அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  


பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மழையளவு 2015ல் 1100 மில்லி மீட்டரைத் தாண்டியது. பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 908மிமீ ஆகும். இதில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்கால மழையாக 28மிமீ மழையும், மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3மாதங்களில் கோடைகால மழையாக 91மிமீ மழையும், ஜுன், ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 4மாதங்களில் தென்மேற்கு பருவமழையாக 314மிமீ மழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3மாதங்களில் வடகிழக்குப் பருவ மழையாக 475மிமீ மழையும் சேர்த்து 12மாதங்களில் ஆண்டு சராசரியாக 908மிமீ மழை பெய்கிறது. கடந்த 2005ல் இருந்து 10ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்ட மழையளவைக் கணக்கிடும்போது, 4ஆண்டுகளில் சராசரியைத் தாண்டியும், 6 ஆண்டுகளில் சராசரிக்கு குறைவாகவும் மழைபெய்துள்ளது. இதன்படி கடந்த 2005ம் ஆண்டில் 1312.8 மிமீ மழையும், 2008ம் ஆண்டில் 1014.04மிமீ மழையும், 2010ம் ஆண்டில் 1097மிமீ மழையும், 2011ம் ஆண்டில் 1072.2மிமீ மழையும் என ஆயிரம் மில்லிமீட்டரை கடந்து மழைபெய்துள்ளது. அதேபோல, 2006ம் ஆண்டு 749.74மிமீ மழையும், 2007ம்ஆண்டு 887.49 மிமீ மழையும், 2009ம்ஆண்டு 766.16மிமீ மழையும், 2012ம் ஆண்டு மிகக்குறைவாக 608.78மிமீ மழையும், 2013ம்ஆண்டு 815.08மிமீ மழையும், கடந்த 2014ம்ஆண்டு 872.56மிமீ மழையும் பெய்துள்ளது.

பொதுவாக பெரம்பலூர் மாவட்டத்தில் மாதா மாதம் எனக்கணக்கிட்டால் ஜனவரி 16மிமீ, பிப்ரவரி 12மிமீ, மார்ச் 12மிமீ, ஏப்ரல் 24மிமீ, மே 55மிமீ, ஜுன் 42மிமீ, ஜுலை 48மிமீ, ஆகஸ்டு 95மிமீ, செப்டம்பர் 129மிமீ, அக்டோபர் 172மிமீ, நவம்பர் 223மிமீ, டிசம்பர் 80மிமீ என 908மிமீ மழைபெய்ய வேண்டும். நடப்பாண்டு குளிர்கால மழையாக 42.40மிமீ மழையும், கோடைகால மழையாக 222.56மிமீ மழையும், தென்மேற்குப் பருவமழையாக 316.16மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இதில் தென்மேற்குப் பருவமழை அக்டோபர் மாதத்திலும் நீட்டித்து கூடுதலாக 138.56மிமீ மழை பதிவானது. அக்டோபர் 28ம்தேதிக்குப் பிறகு தொடங்கிய வடகிழக்குப் பருவமழையின்போது வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக அளவில் அதிகமாக கொட்டித்தீர்த்த மழை பெரம்பலூர் மாவட்டத்தையும் விட்டுவைக்க வில்லை.

இதில் குறிப்பாக கடந்த மாதம் 9ம்தேதி மிகவும் அதிகப்பட்சமாக 292மிமீ மழை யும், பிறகு 14ம்தேதிமுதல் கனமழையும் பெய்யத் தொடங்கியது. 23ம்தேதி நாள்முழுவதும் 10மணிநேரத்திற்கு 226மிமீ கனமழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக ஆண்டு சராசரியைத்தாண்டி மழைஅதிகப்படியாகப் பதிவாகியுள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்ட அளவில் ஜனவரி 1ம்தேதி முதல் டிசம்பர் 20ம்தேதிவரை 1,109.34 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் இதேநாள் வரை 869.76மிமீ மழைதான் பதிவானது. இந்நிலையில் 2005ம் ஆண்டுக்குப்பிறகு 10ஆண்டுகள் கழித்து, 1,100மில்லி மீட்டருக்கு அதிகமாக தற்போது மழைபெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஆண்டு சராசரியைக் காட்டிலும் 200மிமீ அதிகமாகும்.இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மிகஅதிகமாக வேப்பந்தட்டை பகுதியில் 1,261 மிமீ மழையும், மிகக்குறைவாக பாடாலூர் பகுதியில் 862மிமீ மழையும் பதிவாகியுள் ளது. பெரம்பலூரில் 1,247மிமீ, தழுதாழையில் 1,121, செட்டிக்குளத்தில் 1,055.20மிமீ மழை பதிவாகியுள்ளது.

வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு

இந்தமழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 73ஏரிகளில் 45ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிந்துள்ளன. 5ஏரிகள் 75சதவீதத்திற்கு மேல் நிரம்பியிருந்தன. பச்சைமலைப் பகுதிகளில் உற்பத்தி யாகும் கோரையாறு, கோனேரியாறு, கல்லாறு, காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மயிலூற்றுஅருவி, கோரையாறுஅருவி, எட்டெருமைப்பாழி அருவி, இரட்டைப் புறா அருவி ஆகியவற்றில் தண்ணீர் கொட்டிவருகிறது. கனமழை காரணமாக புதிதாகக் கட்டப்பட்டு இன்னும் திறப்புவிழா காணாத விசுவக்குடி அணையில் 23அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கியது. வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. மேலும் ஆயிரக்கணக்கான கிணறுகள் தரைமட்டத்திற்கு நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆதாரமான மக்காச்சோளம், பருத்தி, மரவள்ளி, சின்னவெங்காயப் பயிர்கள், பாக்கு, வாழைமரங்கள் கோடிக்கணக்கில் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-