அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 திருநெல்வேலி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் ஆசியராக பணி செய்தவர் சதீஷ். கல்லூரிப் பேருந்தில் வரும் மாணவர்கள் குடித்துவிட்டு பேருந்தில் ரகளை செய்ய, பேருந்தின் ஒட்டுநர் சுதாகர், ஆசிரியர் சதீஷிடம் முறையிட்டிருக்கிறார். சதீஷ், மாணவர்களை அழைத்துக் கண்டித்து ‘பெற்றோரிடம் சொல்லிவிடுவேன்’ என எச்சரிக்க... மாணவர்கள் அவரைத் தாக்க முயற்சித்துள்ளனர். சுதாகர் தடுத்துள்ளார். அடுத்த நாள் ஒரு காரில் சுதாகர் வீட்டுக்கு வந்த மாணவர்கள், அவரையும், அவரது மனைவி செல்வியையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இருவரும் மருத்துவமனையில் சேரும் அளவுக்கு கடுமையான அடி.

அடுத்து ஆசிரியர் சதீஷ் வீட்டுக்குச் சென்ற மாணவர்கள் அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து சதீஷை கடுமையாக அடித்து உதைத்தவர்கள், தங்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்திருக்கிறார்கள். சதீஷைத் தேடி வந்த அவரது தம்பி அருணையும் அடித்து உதைத்து அவரையும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளனர். மனம் நொந்து போன சதீஷ் ‘போலீஸில் புகார் செய்யலாம்’ எனச் சொல்ல... வீட்டில் உள்ளவர்கள் வேண்டாம் எனத் தடுக்க... அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் சதீஷ். தற்கொலைக்கு தூண்டியதாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனிலும் வந்துவிட்டார்கள்.

****பல ஊர்களில் பள்ளிச் சீருடையுடன் எந்தத் தயக்கமும் இல்லாமல், டாஸ்மாக் வாசல்களில் பாட்டிலும் கையுமாக நிற்கின்றனர். போதையின் உச்சத்தில் மயங்கி, சரிந்து வீழ்ந்துகிடக்கிறார்கள்...

இது குறித்து 'ஆனந்த விகடன்' இதழில் வெளிவந்த 'குடி குடியை கெடுக்கும்' தொடரின் கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்க...

****

‘‘ஒழுங்கா வேலைக்குப் போனா டெய்லி 350 ரூபாய் கிடைக்கும். ஆனா இந்தாளு ரெண்டு நாளைக்குப் போறது; அந்தக் காசை வெச்சு நாலு நாளைக்குக் குடிக்கிறது. இதே கதைதான். வாரக் கடைசில, சனிக்கிழமையன்னிக்கு நம்ம கையில 500 ருபாய் கொடுப்பார். ஞாயிற்துக்கிழமை விடியக்காலையில ‘நான் குடுத்த காசுல 100 ரூபாய் குடு’ன்னு சண்டைப் போட்டு வாங்கிட்டுப் போயி குடிச்சுட்டு வருவார். அப்புறம் 11 மணிக்கா இன்னொரு 100 ரூபாய் கேட்பார். இதுபோக பகல் முழுக்க அப்பப்போ 10 ரூபாய்க்கு பீடி வாங்கிக் கொடுத்துட்டே இருக்கனும். தூங்கி எழுந்திரிச்சு நைட் 100 ரூபாய் கேட்பார். மறுநாள் காலையில மறுபடியும் 100 ரூபாய் கேட்பார். இப்படி குடுக்குற பணத்தை ஒரே நாள்ல பிட்டு, பிட்டா வாங்கிக் குடிச்சுத் தீர்த்துடுவாரு. எங்க வீட்டுல இதுதான் பல வருஷ நிலைமை. என்னவெல்லாமோ செஞ்சுப் பார்த்துட்டோம். ஒண்ணும் திருத்த முடியலை. இப்பவெல்லாம் ‘மூதேவி, குடிச்சுட்டு வந்து நம்மள நிம்மதியா இருக்க விட்டா போதும்’னு ஆயிடுச்சு.’’ என்கிறார் ஜெயந்தி.

****போதை தந்த கிளர்ச்சியில் பெரும் சத்தத்துடன் வண்டியை ஓட்டிக்கொண்டு ஒரத்தநாடு சாலையில் சென்றார்கள். சாலை ஒரு வளைவில் திரும்ப, இவர்களும் திரும்பினார்கள். எதிரே ஒரு லாரி. கண் இமைக்கும் நேரத்தில் மூன்று பேரும் லாரியில் மோதித் தூக்கி எறியப்பட...

இது குறித்து 'ஆனந்த விகடன்' இதழில் வெளிவந்த 'குடி குடியை கெடுக்கும்' தொடரின் கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்க...

****

ஒரு பெண், ஒரு டாஸ்மாக் கடை இருக்கும் இடத்தை கடந்து செல்வதற்குள் எத்தனை பதற்றம் அடைய வேண்டியிருக்கிறது என்பதை பெண்கள் மிக நன்றாக அறிவார்கள். ஒரு குப்பை லாரி நமக்கு முன்பாக வந்து நின்றால் எப்படி மூக்கைப் பொத்திக்கொண்டு அவசர அவசரமாக கடந்து செல்வோமோ, அப்படி மனதை இழுத்துப் பிடித்துக்கொண்டு பதற்றத்துடன் கடக்கிறார்கள். எந்த நிமிடமும் தன்னை நோக்கி ஓர் ஆபாச சொல் பாயலாம். எந்த நேரமும் தன்னைக் குறிவைத்து ஓர் இரட்டை அர்த்த பாடல் ஒலிக்கலாம். இரையைச் சுற்றி மொய்க்கும் மீன்களை போல, தன் உடலை மொய்க்கும் கண்களை என்ன செய்ய முடியும்? பயந்து, ஒதுங்கி, வேகவேகமாக கடக்கிறார்கள்.

****நிலம், தலித்களுக்குச் சொந்தம் இல்லாத நிலையில், அன்றாடம் உழைத்துப் பிழைக்கவேண்டிய வறிய நிலையில் இருக்கின்றனர். அப்படி ஒவ்வொரு நாளும் உடல்நோக உழைத்து, கொண்டுவரும் பணத்தை டாஸ்மாக் கடை வழிப்பறி செய்துகொள்கிறது.

இது குறித்து 'ஆனந்த விகடன்' இதழில் வெளிவந்த 'குடி குடியை கெடுக்கும்' தொடரின் கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்க...

****

இது அனுப்பர்பாளையம் முனுசாமியின் கதை. நெடுநெடுவென ஆறடி உயரம் இருக்கிறார். ஆனால், நடந்து வரும்போதே உடல் பாகங்கள் நடுங்குகின்றன. கைகள் தடுமாறுகின்றன. உடல் எங்கும் கட்டி, கட்டியாக புண்கள். கண் பார்வை கிட்டத்தட்ட இல்லை. சத்தம் வரும் திசையை நோக்கி உத்தேசமாக பார்க்கிறார்.

‘‘பாத்திர வேலைதானுங்க பார்த்தேன். பத்து, பதினஞ்சு வருஷமா விடாம குடி. வாங்குற காசுல முக்காவாசியை குடிச்சே அழிச்சிருவேன். இப்போ ரெண்டு, மூணு வருஷமா உடம்பு சுத்தமா முடியாமப் போச்சு. உடம்பு பூரா புண். நரம்பு நோய்னு சொல்றாங்க. கை, கால் எல்லாம் அப்படியே இழுத்துக்கிட்டு நடுங்குது. மருந்து, மாத்திரைக்கு ஒண்ணும் கேக்க மாட்டேங்குது. கண் பார்வை வேற போச்சுங்க. இப்போ நீங்க நிக்கிறது, இருட்டா ஏதோ ஒரு உருவமாட்டம் தெரியுது, அவ்வளவுதான்.

மொத்தம் மூணு பிள்ளைங்க. மூத்தப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. அடுத்தது ஒரு பொண்ணு, ஒரு பையன். ரெண்டு பேருக்கும் காது கேக்காது; வாய் பேச வராது. அவங்க ரெண்டு பேரும் பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போறாங்க. அந்தக் காசுலதான் குடும்பம் ஓடுதுங்க. ஊமைப் பிள்ளைங்களை வேலைக்கு அனுப்பி கஞ்சி குடிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாயிட்டமேன்னு ஒவ்வொரு நாளும் வேதனையா இருக்குதுங்க. செத்துப் போகனும்னா, எழுந்திருச்சிப் போயி விஷம் வாங்கக் கூட கையில காசு இல்லைங்க... வழி பார்த்துப் போறதுக்கு கண்ணும் தெரியலைங்க”

****கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே இருக்கிறது இந்தக் கிராமம். மொத்தம் 450 குடும்பங்கள். இதில் 105 பேர் விதவைப் பெண்கள். அத்தனை கணவர்களும் மாண்டுபோக நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கும் ஒரே காரணம், மது.

இது குறித்து 'ஆனந்த விகடன்' இதழில் வெளிவந்த 'குடி குடியை கெடுக்கும்' தொடரின் கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்க...

****

இப்போது மாலை 6 மணி என்று வைத்துக்கொள்வோம். மாநிலம் முழுக்க இருக்கும் 6,000-க்கும் அதிகமான டாஸ்மாக் பார்களில் அமர்ந்து குறைந்தபட்சம் 50 லட்சம் பேராவது இந்நேரத்தில் குடித்துக் கொண்டிருப்பார்கள். அதாவது சமூகத்தின் உற்பத்தியில் பங்கேற்க வேண்டிய 50 லட்சம் மனித ஆற்றல்கள், சமூகத்தின் அழிவில் பங்கேற்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் குடிப்பதற்காக 2 மணி நேரம் செலவிடுகின்றனர் எனக் கொள்வோம். 50 லட்சம் பேர் x 2 மணி நேரம் = 1 லட்சம் மணி நேரம். இத்தனை பிரமாண்டமான நேரத்தை; அதற்கான மனித ஆற்றலை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால் தமிழ்நாட்டில் எஞ்சியிருக்கும் 18,000 ஏரி, குளங்களையும் ஒரே மாதத்தில் தூர் வாரி முடித்துவிடலாம். மதுரை நகரில் குடிப்பவர்கள் தங்களின் ஒரு நாள் குடிக்கும் நேரத்தை பொதுவேலைக்காக செலவிட்டால் வைகையின் குறுக்கே ஒரு பாலத்தையே கட்டிவிடலாம். பல மகத்தான அதிசயங்களை நிகழ்த்தவல்ல கோடிக்கணக்கான இளைஞர் கூட்டம் நம் கண் முன்னே குடித்து, குடித்தே வீழ்கிறது.

- இவை தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது உண்டாக்கும் கொடுமைகளின் மிகச் சில உதாரணங்கள். மதுவைக் குடித்து மொத்த தமிழினமும் அழிந்து கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில், ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு குண்டுகள் வீசி யுத்தம் நடத்தியது என்றால், தமிழக அரசு, தமிழ் மக்கள் மீது மதுப் பாட்டிலை வீசி கொன்றொழிக்கிறது. ‘முதல் நாள் முதல் கையெழுத்து... மதுவிலக்கு’ என்று தமிழ்நாட்டில் அன்புமணி ராமதாஸ் சொல்லிக் கொண்டிருப்பதை, பிஹாரில் நிதீஷ்குமார் அறிவித்து விட்டார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பீஹாரில் மதுவிலக்கு என்று அறிவித்திருக்கிறார். பிஹார் என்ற மாநிலம் இந்தியாவில் எது, எதற்கோ எள்ளி நகையாடப்படுகிறது. இந்த விஷயத்தில் பிஹாரை நாம் பாராட்ட வேண்டும். பிஹாரில் இருந்து தமிழ்நாடு கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான்!

- பாரதிதம்பி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-