான் கல்லூரிகள்’ என்று ஒரு கேளொலி வெளியிட்டார். அந்தக் கேளொலி, நிர்வாகத்தினர் காதுகளை எட்டியதோ இல்லையோ, உலகம் முழுவதுமுள்ள தமிழ் மாணவர்களின் வரவேற்பைப் பெற்றது.48. கொடைக்கானல் ராப்

கொடைக்கானலிலுள்ள ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம், நச்சுக் கழிவுகளைக் கலந்து அம்மண்ணை மாசுபடுத்திக் கொண்டிருப்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க, நூதன வழியை நாடிய சோஃபியா அஷ்ரஃப், அதை, பிரபல ராப் பாடலான ’அனகோண்டா’ மெட்டிலேயே ஒரு ராப் விழிப்புணர்ச்சிப் பாடலாகப் பாடியிருந்தார்.

49. இப்படியும் ஒரு திருமணமா?

பிரபல வர்த்தகரான ரவிப்பிள்ளை,  தன் மகளின் திருமணத்தை சுமார் 55 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக நடத்தினார். அந்த வியக்க வைக்கும் திருமணக் காட்சிகளின் தொகுப்பு இதோ.50. ஸ்டிக்கர்

ஹெலிகாப்டருக்குக் கீழிருந்தபடியே வணக்கம் போட்டது, வேன் சக்கரத்திற்கு அடியில் விழுந்து கும்பிட்டது, ”காவிரியை வச்சிக்கோ, அம்மாவக் குடு” எனக் குழந்தை அழுவதைப்போல பதாகை ஒட்டியது, பாலங்களிலெல்லாம் எழுதி வைத்தது, நாஞ்சில் சம்பத்தின் காத்திருப்பு விளக்கம், தற்காலிகப் பதவியேற்பு மேடையில் ஒப்பாரி, நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர், கடைசியில் வாட்ஸ் அப் வாக்குமூலம் என மாண்புமிகுப் புரட்சித்தலைவி ஆணைக்கிணங்க நிகழ்த்தப்பட்ட சர்ச்சைகள் ஏராளம்.


-ச.அருண்
( மாணவப் பத்திரிக்கையாளர்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-