அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சின்னாறு நீர்த்தேக்கம் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நிரம்பியது. மேலும் அரணாரை ஏரி நிரம்பியதை தொடர்ந்து தண்ணீரில் மலர் தூவி பூஜை செய்து கிராம மக்கள் கூட்டு வழிபாடு நடத்தினர்.22 ஏரிகள் நிரம்பின

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முழுவதும் சாரல் மழை பெய்தது. காலை 8 மணி வரை மொத்தம் 11 மி.மீ. மழை பதிவானது. லாடபுரம், வெங்கலம், குரும்பலூர், செஞ்சேரி, அகரம்சிகூர், கைப்பெரம்பலூர், பென்னக்கோணம், பூலாம்பாடி ஏரிகள், அரும்பாவூர் ஏரிகள் உள்பட 22 ஏரிகளும் முழுமையாக நிரம்பி உள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை பெரம்பலூர் அரணாரையில் உள்ள நீலியம்மன்செல்லியம்மன் ஏரி நிரம்பி வழிந்தது. 2004–ம் ஆண்டுக்கு பின்னர் இந்த ஏரி நிரம்பி வழிந்ததால், அரணாரை கிராம மக்கள் வெள்ளநீர் வழிந்தோடும் ஏரியின் பிரதான பகுதியில் தண்ணீரில் மலர் தூவி பூஜை செய்து இந்த ஆண்டு பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்திட கூட்டு வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தனலட்சுமிசீனிவாசன் குழுமத்தலைவர் சீனிவாசரெட்டியார், இயக்குனர் மணி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், நகர்மன்ற கவுன்சிலர் அரணாரைபேபிகாமராஜ் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.சின்னாறு நீர்த்தேக்கம்

மேலும் சுமார் 700 ஏக்கர் பரப்பில் அமைந்த சின்னாறு நீர்த்தேக்கம் 9 ஆயிரம் அடி (2,743 மீட்டர்) நீளம் கொண்டது. 21.2.1958–ல் அப்போதைய முதல்–அமைச்சர் காமராஜர் ஆட்சியின் போது கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தை அப்போதைய சென்னை மாகாண மராமத்து இலாகா அமைச்சர் கக்கன் திறந்து வைத்தார். இந்தகைய சின்னாறு நீர்த்தேக்கம் 10 ஆண்டுக்கு பிறகு நேற்று முழுமையாக நிரம்பி கடல் போல காட்சி அளிக்கிறது. நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளவான 72 மில்லியன் கனஅடி நீர் தேங்கி உள்ளது. வெள்ளநீர் கடை ஓடை வழியாக வழிந்தோடுகிறது.

பெரம்பலூர் மாவட்ட மேற்கு எல்லையான பச்சைமலைத்தொடரில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கல்லாறு, வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வெள்ளாற்றில் இருந்து கடலூர் மாவட்டம் தொழுதூர் மற்றும் திட்டக்குடி பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் வெள்ளாற்றின் வெல்லிங்டன் வாய்க்காலில் நேற்று 1,760 மில்லியன் கன அடிநீர் வெளியேற்றப்பட்டது. சிறுவாச்சூர் பகுதியில் உற்பத்தியாகும் மருதையாற்று மழைநீர் துறைமங்கலம் பெரிய ஏரிக்கு வந்தடைவதால் துறைமங்கலம் ஏரி 50 சதவீதத்திற்குமேல் நீர் நிரம்பி உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-