அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


புதுடெல்லி : ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள குடும்பத்துக்கு காஸ் மானியம் ரத்து செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் சென்னையில் மானிய விலையில் ரூ.406.76க்கு விற்கப்படுகிறது. டெல்லியில் இது ரூ.419.26 ஆகவும், மும்பையில் ரூ.459.09 ஆகவும் உள்ளது. மானியமற்ற விலையில் சென்னையில் ரூ.622.50, டெல்லி ரூ.608, கொல்கத்தா 637.50, மும்பை ரூ.620 ஆக உள்ளது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் சந்தை விலையில் வாங்க வேண்டும். இந்த மானியத்தை முன்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்தது. எனவே, எண்ணெய் நிறுவனங்கள் மானிய விலையிலேயே சிலிண்டர் சப்ளை செய்தன.
இருப்பினும், மத்திய அரசு மானியத்தை பெரும் சுமையாக கருதுகிறது. ஒரு பக்கம் வரி வருவாயை அதிகரிக்கும் முயற்சிகளையும், மானிய குறைப்பு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்குள் புதிதாக ஒரு கோடி பேரை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இதை தொடர்ந்து அந்தந்த மண்டலங்களில் வருவாய்த்துறையினர் அதிக வருவாய் உள்ளவர்களை கண்டறிந்து வரி வருவாய் பிரிவுக்குள் சேர்த்து வருகின்றனர். இன்னொரு புறம் மானியக்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

முதல் கட்டமாக, எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் மானியத்தை, மக்களுக்கு நேரடியாக வழங்க நேரடி காஸ் மானிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பஹல் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தில் காஸ் இணைப்பு வைத்திருப்போரின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி 54 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இதன்பிறகு கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் நேரடி மானிய திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் மானிய தொகை வங்கி கணக்கில் சேர்க்கப்படும். இதன் மூலம் பலன் உரியவருக்கு சென்று சேரும், முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்தாலும், மானியத்தை குறைக்கும் முக்கிய நோக்கமாகவே இது அமைந்திருந்தது.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆதார் எண் மூலம் சமையல் காஸ் மானியம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. பாஜ அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த திட்டம் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டதாக அல்லாமல், வங்கி கணக்கு மூலம் நேரடியாக மானியம் வழங்கும் வகையில் மாற்றி அமைத்தது. அனைவருக்கும் வங்கிக்கணக்கு அளிப்பதை இலக்காக கொண்டு பிரதமர் மக்கள் நிதி திட்டத்தின்கீழ் (பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா) தொடங்கப்பட்ட கணக்குகளை இதற்காக மத்திய அரசு பயன்படுத்திக்கொண்டது. இதை அடுத்து, தாங்களாகவே முன்வந்து மானியத்தை கைவிட வேண்டும் என்று அடுத்த கட்ட முயற்சியில் இறங்கியது மத்திய அரசு. பிரதமரே இந்த வேண்டுகோளை விடுத்தார். இதை ஏற்று சுமார் 57.5 லட்சம் வாடிக்கையாளர்கள் மானியத்தை தானாக முன்வந்து கைவிட்டுள்ளனர். மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்த இது சொற்பம்தான். இதனால் வருவாய் பிரிவை அடிப்படையாகக்கொண்டு மானியத்தை பறிக்க அடுத்த அதிரடியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த மாதத்தில் இது அமலாகிறது. இதன்மூலம் சுமார் 20 லட்சம் பேருக்கு மானியம் பறிபோகும் என்று தெரிகிறது. இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் தற்போது 16.35 கோடி பேர் சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ளனர். வங்கிக்கணக்கு மூலம் நேரடி மானியம் அளிக்கப்படும் பஹல் திட்டம் நடைமுறைப்படுத்தியதை தொடர்ந்து 14.78 கோடி வாடிக்கையாளர்களுக்கு மானியம் வங்கிக்கணக்கு மூலம் வழங்கப்படுகிறது. மானியம் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே சென்று சேர வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகக்கொண்டு செயல்படுத்தப்பட்டது. இதுமட்டுமின்றி, வசதி படைத்தவர்கள் சமையல் காஸ் மானியத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. பிரதமர் விடுத்த இந்த வேண்டுகோளை தொடர்ந்து, இதுவரை 57.5 லட்சம் பேர் தானாக முன்வந்து சமையல் காஸ் மானியத்தை கைவிட்டுள்ளனர். இவ்வாறு தானாக முன்வந்து சமையல் காஸ் மானியம் கைவிட்டவர்கள் மூலம் அரசுக்கு மீதமாகும் மானியம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு புதிய இணைப்புகள் வழங்க பயன்படுத்தப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் மண்ணெண்ணெய், நிலக்கரி, விறகு, சாணம் போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு காஸ் இணைப்பு வழங்குவதன் மூலம் அவர்கள் துன்பங்களில் இருந்து விடுபடுவதோடு, மேற்கண்ட பாரம்பரிய முறையிலான எரிபொருள் மூலம் உடல் நல பாதிப்பு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தானாக முன்வந்து மானியத்தை கைவிட்டுள்ள நிலையில், உயர் வருவாய் பிரிவினரும் மானியத்தை விட்டு சந்தை விலையில் சிலிண்டர் வாங்க வேண்டும். எனவே, கணவன் அல்லது மனைவியின் வருமானவரிக்கு உட்பட்ட ஆண்டு வருமானம் முந்தைய நிதியாண்டு கணக்கீட்டின்படி ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு சமையல் காஸ் மானியம் வழங்கப்பட மாட்டாது. சந்தை விலையில்தான் காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். இதன்படி வரும் ஜனவரி மாதத்தில் வாடிக்கையாளர்கள் தங்களாகவே ஆண்டு வருவாய் விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் எண்ணிக்கை மதிப்பீடு செய்து இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஆண்டு இந்த வருவாய் பிரிவில் சுமார் 20 லட்சம் பேர் இருக்கலாம் என தெரிகிறது. இவர்களுக்கும் காஸ் மானியம் ரத்து செய்யப்படுவதன் மூலம் அரசுக்கு மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் மானியச்சுமை மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமையை இறக்கியதால் அரசுக்கு செலவு மிச்சம்

முன்பு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மானியச்சுமையை குறைக்க வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டரை ஆண்டுக்கு 6 என குறைத்து கடந்த 2012 செப்டம்பரில் அறிவித்தது. இதன்பிறகு எழுந்த எதிர்ப்பு காரணமாக இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 9 எனவும் அதன்பிறகு 12 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 2014-15 நிதியாண்டில் மத்திய அரசுக்கு சமையல் எரிவாயு மானிய சுமை ரூ.40,551 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில் கடந்த செப்டம்பர் வரை சமையல் எரிவாயு மானியமாக ரூ.8,814 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதாவது பல லட்சம் பேருக்கு பறிக்கப்பட்ட மானியம், அரசுக்கு செலவை மிச்சப்படுத்தியுள்ளது.

யார் பெயரில் இருந்தாலும் கிடைக்காது

வீடுகளில் பெரும்பாலான காஸ் இணைப்புகள் மனைவி பெயரிலேயே இருப்பது வழக்கம். இவரது வருவாயை மட்டும் கணக்கிட்டால் மானியத்தை ரத்து செய்ய முடியாது. புதிய உத்தரவு மூலம் கணவனின் வருமானவரிக்கு உட்பட்ட ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தாலும் மனைவி பெயரில் உள்ள காஸ் இணைப்புக்கு மானியம் கிடைக்காது. இதுபோல் கணவன் பெயரில் காஸ் இணைப்பு இருந்து, மனைவியின் வருமான வரிக்கு உட்பட்ட ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தாலும், மானியம் வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-